நம் நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக ரகங்கள் இருக்கும் ஒரு பயிர் என்றால், அது கத்திரியாகத்தான் இருக்கும். கத்திரி ஆறு மாத காலப்பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும்.
புளியம்பூ கத்திரி, பவானி கத்திரி, கோவை வரிக்கத்திரி, வெள்ளை வரிக்கத்திரி, பச்சை வரிக்கத்திரி என இப்போதும் கூட பல வகையான நாட்டுக் கத்திரி ரகங்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. மணமும் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட நாட்டுக் கத்திரிகள் ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண்ணுக்கேற்றப் பயிராக விளைந்தன.
ஆனால், ஒரு கட்டத்தில் வீரிய ரகங்களின் அதிரடி வருகையால் அருமையான விளைச்சலையும், அடுத்த போகத்துக்கான விதைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நாட்டு ரகங்களில் பெரும்பாலானவை, படிப்படியாக அழிந்துவிட்டன. இன்று, விதைகளுக்காக கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கிறார்கள், விவசாயிகள்.
இத்தகைய கொடுஞ்சூழலிலும் நாட்டுரகங்களை விடாமல் காப்பாற்றி சாகுபடி செய்துவரும் சில விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். கத்திரி சாகுபடியில் ஆர்வமிருக்கும் பலருக்கும் அதுகுறித்து முழுமையான விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.
கத்திரிக்கு பட்டமில்லை
இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயிரிடலாம். கத்திரிக்காய்க்குத் தனியாக பட்டமெல்லாம் கிடையாது. கத்திரிக்காயைப் பொருத்த வரைக்கும் புழு விழுந்துவிடாமல் பாதுகாப்பது அவசியம். அதுதான் சந்தைக்கு கொண்டு போகும்போது, நல்ல விலைக்குப் போகும். விழாக்காலங்களில் கத்திரிக்காய்க்கு நல்ல கிராக்கி இருக்கும். அப்போது விலை அதிகமாகி எதிர்பார்க்காத அளவுக்கு மும்மடங்கு லாபத்தை அள்ளித்தரும்.
விலை
‘சில நாட்களில் விலை தலைகீழாக மாறி கிலோ 10 ரூபாய்க்குகூட விற்பனையாகும். மொத்தமாகக் கத்திரி காய்ப்பு ஆறு மாதத்திற்குக் குறையாமல் இருக்கும். தினமும் ஒரு ஏக்கரில் 100 கிலோவில் இருந்து 150 கிலோ வரைக்கும் அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு ஒரு நாளைக்குக் 120 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக 15 ரூபாய் என்று சந்தையில் விலை போகும். அதனால் ஒரு நாளைக்கு 1,800 ரூபாய் கிடைக்கும்.
ஒரு ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி
கத்திரி ஆறு மாத காலப்பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும்.
விதைநேர்த்தி
எந்த ரகமாக இருந்தாலும், அதை விதை நேர்த்தி செய்வதால், முளைப்புத் திறன் அதிகரிப்பதோடு, நோய்களும் தடுக்கப்படும். விதை நேர்த்திக்கு, 40 கிராம் அசோஸ் ஸ்பைரில்லத்தை, அரிசி வடிகஞ்சியில் கலந்து, விதையை அதில் மூழ்கி எடுத்து, நிழலில் இரண்டு மணி நேரம் உலர வைக்கவேண்டும். பின், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் என்ற அளவில், ‘டிரைக்கோடெர்மா விரிடி’ அல்லது 10 கிராம், ‘சூடோமோனஸ்’ எடுத்து, விதைகளை புரட்டி, இரண்டு மணி நேரம் வைத்திருந்து, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
வயலில், 10 அடி நீளம், 3 அடி அகலம், அரை அடி உயரத்தில் மேட்டுப் பாத்தி அமைத்து, பாத்தியின் மேல், 10 செ.மீ., இடைவெளியில் ஆள் காட்டி விரலால் வரிசையாகக் கீறி, கீறல் மீது, கோலப் பொடியை தூவுவது போல, நேர்த்தி செய்த விதைகளைத் தூவ வேண்டும்.
விதைகளை மண் மூடுமாறு கையால் கிளறி, வைக்கோல் போட்டு மூடி, பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரம் தண்ணீர் தெளித்து வந்தால், விதைகள் முளைத்து வரும். 10-ம் நாளில் வைக்கோலை நீக்கி விடலாம். 40 நாட்களில் நாற்றைப் பறித்து, நடவு செய்யலாம்.
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். அதன் பிறகு 3 டன் மாட்டு எருவைத் தூவிவிட்டு மூன்று முறை நிலத்தை உழுக வேண்டும். 4 1/2 அடி நீளம் 2 அடி அகலம் விட்டு பாத்தி அமைக்க வேண்டும். அமைத்த பாத்தியில் நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 25 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவேண்டும். பொதுவாகக் கத்திரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் இரட்டை வரிசை முறையில் 60 * 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
மண் களிமண்ணாக இருந்தால் சரியாக வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. நடவு செய்த நாள் முதல் 20 முதல் 25 ஆம் நாளுக்குள் களை எடுக்க வேண்டும். கத்திரியில் காய்ப்புழு தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க, வாரம் ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி அளவு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஏனெனில் கத்திரியில் நோய்த் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கத்திரியில் நோய்த் தாக்குதல் தென்பட்டால் கடலைப் புண்ணாக்கு 20 கிலோ, எள் புண்ணாக்கு 20 கிலோ இரண்டையும் 15 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து செடியின் வேர்ப் பகுதியில் 75 கிராம் அளவு வைத்து மண்ணை அணைத்து விட வேண்டும். இதனால் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிப்படைய வாய்ப்பில்லை. நடவு நட்டதிலிருந்து 20 நாளுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா ஒரு லிட்டருக்கு 200 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாய்ச்சும்போது தண்ணீருடன் பஞ்சகவ்யா கரைசலை கலந்து விடலாம்.
நடவு நட்ட மூன்றுவாரம் கழித்து மாதம் இருமுறை மூலிகை பூச்சி விரட்டி தெளித்தால் போதுமானது. கத்திரி செடிகள் பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும். சரியாக 45 வது நாள் கத்திரிக்காய் அறுவடைக்கு வந்துவிடும். அதற்குப் பிறகு 10 நாள் கழித்து, இரண்டாம் களை எடுக்கும்போதும் நோய்த் தாக்குதல் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்வது நல்லது. இது போக நடவு நட்டதிலிருந்து மூன்று மாதம் கழித்து மறுபடியும் மக்கிய தொழு உரத்தைத் தண்ணீருடனோ அல்லது கத்திரி செடியின் வேரிலோ கைப்பிடியளவு வைக்க வேண்டும். அதனால் அடுத்த மூன்று மாதத்திற்கு மகசூல் பாதிப்படையாது. சரியான பராமரிப்பிருந்தால் 6 மாதம் வரை கலக்கலான மகசூல் கிடைக்கும். இதற்குக் களை, ஊட்டச்சத்துகள் போன்ற தொடர் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிப்பதும், மிக அவசியம். ஒருமுறை கத்திரி போட்டு அறுவடை முடிந்த வயலில், அடுத்ததாக வேறு பயிரை நடவு செய்ய வேண்டும்.
நோய்த் தாக்குதல் பராமரிப்பு!
புள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டுகளை, 1 ஏக்கருக்கு, 12 கிலோ அடுப்பு சாம்பலை மணலோடு கலந்து, இலைகளில் தூவி அழிக்கலாம். மேலும், கத்திரியைத் தாக்கும் பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சியை, 40 மில்லி மீன் அமினோ அமிலத்தை, 1 லி., தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். நடவுக்கு முன் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை, தொழுவுரத்துடன் கலந்து மண்ணில் போட்டால், வாடல் நோய் வராது. கத்திரி செடிகளில் தோன்றும் வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி 80 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்