கரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

sugarcane
கரும்பு பயிரில் இடைக்கணு, நுனிக்குருத்து மற்றும் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இடைக்கணுப்புழு:

கரும்பின் கணுயிடைப் பகுதியில் துளைகள் காணப்படும், துளைப்பக்கத்தில் புழுவின் கழிவு வெளித்தள்ளியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான கணு சிறுத்து இருக்கும். காற்று வீசினால் உடைந்து போகும். கரும்பு நடவு செய்த 4 முதல் 6 மாதம் வரையிலும், ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் இப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

டிரைக்கோகிரம்மா கைலோனீஸ் என்ற முட்டை ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2cc என்ற வீதம் நடவு செய்த 4 -வது மாதம் முதல் 6-வது மாதம் வரை 15 நாள் இடைவெளியில் 6 முறை கட்ட வேண்டும்.

டெடராஸ்டிக்கஸ் என்ற கூட்டுப்புழு ஓட்டுண்ணியை நடவு செய்த 5, 6 மற்றும் 7-வது மாதங்களில் ஏக்கருக்கு 1,500 குளவி எண்ணிக்கையில் விட வேண்டும்.  நடவு செய்யப்பட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் இப்புழுவை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

நுனிக்குருத்து புழு:

இளம் பழுப்பு நிற புழுக்கள் இலையின் தடுநரம்பை துளைத்து சென்று பின்னர் தண்டின் வளரும் பகுதியை தாக்கும். இதனால் நுனிக்குருத்து காய்ந்து பக்கத்து தோகையில் சிறு சிறு துளைகள் காணப்படும். ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் பாதிப்பு இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

கரும்பு நட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் கட்டுப்படுத்த முடியம். தண்ணீர் தேங்கும் நிலங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும்.

வேர்ப்புழு:

வேர்ப்புழு கரும்பின் ஆதார வேர்களையும், மண்ணில் புதைந்துள்ள கணுக்களையும் தாக்கி உண்ணும். கீழ் தோகைகள் மஞ்சளாகி பின்னர் தூர் முழுவதும் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

கோடை உழவை ஆழமாக உழுது கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவந்து பறவைகளுக்கு உணவாக்கலாம். உயிரியல் முறையாக பிவேரியா பேசியானா அல்லது மெட்டாரைசியம் அனிசோப்பிலியே எனும் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் தொழு உரத்துடன் கலந்து நடவு செய்ய வேண்டும்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *