கரும்பு பயிரிடும் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் முறையாக பயிரை பராமரித்தால் நல்ல லாபமடையலாம்
பொதுவாக துளைப்பான்கள் வகை பூச்சிக்களாக இளங்குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, நுனிக் குருத்துப் புழு, வேர்த்துளைப்பான் ஆகியவை கரும்புக்கு எதிரியானவை.
மேலும் பைரில்லா இலை தத்துப்பூச்சி, செதில் பூச்சி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சிகள் ஆகியவை சாறு உண்ணும் பூச்சி வகைகள் மற்றும் வேர் பகுதியில் வாழும் பூச்சிக்களான கரையான் மற்றும் வெள்ளை வேர்ப்புழு ஆகியவை கரும்பு பயிரை சேதப்படுத்தி விவசாயிகளை நஷ்டமடையச் செய்யும்.
ஒருங்கிணைந்த பூச்சி தடுப்பு முறை:
- பூச்சி நோய் தாக்காத காரணைகளை தேர்வு செய்ய வேண்டும்.
- ஆழ உழவு செய்து கரையான் வேர்ப் புழுக்களை வெளிக் கொண்டு வரவேண்டும்.
- குருத்துப்புழுவின் தொல்லை குறைய கரும்பு பயிரை முன் பட்டத்தில் நடவேண்டும். (குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடவேண்டும்).
- கரும்பின் காய்ந்த தோகைகளை 3-ல் இருந்து 5 நாள்களில் பார்களின் மேல் பரப்பில் பரப்புவதன் மூலம் குருத்துப் புழுவின் தொல்லை குறையும்.
- உளுந்து, பச்சை பயறு, சோயா போன்ற ஊடுபயிர்கள் கரும்பில் குருத்துப் புழுவின் தொல்லைகளை குறைக்கும்.
- மண்ணின் ஈரம் தொடர்ச்சியாக இருக்கும் வண்ணம் நீர் பாய்ச்சுவதன் மூலமும் குருத்துப்புழுவின் பாதிப்பு குறையும்.
- பயிர் நடப்பட்டு 40 முதல் 65 நாள்கள் வரை குருத்துப் புழு தாக்கும் பகுதிகளில் கரும்பின் கீழ்த்தண்டு இரண்டரை அங்குலம் மறையுமாறு மண் அணைக்க வேண்டும்.
- கரும்பின் காய்ந்த சருகுகளை 5-ல் இருந்து 7 மாதங்களில் உரித்து விடுவதால் இடைக்கணு புழு, செதில்மீன் பூச்சி, வெள்ளை ஈ, மாவுப் பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் குறையும்.
- உரம், நீர் நிர்வாகம் ஆகியவற்றை சீரிய முறையில் கையாள வேண்டும். இதே முறையில் பராமரித்தால் வெள்ளை ஈ, பைரில்லா சத்துப் பூச்சிகளின தாக்குதல்களும் குறையும்.
உயிரியல் தடுப்பு முறைகள்:
- இளங்குருத்துப் புழுவை கட்டுப்படுத்த, கிரானுலோசில் வைரஸ் கிருமிகளை உபயோகிக்க வேண்டும். (அ) 120 லிட்டர் மியாப்சிஸ் இன்பரஸ் ஒட்டுண்ணி விடவேண்டும்.
- இடைக்கணுப்புழுவை கட்டுப்படுத்த டிரைக்கோகிரமா கையோனிஸ் குளவி முட்டை ஒட்டுண்ணி விடவேண்டும்.
- பைரில்லா பூச்சி வகை தடுப்பு, எப்ரிக்கேனியா மேலானோலுக்கா ஒட்டுண்ணி விடவேண்டும்.
- நுனி குருத்துப்புழுவைத் தடுக்க, ஐசோடிமா ஜவான்சிஸ் ஸ்டோனாபிரகான் புழு ஒட்டுண்ணிகள் விடவேண்டும்.
பூச்சிக் கொல்லி மருந்து:
- பொருளாதார சேதநிலைக்கு மேல் தாக்குதல் தென்பட்டால் பூச்சிக் கொல்லி மருந்தை தெளிக்கலாம்.
- இளங்குருத்துப் புழுவை தடுக்க ஒரு ஏக்கருக்கு எண்டோசல்பான் 500 மில்லி (அல்லது) 10 கிலோ பியூரடான் இடவேண்டும்.
- சாறு உண்ணும் பூச்சிகளைத் தடுக்க காய்ந்த சறுகுகளை களைந்த பின்னர் ஒரு ஏக்கருக்கு எண்டோசல்பான் 500 மில்லி அல்லது மாலத்தியான் ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறி:
- இளங்குருத்துப் புழு இடைக்கணுப்புழு, தட்டுப் புழு போன்றவற்றை இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் முறைகளையும் கையாளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்