உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாராபுரம், அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 தாராபுரம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையோரமாக ஆண்டு தோறும் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட கரும்பு, தற்போது அறுவடை செய்யப்பட்டு அதிலிருந்து உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்பு இயந்திரத்தில் வைத்து அறைக்கப்பட்டு அதிலிருந்து கரும்புச்சாறு எடுக்கப்படுகிறது. அந்தச் சாறு சுத்தம் செய்யப்பட்டு பெரிய வார்ப்பில் ஊற்றப்பட்டு காய்ச்சப்படுகிறது. நன்கு காய்ச்சப்பட்ட பின்பு அந்தச் சாறு மஞ்சள் நிறத்தில் பாகு நிலைக்கு வரும். அந்தப் பாகு, மற்றொரு பெரிய வார்ப்பில் மாற்றப்படும். அதன்பின்பு தொழிலாளர்கள்

அந்தப் பாகுவை துணியில்வைத்து உருட்டி, உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். அவை 30 கிலோ எடை கொண்ட சிப்பமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கும், தனியார் வெல்ல மண்டிக்கும் அனுப்பப்படுகிறது.

 இதுகுறித்து உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலங்கியம், கீரனூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்வதற்கு உழவு, நடவு, உரச்செலவு என ரூ.31 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

கரும்புப் பயிர் அறுவடை செய்வதற்கு 12 மாதங்கள் ஆக வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியிலிருந்து ஆள்கள் வருகிறார்கள். அவர்களுக்கு, தலா 30 கிலோ எடை கொண்ட 4 சிப்பத்திற்கு ரூ.450 கூலி வழங்கப்படுகிறது.

அதேபோல், வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு 4 சிப்பத்திற்கு ரூ.650 கூலியாக வழங்கப்படுகிறது.

 தற்போது ஒர் ஏக்கருக்கு 100 சிப்பங்கள் வரை வெல்லம் கிடைக்கிறது. அதற்கு, ஆண்டு முழுவதும் நடவுப் பணியில் இருந்து அறுவடை வரை ரூ.58 ஆயிரம் செலவாகிறது. இந்நிலையில், தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.940 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.94 ஆயிரம் வரை கிடைக்கும். எனவே, அரசு சிப்பத்திற்கு ரூ. 1,400 என விலை நிர்ணயம் செய்து அறிவித்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *