தரிசு நிலத்தில் இயற்கை வழி எலுமிச்சை சாகுபடி!

மதுரை மாவட்டம் எழுமலை அருகே தச்சபட்டி கிராமத்தில் மலையடிவாரத்தில் தரிசாக கிடந்த இடத்தை வாங்கி இயற்கை வழி விவசாயம் செய்து சாதித்து வருகிறார் முன்னோடி விவசாயி ராதாகிருஷ்ணன் தரிசு நிலத்தில் பத்து நாட்டு மாடுகளுக்கான கொட்டம், அதன் கழிவுகளில் இயற்கை உரம், இரண்டு ஏக்கரில் 400 எலுமிச்சை மரங்கள், அதில் மரத்திற்கு 100 முதல் 150 திரட்சியான காய்களுடன் இருப்பதை பார்த்து, அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.

மலையடிவார பண்ணை

ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரிகளில் ஒருவன் நான். விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும், தொழிலாளர்கள் அதிகம் சம்பளம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தேன். பாச்சலுார் அருகே இயற்கை வழியில் எலுமிச்சை பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் ஏக்கருக்கு 7 லட்சம் முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்கிறார். அதே போல நாமும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல இடங்களில் மலையடிவார இடம் கிடைக்குமா, என தேடியபோது இந்த இடம் கிடைத்தது.

உர மூடாக்கு அமைப்பு

நான் இடம் தேர்வு செய்தபோது மழைக்காலம் என்பதால் மிகச் செழுமையாக இருந்தது. போகப்போக மழை இல்லாமல் வறண்டது. போர்களில் குறைந்த அளவே தண்ணீர் கிடைத்தது. ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிரிட ஏற்பாடு செய்தேன். ஆந்திரா சென்று ரங்கபுரி பாலாஜி ரக எலுமிச்சம் கன்றுகள் வாங்கி 12 க்கு 12 அடி இடைவெளியில் ஒரு செடி, ஆறு வரிசைக்கு இடையில் வாகனங்கள் சென்று வரும் அளவிற்கான பாதை, என 200 செடிகள், பாதையில் மரங்கள், செடிக்கு அருகில் இலையுதிர் மரங்கள் (தற்போது முருங்கை) என நடவு செய்தேன்.அனைத்து செடிகளுக்கும் சொட்டு நீர், களையெடுக்காமல் செடிகளை சுற்றிலும் செடிசெத்தைகள் கொண்ட மூடாக்கு அமைத்துள்ளோம்.

வரம் தரும் இயற்கை உரம்

மூடாக்கு தரும் நிழலில் தங்கும் நுண்ணுயிரிகள், தண்ணீர் கிடைத்தவுடன் அங்கேயே வாழ ஆரம்பிக்கும். அவற்றின் மூலம் இயற்கையாக நைட்ரஜன், பொட்டாஸ் போன்ற சத்துக்கள் மண்ணுக்கும், செடிக்கும் கிடைக்கும். 10 நாட்டு மாடுகள் கொண்ட கொட்டத்தில் வெளியேறும் கழிவுகளை சேகரித்து வெல்லம், பயத்தமாவு கலந்து தொட்டிகளில் புளிக்க வைத்து கிடைக்கும் ஏராளமான நுண்ணுயிரிகள் கொண்ட கழிவு நீரை பண்ணைக்குட்டையில் செலுத்தி, அங்கிருந்து அரை எச்.பி., மோட்டார் மூலம் செடிகளுக்கு பாய்ச்சுகிறோம். குருத்து விடும் பகுதி சில பூச்சிகளுக்கு சுவையான உணவாக அமையும்.

அதன் மீது இயற்கையாக தயாரித்துள்ள பூச்சிவிரட்டியை தெளித்து விட்டால் அதன் சுவை மாறிவிடும். பூச்சிகளும் வேறு உணவுகளை தேடி சென்று விடும். பாதையின் வழியாக மருந்து தெளித்தால் இந்த பக்கம் மூன்று செடிகளுக்கும், மறுபக்க பாதை மூலமாக மூன்று செடிகளுக்கும் தெளிக்க ஏதுவாக அமையும்.

இரண்டாவது ஆண்டிலேயே செடிகளில் 100 முதல் 150 வரை காய்கள் திரட்சியாக காய்க்க துவங்கியுள்ளன.

ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம்

ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்னரை லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு வருமானம் கிடைக்கும் வழி ஏற்பட்டுள்ளது. மரங்களின் வளர்ச்சிக்கேற்ப இது 200 முதல் 500 காய்கள் வரையில் காய்க்கும் பக்குவம் வரும். 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து லாபம் அதிகரித்தபடி வரும். பலர் அதிக ஆழத்திற்கு போர் போட்டு நெல், கரும்பு போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை பயிரிட்டு அவர்களும் லாபம் சம்பாதிக்காமல், மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரையும் வீணாக்கிவருகின்றனர்.
நம்மாழ்வார் கூறியது போல நம்பகுதி மண்ணில் விலையும் மரங்களை நட்டு நல்ல விவசாயம் செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும். சுற்றுப்பகுதி விவசாயிகளும் என்னிடம் ஆலோசனை கேட்டு இயற்கை விவசாயத்திற்கும், லாபம் தரும் விவசாய பணிகளுக்கும் மாறி வருகின்றனர்.

ஆர்வமுள்ள விவசாயிகள் என்னுடைய மொபைல் எண் 9842793970 மூலம் தொடர்பு கொண்டால் ஆலோசனை வழங்குகிறேன். என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *