கடலுக்கு கூட பிடிக்குமா சளி?

மனிதர்களின் உடல்நலம் குன்றினால் சளி பிடிக்கும். கடலுக்கு சளி பிடிக்குமா? வியப்பாக இருக்கிறதா? இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல, வேதனை அடைய வைக்கும் விஷயம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதனால் பெரும்பாலும் சளி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சளி தோன்றுவது, உடல் சூடு அதிகரிப்பின் அறிவிப்பு மணியாகிறது. நம் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை உடல் வெப்பமே அளிக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் வெப்பமும் நஞ்சுதான். சளி என்னும் எச்சரிக்கை மணியை அலட்சியப்படுத்தினால், உடல் சூடாகி, கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண், பித்தப்பை, கல்லீரல் பாதிப்பு போன்ற வேண்டா விருந்தாளிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பிவிடும். இதற்கும் கடல் சளிக்கும் என்ன சம்பந்தம்?

நம் உடலைப் போலத்தான் புவிக்கோளமும். அதிலும் சுமார் 71 விழுக்காடு கடலினால் ஆனது. அதாவது நான்கில் மூன்று பங்கு. இது புவியிலுள்ள 96.5 விழுக்காடு நீரைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பொழுது உடல் சூட்டையும் புவி வெப்பமயமாதலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆம், புவி வெப்பமானால் பெருங்கடல் நீர் சூடாகி பாசி போன்ற நுண்தாவரங்களுக்கு ஊட்டமளிப்பதால்தான் கடல் சளி ஏற்படுகிறது.

பச்சை – சாம்பல் வண்ணமுடைய கோழை போன்ற கரிமப் பொருளான இந்த கடல் சளி, பல்கிப் பெருகி கடலின் மேற்பரப்பை அடைத்துக்கொள்வதுடன், கடலின் அடிப்பகுதியை நோக்கியும் சில அடி முதல் பல கிலோ மீட்டர்வரை அடர்த்தியாக வளரும் திறன் கொண்டது. புரிவதுபோல் சொல்ல வேண்டுமென்றால், ஏரி, குளங்களில் ஆகாயத்தாமரை வளர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொள்வதுபோல. இந்தக் கூழை படலத்தினால் ஆபத்தில்லையென்றாலும்கூட வைரஸ், பாக்டீரியா போன்ற பல ஆபத்தான நுண்ணுயிர்களைக் கவர்ந்து அவற்றின் கூடாரமாக இது கடலில் மிதக்கிறது.

இப்படிக் கடலின் மேற்பரப்பை அடைத்து வளரும் சளியினால் கடலில் உட்புகும் உயிர்வளி (ஆக்சிஜன்) தடுக்கப்பட்டு, கடலின் வெப்பநிலை கூடுகிறது. மனிதர்களைப் போல் ஆக்சிஜன் படுக்கை கேட்க முடியாத கடல்வாழ் உயிர்கள் மடிந்துவிடுகின்றன. இவ்வாறு செத்து மிதக்கும் சடலங்களால், கடலின் சூழ்நிலை மேலும் சீர்கெடுகிறது. மீன் வளம் குறைவதால் அதனைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இப்படிச் சூழலியல் சீர்கேட்டினால் மனிதர்களுக்கும் சில தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

இது நீர்நிலைகளில் நிகழும் அரிதான நிகழ்வுதான் எனினும், துருக்கியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை அப்படிப்பட்டது இல்லை. கருங்கடலையும், ஏஜியன் கடலையும் இணைக்கும் மர்மரா கடல்பகுதிதான் கடல் சளி (sea snot) எனும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தத் தொற்றானது கடந்த காலத்தைவிட அதிகமாக இருப்பதால், இதைக் கடல் சளி பெருவெடிப்பு என்றே கூறுகின்றனர். மேலும் கருங்கடலிலும் இதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.

கடலில் மிக அதிக அளவில் கலக்கப்படும் கழிவுகளால் மாசுபாடு அடைந்த கடல் நீர், காலநிலை மாற்றத்தோடு கைகோத்து இந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி கடல் சளியுடன் போராடிக்கொண்டிருக்கிற இந்த வேளையில்தான் உலகப் பெருங்கடல் தினத்தை (ஜூன் 8) கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாட்டை எப்போது உணரப்போகிறோம்? இந்தச் சீர்கேடுகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்?

– சூரியா.சு,

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர். தொடர்புக்கு: suriya.sundararajan1@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *