கண்மாயில் தண்ணீர் இல்லாத போதும், ராஜபாளையம் விவசாயி ஒருவர் எள் பயிரிட்டு, 100 நாட்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து சாதித்து உள்ளார் .
கடந்த இருஆண்டுகளாக ராஜபாளையத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நெல் விவசாயமும் பாதித்தது. இதையெல்லாம் கணக்கிட்டு, எள் விவசாயத்தில் இறங்கி சாதித்து உள்ளார் விவசாயி மதுரை பாண்டி.
ராஜபாளையம் பிரண்டைகுளம் கண்மாயில், 120 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்த நிலையில், தண்ணீர் இல்லாததால் பலர் காய்கறி, கீரை போன்ற விவசாயம் செய்து வந்தனர். வரவுக்கு மேல் செலவு இருந்தது.
கண்மாய் பாசன நிலத்தில், விவசாயி மதுரை பாண்டி கடந்த மார்ச்சில் எள் விதைத்தார். இரு மாதங்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.இது, எள் செடி வளர்ச்சிக்கு உதவியது.
அண்மையில் அறுவடை செய்து, தண்ணீர் இல்லாத கண்மாயின் ஓரத்தில் களம் அமைத்து, செடிகளை அடித்து எள்ளை சேமித்தார்.100 கிலோ உள்ள எள் மூடை ஏழு ஆயிரம் ரூபாய்க்கு, வியாபாரிகளுக்கு விற்றார்.
“”எள் நடுவதால் களை எடுப்பு, இதர கூலி வேலைகளுக்கு
அதிக ஆள்கள் தேவை இல்லை. விதைத்த நூறு நாளில் அறுவடை செய்யலாம். மாசியில் விதைத்து வைகாசியில் அறுவடை செய்தால் எள் கிடைக்கும். எண்ணெய் மில்கள் அதிகமாகி வருவதால், எள் விவசாயத்திற்கு வரவேற்பு உள்ளது. இந்த முறை ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு மூடை எள் கிடைத்தது, செலவு போக 20 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளது,” என்றார்.
-கற்பகநாதன், ராஜபாளையம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்