விதை நடவு முறையில் கத்திரி சாகுபடி

கத்திரிக்காய் சாகுபடி யில், நாற்றங்கால் இல்லாமலேயே, விதைகளை நேரடியாக விதைத்து, நல்ல மகசூல் பார்த்து வரும், இயற்கை விவசாயி கார்த்திகேய சிவராமன்:

 • நெல்லை மாவட்டம், வடகரை கிராமம் தான், என் சொந்த ஊர். கத்திரி சாகுபடியில், நாற்றங்கால் அமைத்து பயிரிட்டால் தான், வளமான நாற்றுகளைப் பெற்று, நல்ல மகசூலைப் பெற முடியும் என, சொல்லப்படுகிறது.
 • ஆனால், நாற்றங்கால் அமைக்காமல், விதைகளை நேரடியாக ஊன்றிப் பயிரிடும்போது, நாற்றங்கால் முறை பயிர் மூலம் கிடைக்கும் அதே மகசூல், விதை நடவு முறையிலும் கிடைக்கிறது. பயிர்களும், ஆரோக்கியமானதாகவே வளர்ந்து, நல்ல மகசூல் கொடுக்கின்றன.
 • நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிரம்பிய அனைத்து மண்ணி லும், கத்திரி நன்கு வளரும்.
 • ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட, 200 கிராம் விதை போதும்.
 • விதைக்க உள்ள நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு, 20 வண்டி மக்கிய தொழு உரத்தைப் பரப்பி நன்கு உழ வேண்டும்.
 • அதற்குப் பின், நடவு பாத்திகளில், 75 செ.மீ., இடைவெளியில் பார்கள் அமைத்து, பார்களின் கீழ்ப் பகுதியில் அடியுரம் இட வேண்டும்.நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில், 10 செ.மீ., இடைவெளியில், அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு, அதில் விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும்.
 • விதைத்த பின், மணல் போட்டு மூடி, உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.
 • பின், வாரமொரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.
 • மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • இயற்கை விவசாய முறையில், பாசனச் செலவில் மிச்சம் ஏற்படும். அவ்வப்போது களை எடுக்க வேண்டும்.
 • கத்திரி சாகுபடியில், பூச்சித் தாக்குதல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, கவனமுடன் பயிர்களைக் காக்க வேண்டும். விதைத்த, 40-50 நாட்களில், முதல் அறுவடை ஆரம்பிக்கும்.
 • காய்களை, நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளியில், விதைகள் முற்றுவதற்கு முன், அறுவடை செய்ய வேண்டும்.
 • அறுவடை செய்யும்போது, காம்பின் நீளம், 4-6 செ.மீ., இருக்குமாறு, பார்த்து கொள்ள வேண்டும்.அறுவடை செய்யப்பட்ட கத்தரியை, நானே வாடிக்கையாளர்களிடம், நேரடியாக விற்பனை செய்கிறேன். இயற்கை முறை யில் விளைவிக்கப்பட்ட காய்கறி என்பதால், காய்கள் நல்ல விலைக்குப் போகின்றன.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *