ஏற்றம் தரும் எலுமிச்சை & வாழை சாகுபடி!

வேலையாட்கள் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு… என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.

குடை பிடித்து நின்ற எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்தில்… பராமரிப்புப் பணியில் இருந்த சந்திரசேகரனை ‘பசுமை விகடன்’ ஊடுபயிர்கள் சிறப்பிதழுக்காக ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

”பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்கப் பிடிக்காததால, தேங்காய் மண்டியில வேலைக்குச் சேந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அப்பா கூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்போ, கரும்பு சாகுபடி செஞ்சுட்டுருந்தோம். நாங்களே வெல்லமா காய்ச்சி வித்துடுவோம். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடைச்சுது. ஆனா, போகப்போக மகசூலும் குறைஞ்சுடுச்சு, வெல்லத்தோட விலையும் குறைஞ்சுடுச்சு. வேற சாகுபடிக்கு மாறலாம்னு யோசிட்டுருந்தப்போதான், ஒரு நண்பர் எலுமிச்சை போடறதுக்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால அவரோட தோட்டத்துக்குப் போய் நேரடியா பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு… ரெண்டரை ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடியை ஆரம்பிச்சேன். இப்போ பன்னெண்டு வருஷமாச்சு. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பிச்சப்போ, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமா இருந்துச்சு. இப்போ எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைச்சுட்டுருக்கு’ என்று முன்னுரை கொடுத்த சந்திரசேகரன், தொடர்ந்தார்.

இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!

‘மூணு வருஷம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில ஊடுபயிரா, கனகாம்பரப் பூவையும், வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்துல இது மூணுலயும் கிடைச்ச லாபத்தை வெச்சு, ஒரு வீட்டு மனை, ரெண்டு ஏக்கர் நிலம்னு வாங்கிப் போட்டிருக்கேன். இப்ப மொத்தம் கையில 13 ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டரை ஏக்கர்ல தென்னை; 7 ஏக்கர்ல மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் பண்ணி வெச்சுருக்கேன். மீதி ரெண்டரை ஏக்கர்ல 250 எலுமிச்சை மரங்களும் அதுல ஊடுபயிரா ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கு” என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை இங்கே பாடமாகவேத் தொகுத்திருக்கிறோம்.

வடிகால் வசதி அவசியம் !

”எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம்.

20 அடி இடைவெளி !

20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவுக்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல, நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.

வாரம் ஒரு பாசனம் !

நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது.

3 ஆண்டுகள் வரையில், எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல ஏதாவது ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 4-ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 ஆண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா !

எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, ஒரு அடி இடைவெளி விட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப் பாத்தியிலும் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்… யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்… ஒரு மரத்துக்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகிவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு… ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவுக்குத் தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

மரத்துக்கு 1,500 பழங்கள் !

எலுமிச்சை மரம் மூன்றாம் ஆண்டில் பூவெடுத்து, காய்க்கத் தொடங்கும். அந்த ஆண்டில் சுமார் 100 முதல் 200 காய்கள் அளவுக்குக் காய்க்கும். 5-ம் ஆண்டில் இருந்து மரத்துக்கு 800 முதல் 1,500 காய்கள் வரை கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டும்தான் காய்ப்பில்லாமல் இருக்கும். மற்ற நேரங்களில் தொடர்ச்சியாகக் காய்த்துக் கொண்டே இருக்கும். கற்பூரவல்லி வாழை, நடவு செய்த 8-ம் மாதத்தில் தார் விட ஆரம்பித்து… 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும். ஒவ்வொரு தாரிலும் 12 முதல்

15 சீப்புகளும், சீப்புக்கு 15 முதல் 30 காய்களும் இருக்கும்”

இரண்டரை ஏக்கருக்கு… ஆறு லட்சம் !

சாகுபடிப் பாடத்தை முடித்த சந்திரசேகரன் நிறைவாக, ”ரெண்டரை ஏக்கர்ல மொத்தம் 250 எலுமிச்சை மரங்கள் இருக்கு. ஒரு மரத்துல இருந்து சராசரியா 1,000 பழங்கள் வீதம்

250 மரங்களுக்கும் சேத்து 2 லட்சத்து 50 ஆயிரம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்துக்கு சராசரி விலையா 1 ரூபாய் 50 காசுனு வெச்சுக்கிட்டாலே… 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர்லயும் சேத்து மொத்தம் 1,000 கற்பூரவல்லி வாழை மரங்கள் இருக்கு. ஒரு வாழைத்தார் 200 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகுது. ஒரு தார் சராசரியா 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே… 1,000 தாரை விக்கிறது மூலமா, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

எல்லாம் சேர்த்து  ரெண்டரை ஏக்கர் நிலத்தில் இருந்து, 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, ரெண்டு லட்ச ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டாலும், வருஷத்துக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லாபம்.

இதுவரைக்கும் இயற்கை உரங்களையும் ரசாயன உரங்களையும் கலந்துதான் விவசாயம் செஞ்சுக்கிட்டிருந்தேன். ஆரம்பத்துல

250 ரூபாய்க்கு வாங்கிட்டிருந்த யூரியா இப்போ 500 ரூபாய். 550 ரூபாயா இருந்த டி.ஏ.பி. இப்போ 1,100 ரூபாய் ஆகிப்போச்சு. அதனால, ‘இவ்வளவு விலை கொடுத்து ரசாயன உரத்தை வாங்கிப் போட வேணாம்’னு முடிவு பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை முறைக்கு மாறிக்கிட்டுருக்கேன். அடுத்த வருஷம் முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்றார், உற்சாகமாக!


நாமே தயாரிக்கலாம் பதியன் நாற்று !

எட்டு ஆண்டுகளுக்கு மேல் வயது உள்ள எலுமிச்சை மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் இடையூறாக உள்ள கிளைகளில் பதியன் கட்டி செடிகளை உற்பத்தி செய்யலாம். இரண்டு மூன்றாகக் கிளைகள் வளர்ந்துள்ள, தண்டுப் பகுதியைத் தேர்வு செய்வது நல்லது. இந்தத் தண்டுப் பகுதி குறைந்தபட்சம் அரை அடி உயரம் இருக்க வேண்டும். இதில் ஓர் அங்குலத்துக்குத் தோல் பகுதியை மட்டும் லேசாக செதுக்கி எடுக்க வேண்டும். ஈரமான தேங்காய்நார்க் கழிவை, செதுக்கிய இடத்தில் வைத்து, பாலிதீன் பேப்பர் கொண்டு, காற்றுப்புகாத அளவுக்கு அழுத்தமாக நூலால் கட்ட வேண்டும்.

30 நாட்களில் வேர்வளர்ந்து நிற்கும். வேருடன் சேர்ந்த கிளைப்பகுதியை வெட்டி, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, நேரடியாகவோ அல்லது பையிலோ நடவு செய்து கன்றுகளாக வளர்த்தெடுக்கலாம்.

இயற்கை இருக்க… ரசாயனம் எதற்கு?

சந்திரசேகரன் பயன்படுத்தும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை முறை சாகுபடித் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விளக்குகிறார், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு அருகே இருக்கும் பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ். இவர் குடும்பத்தினர் 53 ஆண்டுகளாக எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

”100 கிலோ மண்புழு உரம் அல்லது 100 கிலோ எருவுடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் விட்டு வந்தால் போதும். வெள்ளை ஈ மற்றும் கொசுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த… பஞ்சகவ்யா மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை 15 நாட்கள் இடைவெளியில் மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும். துருநோய் தாக்குதலுக்கு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம். இவற்றைக் கடைபிடித்து வந்தாலே… எலுமிச்சை மற்றும் வாழை சாகுபடியில், இயற்கை முறையில் நல்ல லாபம் பார்க்கலாம்” என்றார், தேவராஜ்.

தொடர்புக்கு,

சந்திரசேகரன், செல்போன்: 08489307569
தேவராஜ், செல்போன்: 09865834536

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *