”கத்திரியில காய்ப்புழுவுக்கு பயந்துகிட்டுதான், விஷம் ஏத்தின பி.டி. கத்திரியைச் சாப்பிடச் சொல்றாங்க விஞ்ஞானிங்க. ஆனா, இந்த முட்டாள் தனத்துக்கு பலிகடா ஆகிடக்கூடாதுனுதான் நாட்டுக் கத்திரியை சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர், சொக்கலிங்கம்.
காரைக்குடி தாலூகா, ஓ.சிறுவயல் அருகேயுள்ள ஆவுடபொய்கை கிராமத்தில் இருக்கிறது சொக்கலிங்கத்தின் தோட்டம். ”மொத்தம் 45 ஏக்கர். இதை வாங்கினப்ப… ‘இந்த மண்ணு விவசாயத்துக்கு சரிப்பட்டு வராது… அதில்லாம இந்த இடத்துல தண்ணியும் கிடைக்காது’னு பலரும் சொன்னாங்க. ஆனா, துணிஞ்சு களத்துல இறங்கினேன். தண்ணிக்காக 18 இடத்துல போர்வெல் போட்டும் கிடைக்கல. கஜினி முகமது மாதிரி முயற்சி பண்ணினதுல, 19-வது இடத்துல தண்ணி கிடைச்சுது.
‘விவசாயத்துக்கு சரிப்பட்டு வராது’னு சொன்ன நிலத்துல… இன்னிக்கு 2 ஆயிரம் மாமரம், 1,500 தென்னை, 800 வகையான மூலிகைகள், 300 நெல்லி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வகையான மரங்கள் இருக்கு. இதுபோக, 15 ஏக்கர்ல வாழை; ஒரு ஏக்கர்ல நாட்டுக் கத்திரி மற்றும் ரெண்டு மீன்குளங்களும் இருக்கு. இப்பவரைக்கும் இந்த நிலத்துல ரசாயனத்தைப் பயன்படுத்தினதே இல்லை. என்னோட ரெண்டு பசங்களும், மருமகனும்தான் கத்திரி சாகுபடியைப் பார்த்துக்கறாங்க” என்றபடி அவர்களை அறிமுகப்படுத்தினார்.
மூத்த மகன் ரவிச்சந்திரன், ”நான், என்னோட தம்பி மணிகண்டன் ரெண்டு பேருமே சித்த மருத்துவர்கள்தான். ஆரம்பத்துல, எங்க தேவைக்காக மூலிகை சாகுபடி பண்ணிக்கிட்டிருந்தோம். மா உள்பட பலவகை மரங்களையும் வெச்சுருந்தோம். குன்றக்குடி கே.வி.கே. விஞ்ஞானிகள், ‘காய்கறி விவசாயம் செய்யலாமே!’னு யோசனை சொல்ல, அதையும் ஆரம்பிச்சுட்டோம்” என்றவர், கத்திரி சாகுபடியைப் பாடமாகவே விவரித்தார்.
ஆறடிப் பாத்தி !
‘களிமண் தவிர, அனைத்து மண்ணிலும் கத்திரி வளரும். ஏக்கருக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 2 டிராக்டர் சாம்பல் ஆகியவற்றை நிலத்தில் கொட்டி, இரண்டு-மூன்று முறை உழவு செய்து, மண்ணை பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், ஆறடிக்கு ஆறடி அளவில் பாத்திகள் எடுத்து, ஓரடி இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். பாரின் நடுப்பகுதியில் இரண்டு அடி இடைவெளியில் கத்திரி நாற்றுகளை நடவு செய்யவேண்டும். விரும்பினால், பாரின் ஓரத்தில் வெங்காயத்தை ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.
பூச்சியை விரட்டும் வெங்காயக் கரைசல் !
நடவு செய்த 20, 40, 60-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும் என்பதால், வாரம் ஒரு முறை வெங்காயக் கரைசலைத் தெளிக்க வேண்டும். செடி காயாத அளவுக்கு (வாரம் ஒரு முறை) பாசனம் செய்ய வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் செடிகளில் பூவெடுத்து, பிஞ்சு வைக்கும். 65-ம் நாளுக்குப் பிறகு, அறுவடையை ஆரம்பிக்கலாம்.’
இரண்டு வருடம் வரை மகசூல் !
சாகுபடிப் பாடத்தை முடித்தவர், ”நாட்டுக்கத்திரியைப் பொறுத்தவரை நல்லா பராமரிச்சா… ரெண்டு வருஷம் வரைக்கும்கூட மகசூல் கிடைச்சுட்டே இருக்கும். ஒரு தடவை காய்ப்பு ஓய்ஞ்சதும் இலைகள உதிர்த்துட்டு, குச்சிகளை கவாத்து செஞ்சுவிட்டா… புதுசா துளிர்க்கற செடியில நல்ல மகசூல் எடுக்கலாம்.
கத்திரியை வாரம் ஒரு தரம் பறிக்குறோம். ஒரு ஏக்கர்ல இருந்து, வாரத்துக்கு 150 கிலோவுல இருந்து, 175 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. இதுவரைக்கும் 4 பறிப்பு எடுத்துட்டோம். சராசரியா ஒரு கிலோ 25 ரூபாய்னு விலை கொடுத்து தோட்டத்துக்கே வந்து, வாங்கிட்டுப் போயிடறாங்க வியாபாரிங்க. இதுவரைக்கும் சாகுபடிக்காக 10 ஆயிரம் ரூபாய் செலவழிச்சுருக்கோம். ஆனா, 15 ஆயிரம் ரூபாய்க்கு காய் எடுத்துட்டோம். இதுலயே 5 ஆயிரம் ரூபாய் லாபம். மேற்கொண்டு கிடைக்கிறதெல்லாமும் லாபம்தான்” என்றார், சந்தோஷமாக
வெங்காயக் கரைசல்!
சின்ன வெங்காயம்-2 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு-10 கிலோ, பூண்டு-2 கிலோ இவை மூன்றையும் இடித்து, 200 லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்கள் ஊற வைத்தால்… வெங்காயக்கரைசல் தயார். நுரையை வடிகட்டி, தண்ணீர் கலக்காமல், அப்படியே பயிருக்குத் தெளிக்கலாம். இது ஒரு ஏக்கருக்குப் போதுமானது. இதை வாரம் ஒரு முறை தெளித்து வந்தால்… பூச்சித் தொல்லை இருக்காது.
தொடர்புக்கு,
ரவிச்சந்திரன்,
செல்போன்: 9443919801 .
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்