கரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள்

கரும்பு பயிரில் சோகை உரிப்பதின் பலன்கள் மற்றும் கரும்பு கத்தியை பயன்படுத்தி காய்ந்த சோகைகளை உரித்து ஆதாயம் பெறுவது குறித்து வேளாண் விஞ்ஞானி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கரும்பு பயிரின் இலை அல்லது சோகை ஒரு தொழிற்சாலை போல் செயல்பட்டு மாவுச்சத்தை தயாரிக்கிறது. ஆனால் வயதான பழுப்பு ஏறிய இலைகளால் ஒளிச்சேர்க்கை செய்ய இயலாது. இவை கரும்பில் சேகரிக்கப்பட்டுள்ள சத்துக்களை சுவாசம் மூலம் குறைப்பதுடன் தனிக்கரும்பின் எடையினையும் அதிலுள்ள சர்க்கரைச் சத்தின் அளவினையும் குறைத்து விடுகின்றன. எனவே கரும்பில் சோகை உரிப்பது மிகவும் அவசியம்.

சோகை உரிப்பதின் பலன்கள்:

 • கரும்புத்தண்டில் உள்ள பருக்கள் முளைப்பதில்லை. தண்டிலுள்ள வேர்களும் வளர்வதில்லை. இதனால் கரும்பின் தரம் மற்றும் எடை அதிகரிக்கிறது.
 • பூச்சித்தாக்குதல் குறிப்பாக இடைக்கணுப்புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் சேதம் குறைகிறது.
 • சோகை உரித்த வயலினுள் சென்று நீர் பாய்ச்சுவதும் பயிர் பாதுகாப்பு மேற்கொள்வதும் எளிதாகிறது.
 • எலித் தொல்லைகள் வெகுவாகக் குறையும்.
 • காற்றோட்ட வசதி அதிகம் ஏற்படுவதால் கரும்பின் வளர்ச்சி மற்றும் தண்டின் பெருக்கம் அதிகரிக்கிறது.
 • உரிக்கப்பட்ட சோகைகள் சாலின் மீது போர்வை போன்று இருந்து நீர் எளிதில் ஆவியாகாமல் செய்கிறது.
 • உரிக்கப்பட்ட சோகைகள் நிலத்தில் மக்குவதால் மண் வளம் அதிகரிக்கிறது. கரும்பு அறுவடை எளிதாகிறது.
 • கரும்பு மகசூல் ஏக்கருக்கு நான்கு டன்களும் சர்க்கரை கண்டு முதல் அரை சதமும் அதிகரிக்கிறது.
 • சர்க்கரை சத்து அதிகமிருப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது.
 • இவ்வாறு பலன்கள் இருந்தும் கூலி ஆட்கள் பற்றாக்குறையாலும், கரும்பின் சுணையும், ரம்பம் போன்ற இலை விளிம்புகளும் ஆட்களின் கையில் சோகை உரிக்கும்போது ரணத்தையும் வலியையும் உண்டாக்குவதாலும் மிகக்குறைந்த அளவிலேயே விவசாயிகள் இதனை செய்து வருகின்றனர்.
 • இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வடிவமைக்கப்பட்ட எளிய பண்ணைக்கருவி தான் கரும்புக்கத்தியாகும். இக்கருவியினைப் பயன்படுத்தி சோகை உரிக்கும் ஆட்கள் சோகை மீது கை வைக்காமலேயே சோகையை எளிதில், சுலபமாக உரித்து விடலாம்.
 • ஒரு கரும்பில் உள்ள சோகைகளை மேலிருந்து கீழ் நோக்கி கத்தி வைத்து இழுக்க கரும்புத் தண்டில் எவ்வித காயமும் இன்றி குறைந்த காலத்தில் உரித்து விடலாம்.
 • சோகைகளை 5 மற்றும் 7வது மாதங்களில் இருமுறை உரிக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆட்கள் போதுமானது.
 • எனவே  கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் கரும்புக் கத்தியினைப் பயன்படுத்தி காய்ந்த சோகைகளை உரித்து பண ஆதாயம் அடைவதுடன் மண் வளத்தினையும் மேம்படுத்திடலாம் என தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *