திருச்செந்தூர் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?

சிறிது நாட்கள் முன் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் பகுதியில் கல்லாமொழி முதல் மணப்பாடு வரையுள்ள கரைப்பகுதியில்  56 திமிங்கலங்கள் பலியாகியுள்ளன. ஏன் இப்படி கும்பலாக இறந்தது என்பதற்கான பல காரணங்கள், யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லாமொழி கடற்கரைப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இதனை மீனவர்கள் கடலுக்குள் தள்ளி விட்டனர்.மறு நாள் மணப்பாடு முதல் கல்லாமொழி வரை 12 கி.மீ., நீள கடற்கரை பகுதியில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.

பிறகு  45 பலியாகின. இதனை தொடர்ந்து 50 திமிங்கலங்கள் மீட்கப்பட்டு ஆழ்கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன. மீண்டும் ஆறு கரை ஒதுங்கியது. அவை மீண்டும் கடலில் விடப்பட்டன.

கரைக்கு வரக் காரணம் என்ன?

ஆழ்கடலில் கூட்டமாக வசிக்கும் இந்த திமிங்கலங்கள் உணவுக்காக சிறிய வகை மீன்களை தேடி கரைப்பகுதிக்கு வந்திருக்கலாம். இரவு நேரங்களில் கடலில் அலைகள் அதிகம் இருக்கும். பகல் நேரங்களில் கடல் அமைதியாக காட்சியளிக்கும். இரவு நேரத்தில் உணவு தேடி வந்த திமிங்கலங்கள் கரைப்பகுதிக்கு வந்திருக்கும்.

பகலில் கடல் அலைகள் ஓய்ந்து போனதால், கரைகளில் தண்ணீர் மட்டம் குறைந்திருக்கும். கரைகளில் சிக்கி மீண்டும் ஆழ் கடலுக்குள் செல்ல முடியாமல் கரை ஒதுங்கியிருக்க கூடும்.

மீன் வள ஆராய்ச்சிக்கல்லுாரியில் பேராசிரியர் சீனிவாசன் தலைமையில் சென்ற குழு ஆய்வறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது:

whale1

இது குட்டை துடுப்பு பைலட் திமிங்கல வகையை (Pilot Whale) சார்ந்தது. இதன் ஆயுள் காலம் சராசரியாக 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இதில் பெண் திமிங்கலங்கள் 8 முதல் 9 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ஆண் திமிங்கலங்கள் 13 முதல் 17 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். 15 மாதங்களில் குட்டி போடும். ஒரு குட்டி போட்ட பின்பு அடுத்த குட்டி போடுவதற்கு 5 முதல் 8 ஆண்டுகள் வரை இடைவெளி இருக்கும். ஆழ்கடல் பகுதியில் உள்ள தண்ணீரின் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, உப்பின் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை.

திமிங்கலங்கள் சிறிய வகை மீன்களை வேட்டையாட கரைப்பகுதிக்கு வந்திருக்கும். அதிகளவு அலைகள் உள்ள நேரத்தில் கரைக்கு வந்திருக்கும். அலைகள் குறைந்த பின்பு கரையில் இருந்து கடலுக்குள் செல்லமுடியாத நிலையில் சிக்கியிருக்கலாம்,என, தெரிவித்துள்ளனர்.

கடலில் ஏற்படும் மாற்றங்கள்

தற்போது வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்துள்ளது. இதன் காரணமாக கடலுக்குள் நன்னீர் அதிகளவு வரத்து உள்ளது. தாமிரபரணி, வைப்பாறு பகுதியில் மழை வெள்ள நீர் கடல் முகத்துவார பகுதிகளில் அதிகளவில் செல்கிறது. கடல் நீரோட்டங்கள் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். அப்படி ஏற்பட்ட நீரோட்டத்தின் காரணமாக கடற்கரை பகுதிக்கு திமிங்கலங்கள் இழுத்து வரப்பட்டிருக்கலாம். கரைக்கு வந்தவைகள் மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்ல முடியாமல் பலியாகியிருக்கலாம்.

Courtesy: Dinakaran
Courtesy: Dinakaran

கடலில் மாசு அதிகரிப்பு

துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் கடற்கரை பகுதிகளில் கெமிக்கல், உள்ளிட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அன் மின் நிலையங்கள் நிலக்கரி சாம்பல் கடலில் கலக்கின்றன. கடலில் மாசு அதிகம் ஏற்பட்டதால், நன்னீர் வரும் பகுதியான கடல் முகத்துவாரப்பகுதியை தேடி திமிங்கலங்கள் வந்திருக்கலாம்.

கரைப்பகுதியில் உள்ள கடல் நீர் மாசு காரணமாக கலங்கலாக இருக்கும். இதில் திமிங்கலங்கள் கண்கள் பாதிக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக ஆழ் கடல் நோக்கி செல்ல முடியாத நிலையில் பலியாகி இருக்கும். தொடர்ந்து ஆழ்கடல் பகுதியில் விட்ட திமிங்கலங்கள் மீண்டும் கரைக்கு வந்துள்ளன. இவைகள் கூட்டமாக வாழக்கூடியது. இதன் காரணமாக கரைக்கு வந்த அனைத்து திமிங்கலங்களும், ஆழ்கடலுக்குள் செல்லாது. மீண்டும் கரைக்கு வந்து மடிந்தே தீரும், என, கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல் வள ஆராய்ச்சியளார் ஜே.ஜே.பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது: இது ‘சார்ட் பின்டு பைலட் வேல்ஸ்’, என்ற வகையை சேர்ந்த திமிங்கலங்கள் ஆகும்.இது ஆழ்கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ., துாரத்திற்கு அப்பால் தான் காணப்படும். இது வனத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கருமை மற்றும் சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். ஆயிரம் மீட்டர் ஆழத்தில் சென்று மீன்களை வேட்டையாடும் தன்மை கொண்டது. நீர் பரப்புக்கு மேல் பகுதிக்கும் வந்து விடும்.

மீண்டும் தாவிக்குதித்து ஆழ் கடல் பகுதிக்கு செல்லும். இது கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. தங்கள் கூட்டங்களில் இருந்து பிரிந்தாலோ, ஆபத்து ஏற்பட்டாலோ வினோதமான சப்தத்தை ஏற்படும். இந்த சப்தம் திமிங்கலங்களுக்கு மட்டுமே உணர முடியும், என, அவர் தெரிவித்தார்

ரசாயன கழிவுகளால் இறப்பா?

‘ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயன கழிவுகள் தான் திமிங்கலங்கள் இறப்புக்கு காரணம்’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘இது குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என, மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ கூறுகையில், ”திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆலைக்கழிவுகள் கலப்பால், கடல் மாசுபட்டுள்ளது. கடல் மாற்றத்தால் திசை மாறி வந்த திமிங்கலங்கள், இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துள்ளன. இதுகுறித்து, சுற்றுச்சூழல் வாரியம் விசாரிக்க வேண்டும்,” என்றார்.

இந்திய மீனவர் சங்கத்தலைவர் தயாளன் கூறுகையில், ”ரசாயன கழிவுகள் கலப்பு தான் இறப்புக்கு காரணம். இறந்த திமிங்கலங்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள், நிபுணர் குழு அமைத்து விசாரித்தால், அரிய வகை கடல் உயிரினங்களை எதிர் காலத்தில் அழியாமல் காப்பாற்ற முடியும்,” என்றார்.

நன்றி: தினமலர்

திமிங்கலங்கள், டால்பின்கள் போன்ற மீன்கள் மனிதர்களை போல் குட்டி போட்டு பால் தரும் பாலூட்டிகள். குட்டிகளை நன்கு வளர்க்கும் தன்மை கொண்டவை.. மிகவும் அறிவு  வாய்ந்த இவை, கூட்டமாக (social) வாழும் தன்மை கொண்டவை. இவை திடீர் என்று இப்படி கரைக்கு வந்து இறந்தது மர்மமாக உள்ளது. ரசாயன கழிவுகளால் இறப்பா என்பது நிச்சியம் தெரிய வேண்டும்..

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *