20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம் தரும் வேஸ்ட் டீகம்போஸ்ர் படித்து படித்தோம்.. அதை பற்றிய மேலும் சில தகவல்கள், கேள்வி பதில்கள்..
“பஞ்சகவ்யாவுடன் பயன்படுத்தலாமா?”
வேஸ்ட் டீகம்போஸர் குறித்து விவசாயிகள் எழுப்பும் பொதுவான சில சந்தேகங்களுக்கு முனைவர் சந்திரபிரபா அளித்த பதில்கள் இங்கே…
“பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் போன்றவற்றைத் தெளிக்கும் வயல்களில் வேஸ்ட் டீகம்போஸரைப் பயன்படுத்தலாமா?”
“தாராளமாகப் பயன்படுத்தலாம். பயிர்களின்மீது ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகவ்யா தெளித்திருந்தால் ஒருநாள் கழித்து இக்கரைசலைத் தெளிக்கலாம்.”
“வேஸ்ட் டீகம்போஸர் தெளிக்கப்பட்ட இலைதழைகளைக் கால்நடைகள் சாப்பிட்டால் பாதிப்பு வருமா?”
“இது மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுப்பொருள் அல்ல. அதனால், இதைச் சாப்பிட்டால் கால்நடைகளுக்கு எந்த பிரச்னையும் வராது. இது காய்ந்த குச்சிகள், செடிகள் ஆகியவற்றையே மட்க வைக்கும். உயிருள்ள தாவரங்களை ஒன்றும் செய்யாது. 7 நாள்களுக்குப் பிறகு தயாராகும் கரைசல் நல்ல வாசனையுடையதாக இருக்கும். இதைப் பயிர்களுக்குத் தெளிக்கும்போது ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் முகமூடி, கையுறை அணிந்து தெளிக்கலாம். மற்றபடி இதுவும் மற்ற இயற்கை இடுபொருள்கள் போலத்தான் இருக்கும்.”
“இந்தக் கரைசலை எத்தனை நாள்களுக்கு வைத்திருந்துப் பயன்படுத்தலாம்?”
“கரைசல் தயார் செய்ய 7 நாள்கள் ஆகும். அதிலிருந்து ஒரு மாதம் வரை வைத்திருந்துப் பயன்படுத்தலாம். ஒரு மாதத்துக்கு மேல் வைத்துப் பயன்படுத்திப் பார்த்தபோதும், எதிர்மறையான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.”
“ரசாயன நிலங்களில் பயன்படுத்தலாமா?”
“இது நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் அடங்கிய கரைசல். இதைப் பயிர்களின்மீது தெளித்துவிட்டு, பிறகு பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் கொடுக்கும்போது இதன் முழுப்பலன் பயிர்களுக்குக் கிடைக்காது.”
“இயற்கை விவசாயச் சான்றிதழ் கிடைக்கும்!”
பெங்களூருவில் உள்ள மண்டல இயற்கை விவசாய மையத்தின் உதவி இயக்குநர் முனைவர் வி.ஒய்.தேவ்கரே தங்கள் மையத்தின் பணிகள் குறித்துச் சில விஷயங்களைச் சொன்னார். “1998-ம் ஆண்டு, ‘மண்டல உயிர் உரங்கள் வளர்ச்சி மையம்’ என்ற பெயரில் இம்மையம் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டில், மண்டல இயற்கை விவசாய மையமாக மாற்றப்பட்டது.
தென்னிந்தியாவில் இயற்கை விவசாயத்துகென்று செயல்படும் மத்திய அரசின் அமைப்பு இது. இதன் தலைமையகம் உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் அமைந்துள்ளது. பன்ச்குலா (ஹரியானா), புவனேஸ்வர்(ஒரிஸ்ஸா), நாக்பூர் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட இடங்களிலும் செயல்படுகிறது. இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது, அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்வது, இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், எங்கள் மையத்தின் கீழ் வருகின்றன.
தென்னிந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் இயற்கை விவசாயப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். அதோடு ‘பிஜிஎஸ் இந்தியா’ என்ற பெயரில் இயற்கை விவசாயச் சான்றிதழையும் வழங்கி வருகிறோம். இது சம்பந்தமான விவரங்கள் தேவைப்படுவோர் எங்கள் மையத்தை அணுகலாம்” என்றார்
எப்படித் தயாரிப்பது?
கரைசல் தயாரிப்பு:
200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக் கொள்ளவும். அதில் 200 லிட்டர் தண்ணீரை ஊற்றி 2 கிலோ வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, பாட்டிலில் உள்ள வேஸ்ட் டீகம்போஸரைச் சேர்த்துத் தினமும் இரண்டுமுறை சுத்தமான குச்சியால் கலக்கி வர வேண்டும். 7 நாள்களில் கரைசல் தயாராகிவிடும்.
கரைசலை எப்போதும் நிழற்பாங்கான இடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து 20 லிட்டர் கரைசலை எடுத்து 180 லிட்டர் தண்ணீர், 2 கிலோ வெல்லம் சேர்த்து அடுத்த 200 லிட்டர் கரைசலைத் தயாரித்துக் கொள்ளலாம். இப்படி வாழ்நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
மட்க வைத்தல்:
இலை தழைகள், சாணக் கழிவுகளைப் பரப்பி அதன்மீது வேஸ்ட் டீகம்போஸர் கரைசலைத் தெளித்து ஈரமாக்க வேண்டும். அப்படியே அடுக்கடுக்காகப் போட்டு ஒவ்வொரு அடுக்கின்மீது இக்கரைசலைத் தெளித்துவிட்டால், ஒரு மாதத்தில் நன்கு மட்கிவிடும்.
இந்த அடுக்குகளில் எப்போதும் 60 சதவிகித ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இந்த மட்குகளை வயலில் அப்படியே தூவிவிடலாம்.
பயிர்களுக்கு கொடுக்கும் அளவு:
இலைவழி ஊட்டமாகப் பயிருக்குக் கொடுக்கும்போது காய்கறிப் பயிர்களுக்கு ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 6 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் டீகம்போஸர் கரைசல் சேர்த்து 3 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.
பழப்பயிர்களுக்கு 4 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் டீகம்போஸர் கரைசல் சேர்த்து 7 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். டீகம்போஸர் கரைசலின் அளவுக்குச் சரி பங்கு தண்ணீர் சேர்த்து மற்ற அனைத்துப் பயிர்களின் மீதும் வாரம் ஒருமுறை தெளிக்கலாம்.
மண்ணில் இடுபொருளாகக் கொடுக்கும்போது… ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலைப் பாசன நீர் வழியாகக் கொடுக்கலாம். அறுவடை முடிந்து, வயல்களில் எஞ்சியுள்ள தாவரக் கழிவுகளை மட்க வைக்க ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலைத் தெளித்தால் போதுமானது.
விதைநேர்த்தி:இக்கரைசலை விதைநேர்த்திக்கும் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன் விதைகளின்மீது டீகம்போஸர் கரைசலைத் தெளித்துப் புரட்டிவிட்டு, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.
தகவல் சொல்லிய தர்மபுரி விவசாயி!
‘வேஸ்ட் டீகம்போஸர்’ குறித்து, ‘பசுமை விகடன்’ கவனத்துக்குக் கொண்டுவந்தவர், கொடுமுடி டாக்டர் நடராஜன். அவரிடம் பேசினோம்.
“தினமும் பஞ்சகவ்யா, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி, பல விவசாயிகள் தொலைபேசியில் பேசுவது வழக்கம். அப்படித்தான், அண்மையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஒருவர் பேசினார். அப்போது, ‘பெங்களூருவில் உள்ள மண்டல இயற்கை விவசாய மையத்தில், வேஸ்ட் டீகம்போஸர் என்ற இயற்கை திரவத்தை ரூ.20க்கு விற்பனை செய்துவருகிறார்கள். ஒருமுறை வாங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் இயற்கை உரக் கரைசல் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
இதை வடமாநிலங்களிலும், கர்நாடகா, ஆந்திரா… போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள்’ என்றார்.
நாட்டு பசுவின் சாணம் மூலம் இந்த இயற்கை இடுபொருள் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டில் உள்ள கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதால், பசுமை விகடன் ஆசிரியர் குழுவினரிடம் தகவல் தெரிவித்தேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
எங்கு, எப்படி வாங்குவது?
வேஸ்ட் டீகம்போஸர் ஒரு பாட்டிலின் விலை 20 ரூபாய். தேவைப்படும் பாட்டில்களின் அளவுக்கான தொகைக்கு ‘PAO, DAC Chennai’ என்ற பெயருக்கு வரைவோலை (டி.டி) எடுக்க வேண்டும்.
பிறகு உங்களுடைய பெயர், முகவரியைக் குறிப்பிட்டு, பெங்களூருவில் உள்ள மையத்தின் முகவரிக்கு வரைவோலையை அனுப்பி வைத்தால், பாட்டில்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். மணியார்டர் மூலமாகவும் பணம் அனுப்பலாம். அஞ்சல் சேவைக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. இதைத்தவிர நேரடியாகவும் இம்மையத்துக்கு வந்து பாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம்.
Deputy Director,
Regional Centre of Organic Farming,
Kannamangala Cross,
Whitefield-Hosekote Road,
Kadugodi Post, Bangalore-560067
மொபைல் : 9545520037
தொலைபேசி 08028450503, 08028450506.
Email: rcofbgl@gmail.com
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
எனக்கு waste decomposer வேண்டும்