பஞ்சாலைகளுக்கும் நூற்பாலைகளுக்கும் பெயர் பெற்ற ஊர் ராஜபாளையம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்தச் சிறு நகரம் இருந்தாலும், இன்றைக்கு வெயில் வாட்டி வதைக்கும் நகராகி மாறிவிட்டது. ஒரு சிறு தொழில்நகரான இவ்வூரில் இருந்துகொண்டு, அதுவும் பஞ்சுத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் இளைஞர் இயற்கை வேளாண்மையின் மீது ஆர்வங்கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல சிரமங்களைச் சந்தித்து வெற்றிகரமாக விளைச்சலை எடுத்துவருகிறார். அவர்தான் மணி.
பலரும் வேளாண்மையில் இருந்து தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இக்காலத்தில் தொழில்துறையில் இருந்து வேளாண்மைக்கு இவர் மாறியுள்ளார். இன்றைய கொள்கை வகுப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஆளுமை இவர் என்றால் மிகையில்லை.

எல்லாம் இயற்கை
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மணி பஞ்சாலைத் தொழிலில் நுழைந்தார். அதில் ஆறு ஆண்டுகள்வரை மாத ஊதியத்தில் பணிபுரிந்துவிட்டு, பின்னர்ச் சொந்தமாகப் பஞ்சாலை ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார். அதன் பின்னரே வேளாண்மைக்குள் நுழைந்தார். நண்பர் தமிழ்மணி என்பவர் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாமுக்கு மணியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ச்சியாக மணி வெற்றிகரமான காய்கறி சாகுபடியாளராக மாறிவிட்டார்.
அவருக்குச் சொந்தமாக இருப்பது அரை ஏக்கர் நிலம் மட்டுமே.
ஆனால் கூடுதலாக ஐந்து ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் காய்கறி, பழங்கள் என்று வணிகரீதியான பண்ணையை இவர் நடத்தி வருகிறார்.
உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை என்று அனைத்தையும் ரசாயன வேளாண்மைக்கு இணையாக இயற்கை முறையில் செய்துவருகிறார்.
கடினமான காய்கறி சாகுபடி
இவரது சிறப்பான சாகுபடி முறை என்று காய்கறிச் சாகுபடியைக் கூறலாம். காய்கறி, பழங்களை இயற்கை முறையில் விளைவிப்பது சற்றுக் கடினமான பணி. ஏராளமான பூச்சிகளும் நோய்களும் தாக்கும். மரப் பயிர்கள், தானியப் பயிர்கள் ஓரளவு தாங்குதிறன் கொண்டவை. ஆனால், காய்கறிகளை உடனடியாகக் கவனிக்காவிட்டால் பெரும் இழப்பை உண்டாக்கிவிடக்கூடியவை.
ஆனால், இவ்வளவு சிரமங்களைத் தாண்டி உடனடி வருவாய் தரும் பயிர் என்று பார்த்தால், அது காய்கறிப் பயிர்தான். எனவே எளிய உழவர்கள், பெரும் முதலீடு செய்ய இயலாதவர்கள் செய்ய வேண்டிய சாகுபடி முறை காய்கறி சாகுபடிதான். கீரை என்றால் 20 நாட்களில் எடுத்துவிட முடியும். வெண்டை போன்ற பயிர்கள் 45 நாட்களில் வருமானம் தரும்.
நோய்த் தொற்று தவிர்ப்பு
இப்படி உடனடியாக வருமானம் தரும் காய்கறி சாகுபடியில் மிகவும் முதன்மையானதும், மிகவும் சிக்கலானதுமான ஒரு பயிர் உள்ளது. அது கத்தரி. நமது நாட்டின் மிகப் பழமையான பயிர்களில் கத்தரியும் ஒன்று. மரபு விதைகள் அதாவது கலப்பினப்படுத்தப்படாத, பொறுக்கு விதைகள் பெரும்பாலும் நோய் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. ஆனால் கலப்பின விதைகள் வந்த பின்னர், நோயும் பூச்சியும் அதிகம் தாக்குகின்றன. ஆனாலும் மரபு விதை நாற்றுகள் இப்பகுதி உழவர்களால் உற்பத்தி செய்யப்பட்டுப் பிற உழவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த முறையில் கத்தரிச் சாகுபடியை ஒரு புதிய அறைகூவலாக ஏற்றுக்கொண்டு, இயற்கைமுறையில் செய்யத் தொடங்கினார் மணி. அருகில் உள்ள ஒரு நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை இவர் வாங்கிக்கொள்கிறார். முதலில் அந்த நாற்றுகளின் வேர்களை ஓரளவு நறுக்கி எடுத்துவிடுகிறார். பின்னர் அவற்றை அமுதக் கரைசல், பூச்சிவிரட்டிக் கரைசலில் நன்கு மூழ்க வைத்து நேர்த்தி செய்துகொள்கிறார். இதன்மூலம் வெளியில் இருந்து வரும் நோய்த் தொற்றுகள் தவிர்க்கப்படுகின்றன.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர், தொடர்புக்கு: adisilmail@gmail.com
மணி தொடர்புக்கு: 09842121562
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்