அதிகம் விளைந்த கத்திரிக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தமிழக விவசாயிகள் பலர் காய்கறிகளை வீதியில் கொட்டிச் செல்வதை தொலைக்காட்சியில் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
இயற்கை முறையிலான சாகுபடியில் விளைவித்த கத்தரிக்காய் கொரோனா ஊரடங்கால் விற்பனை ஆகவில்லை. இதையடுத்து, அதை வற்றலாக்கி மதிப்பு கூட்டி விற்று அதிக லாபம் ஈட்டி வருகிறார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் முருகபூபதி.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடைமடை பகுதியான நண்டலாறு, அரசலாறு, வாஞ்சியாறு உள்ளிட்ட காவிரியின் கிளை நதிகள் கடலில் சங்கமிக்கும் இடமாகத் திகழும் காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீர் காலத்தோடு வராததாலும் பருவமழை பொய்த்ததாலும் பெரும்பாலான விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக வேறு பயிர்கள் பயிரிடாது நிலத்தை தரிசாக விட்டுவிடுகின்றனர்.
இந்நிலையில் காரைக்காலை அடுத்த பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகபூபதி எனும் இளம் விவசாயி கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தனது நிலத்தில் நெல்லுக்கு மாற்றாக தோட்டப் பயிர்களைப் பயிரிட்டு அதை லாபகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
முருகபூபதியிடம் பேசினோம். “குறைந்த நீரில் அதிக லாபம் தரக்கூடிய தோட்டப்பயிர்களான கத்திரி, பீர்க்கு , புடலை, கொத்தவரை, மிளகாய் போன்ற காய்கறிகளை விளைவித்து அவற்றைக் காரைக்கால் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகிறேன். முழுவதுமாக இயற்கைத் தொழில்நுட்பத்தில், உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் தேசிய இயற்கை விவசாய மையத்தில் தயாரிக்கப்பட்ட வேஸ்ட் டீகம்போசர் கரைசல் எனும் இயற்கை உரத்தைப் பயன்படுத்தியதால், இந்த ஆண்டு கத்திரிக்காய் அதிக விளைச்சல் கண்டு நல்ல தரமான, ருசியான காயாகவும் விளைந்தது. துரதிர்ஷ்டவசமாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சலுக்குத் தகுந்த விலை கிடைக்காத நிலை உருவானது.
அதிகம் விளைந்த கத்திரிக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தமிழக விவசாயிகள் பலர் காய்கறிகளை வீதியில் கொட்டிச் செல்வதை தொலைக்காட்சியில் கண்டு அதிர்ச்சியுற்றேன். அதற்குத் தீர்வாக நன்கு விளைந்த கத்திரிக்காய்களை காயவைத்து வற்றலாக மதிப்பு கூட்டி, அவற்றை உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால் கத்திரிக்காய் வற்றல் தயாரிக்கும் பணியினைத் தொடங்கியுள்ளேன்.
முதல் கட்டமாக பலர் கத்திரிக்காய் வற்றலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை சரிக்கட்டும் நோக்கில் சிறு, குறு தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் தோட்டப் பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் உபதொழில் செய்யவும் மதிப்பு கூட்டி தயாரிக்கப்பட்ட பொருளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு உதவி செய்தால் விவசாயம் செழிப்பதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும்” என்றார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கத்தரி காயை எப்படி வற்றலாக்குவது பிறகு எப்படி அதை விற்பனை செய்வது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் மக்களுக்கு நல்ல யோசனையாக அமைந்திருக்கும்