கந்தனால் இனி மீன் பிடிக்க முடியாது!

ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் விரிந்து கிடக்கும் பல்வேறு கலாசாரங்களை, நிலங்களை ஒன்றுக்கொன்று இணைத்த பெருமை சாலைகளையே சேரும்.

ஆனால், நகர மேம்பாடு என்ற பெயரில் சென்னையின் பூர்வகுடிகளான மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாலைத் திட்டம் ஒன்று சென்னையில் உருவாகி வருகிறது.

‘மெரினா வளைவு சாலை மேம்பாட்டு திட்டம்’ எனும் இப்புதிய திட்டம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட சீனிவாசபுரம்வரை 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காகச் சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ள தொகை ரூ.47.26 கோடி.

பறிபோகும் வாழ்வாதாரம்

இப்பகுதியில் நூறு சிறு மீன் அங்காடிகள் இருக்கின்றன. கடற்கரைக்கும் மீனவர்களின் குடியிருப்புக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்தச் சாலையைக் கான்கிரீட் சாலையாக மாற்ற மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதனால் வாகனப் போக்குவரத்தும் அதிகரிக்கலாம்.

அத்துடன் பூங்கா, உட்கார இருக்கைகள் அமைத்தல் போன்ற அழகூட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அப்போது மீன் அங்காடிகள் வெளியேற்றப்படலாம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அது மட்டுமல்ல சாலைக்கு அருகேயுள்ள கடற்கரையில்தான் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கும் ஆபத்து நேரலாம். மொத்தத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்பது இப்பகுதி மீனவர்களின் குரலாக இருக்கிறது.

மறைக்கப்படும் பாதிப்பு

வாழ்வாதாரப் பிரச்சினைகள் தவிரச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் உள்ளன. “இத்திட்டத்துக்காகக் கடலோர விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சமூகத் தாக்க அறிக்கை, பேரிடர் மேலாண்மை அறிக்கை போன்ற எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தத் திட்டத்துக்காக ஆய்வு செய்ய வந்த அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெறும் மூன்று மணி நேரத்தில் ஆய்வு செய்துவிட்டு, எந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என்று அறிக்கை அளித்திருக்கிறார்கள்.

மேலும், இங்கு அதிகமாக முட்டையிடும் பங்குனி ஆமைகளைப் பற்றி எந்தத் தகவலும் அதில் கூறப்படவில்லை. பாதிப்புகள் பற்றி முறையான பதிவு இல்லை” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையில் பாதிப்புகள், பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

Courtesy: Hindu
Courtesy: Hindu

“மீன் சந்தைக்குச் சென்னை மாநகராட்சியிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று தெரியவில்லை. கடலில் இருந்து கொண்டுவந்து ரோட்டில் வலைகளைப் பரப்பித்தான் மீன்களைப் பிரித்தெடுப்போம். புதிய சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மீன் அங்காடிகளே காணாமல் போய்விடும்,

நாங்கள் எங்கே போய் மீன் பிரிக்க முடியும்? ஆக மொத்தத்தில், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் எங்களால் மீன் பிடிக்க முடியாது” என்று வேதனையுடன் சொல்கிறார் மீனவர் கந்தன்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *