நிழல் வலை அமைப்பு அமைத்து காய்கறி சாகுபடி நல்ல லாபம்

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் பெறும் வகையில் மத்திய அரசின் ‘வேளாண் அறிவியல் மையம்’ (கிருஷ்சி விகான் கேந்திரா – கே.வி.கே.) திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளுக்கு 4.5 லட்சம் ரூபாய் மானியம், பயனாளிகள் பங்களிப்பு 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ‘இத்தாலி தொழில்நுட்பம்’ மூலம் வெயில் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் ‘நிழல் வலை அமைப்பு’ 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைத்து சொட்டு நீர் பாசனத்தில் காய்கறிகள், பூக்கள் விளைவித்து மகசூல் பெருக்குவதே திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் பல்கலை துணை வேந்தர் நடராஜன் வழிகாட்டுதல், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் பரிந்துரைப்படி, 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சொந்த நிலம் 500 சதுர மீட்டர் பரப்பளவில் நிழல் வலை அமைப்பு இரண்டு மாதத்திற்கு முன் அமைக்கப்பட்டது.

‘சிம்ரன்’ கத்தரி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி விவசாயி சக்ரபாணி நிலத்தில் நிழல் வலை அமைப்பு அமைக்கப் பட்டது. அங்கு வீரிய ஒட்டு ரகமான ‘சிம்ரன்’ கத்தரிக்காய் விளைவிக்கப் படுகிறது. செடியை ஊன்றி 60வது நாளில் காய்ப்புக்கு வந்துள்ளது. வைலட் நிறத்தில் காய்கள் பளபளப்பாக மின்னுகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் விளைவிப்பதால் நீர் செலவு குறைவு. பூச்சி தாக்குதல் இல்லை. தேவையான வெப்பம், இயற்கை உரம் பயன்படுத்துவதால் விளைச்சல் அமோகமாக உள்ளது.

சக்ரபாணி கூறியதாவது:

  • ஒட்டன்சத்திரம் காய்கறி விதைப்பண்ணையில் இருந்து சிம்ரன் நாற்று ஒன்று 50 காசுக்கு வாங்கி நிழல் வலை அமைப்பு மற்றும் வயல்களில் பயிரிட்டுள்ளேன்.
  • தற்போது காய்ப்புக்கு வந்துள்ளது. நிழல் வலை அமைப்பின் தரையில் பாலிதீன் விரிப்பு, அதற்கு கீழ் இயற்கை உரம், தென்னை நார் கழிவு பரப்பப்பட்டுள்ளது.
  • பாலிதீன் விரிப்புக்கு இடையே துளையிட்டு அதில் செடிகள் முளைக்கின்றன. இதனால் செடியின் பக்கவாட்டில் களை வளராமல் தடுக்க முடியும்.
  • நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 முதல் 100 கிலோ வரை காய்ப்பு இருக்கும். ஒரு கிலோ 45 ரூபாய் விலை போகிறது என்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கோட்டைபட்டி விவசாயி சரவணன் கூறியதாவது:

  • நிழல் வலை அமைப்பில் வீரிய ஒட்டு ரகமான ‘அபிஷேக்’ பாகற்காய்க்கொடி பயிரிட்டுள்ளேன். 8
  • 5வது நாளில் இருந்து பலன் கொடுக்கிறது.
  • பச்சை நிறத்தில் காய் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் உள்ளது.
  • காய்கறி கடைக்கு நாள் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் கிலோ 45 ரூபாய்க்கு விற்கிறேன். இயற்கை உரம், பூச்சி தாக்குதல் மிகக்குறைவு. எனினும் அவ்வப்போது வேப்ப எண்ணெய், கைத்தெளிப்பான் மூலம் இயற்கை சத்து மருந்துகள் கொடுப்பதால் காய்கள் செழிப்பாக வளர்கிறது.
  • முறையாக பராமரித்தால் பலன் கொடுத்து கொண்டே இருக்கும் என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *