திண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்தில் உயர் தொழில் நுட்பத்தில் விளைந்த 400 கிராம் கத்தரிக்காய்களுக்கு கேரளத்தில் தேவை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையம் உள்ளது. இங்கு, இந்தோ – அமெரிக்கன் தொழில் நுட்ப வீரிய ஒட்டு ரக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள இந்த ரக கத்தரிகளுக்கு ‘ஜீவா’ என தோட்டக்கலைத்துறையினர் பெயரிட்டுள்ளனர். சாதாரண முறையில் வளர்க்கப்படும் கத்தரிக்காய் ஒன்றின் எடை 76 முதல் 84 கிராம் இருக்கும்.

அதுவே வீரிய ரக ஒட்டு விதைக் கொண்டு, உயர் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்பட்ட கத்தரிக்காய் 400 கிராம் முதல் 427 கிராம் வரை உள்ளது. கத்தரிக்காய் அதிக சதைப் பிடிப்புடன் உள்ளது. அதன் உள்ளே குறைந்தளவே விதைகள் இருப்பதால் கேரள மக்களின் உணவில் மிளகுஅரிசி சாதத்திற்கான மசியலிலும், பஜ்ஜியிலும் அதிகம் பயன்படுகிறது.
இதனால் கேரளத்தில் ஜீவா ரக கத்தரி தேவை அதிகரித்து வருகிறது. இதுதவிர வீரிய ரக ஒட்டு கத்தரி வகைகளில் ‘சுப்ரியா, 614’ உள்ளிட்ட ரகங்கள் காய்கறி மகத்துவ மையத்தில் விளைவிக்கப்படுகின்றன.
இம்மைய உதவி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது:
ஜீவா (வீரிய ஒட்டு ரகம்) கத்தரிக்காய் 165 நாள் பயிர். நாட்டு கத்தரிக்காய் எடை அதிகளவில் இருக்காது. ஆனால் ஜீவா கத்தரிக்காய் ஐந்து முதல் 6 மடங்கு எடை அதிகமுள்ளது. ஒரு ஏக்கரில் 30 டன் கத்தரிக்காய்கள் கிடைக்கும். இதனால், இந்த சாகுபடி முறையை விவசாயிகள் பின்பற்ற வலியுறுத்தி வருகிறோம், என்றார்.
கொட்டப்பட்டி கத்தரிக்காய் புளிக்குழம்பில் ருசியை கூட்டும் தரமிக்கது. அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
எனவே, அந்த கத்தரியை உயர் தொழில் நுட்பத்தில் ‘மண் போர்வை (மஞ்சிங் சீட்) மற்றும் சொட்டுநீர் பாசன முறைப்படி பயிரிட முடிவு செய்துள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்