எலுமிச்சை விளைச்சல் மூலம் செலவு போக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் லாபம் பார்த்து வருகிறார் சிவகங்கை தேவனிப்பட்டி விவசாயி பி.மாதவன். இவர், 3 ஏக்கரில் எலுமிச்சை கன்றுகளை நடவு செய்து வறண்ட பூமியில் பழத்தை விளைவித்து வருகிறார். மாதவன் கூறியதாவது:
3 ஏக்கர் நிலத்தில் 2009ல் ஏக்கருக்கு 90 கன்று வீதம் நடவு செய்தேன். தொடர்ந்து 5 ஆண்டு பராமரிப்பிற்கு பின், ஒரு ஆண்டாக எலுமிச்சை விளைச்சல் நடந்து வருகிறது. குளிர்ச்சி காலமாக இருப்பதால், பூக்கள் அதிகரித்து எலுமிச்சம் பழம் விளைச்சலும் அதிகரிக்க துவங்கியுள்ளன. வாரம் தோறும் ஏக்கருக்கு 135 கிலோ (சிப்பம்: 45 கிலோ) எலுமிச்சம் பழம் கிடைக்கும். ஒரு சிப்பத்தின் விலை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 வரை விற்கும்.
இப்பழங்களை மேலூர், சிவகங்கை சந்தைகளில் விற்பனை செய்து வருகிறேன். கோடை காலம், பண்டிகை காலங்களில் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரிக்கும். அப்போது ஒரு சிப்பம் ரூ.2,000க்கு விற்கும்.
மொத்த வியாபாரிகள் பழத்தை வாங்கி சென்று, முதல் தரத்தை ஜூஸ், சர்பத் போட பயன்படுத்துவர். 2ம் தர பழத்தை ஊறுகாய் உள்ளிட்ட எலுமிச்சை சார்ந்த உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவர். எலுமிச்சம் பழத்திற்கு எந்த காலத்திலும் “மவுசு’ குறையாது.
தற்சமயமுள்ள விலை நிலவரப்படி, எலுமிச்சம் பழம் ஒரு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.1.58 லட்சம் வரை விற்பனையாகும். இதில், உரம், பராமரிப்பு, தொழிலாளர்கள் சம்பளம், இதர செலவு போக, ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும், என்றார்.
தொடர்புக்கு 09443137350.
–என்.வெங்கடேசன், சிவகங்கை
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்