கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.
- ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் பின் அந்த நிலத்தில் மாற்றுப் பயிர் ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும்.அதன் பின்னரே கரும்பை மீண்டும் பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல், வாழை, மஞ்சள், நிலக்கடலை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும் வேளாண் துறை யோசனை தெரிவித் துள்ளது.
நிலம் தயாரித்தல்
- ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ. ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும்.
- டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.
- மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் பிடிக்கலாம்.
- எருதுகளைக் கொண்டு உழவு செய்வதாக இருந்தால் முதல் உழவை இறக்கைக் கலப்பை மூலம் செய்யலாம். 2-வது மற்றும் 3-வது உழவுக்கு நாட்டுக் கலப்பையை உபயோகிக்கலாம்.
- மண் நன்றாக மிருதுவாகும் வரை நாட்டுக் கலப்பையை கொண்டு உழ வேண்டும். பின்னர் பார் பிடிக்கும் கலப்பை மூலம் பார் பிடிக்கலாம்.
உரம் நிர்வாகம்
- இயற்கை உரங்களான தொழுஉரத்தை ஹெக்டேருக்கு 25 டன்கள் வரை கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். இதனால், மண் வளம் மேம்படுவதுடன் மண் நலமும் பாதுகாக்கப்படுகிறது.
- பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பை பயிரிடப்பட்டிருந்தால் இறக்கை கலப்பையை கொண்டு மடக்கி உழுது பின்னர் 2 வாரங்களுக்குப்பின் உழவு செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கேற்ப அடி உரமாக ரசாயன உரங்கள் இட வேண்டும்.
பார் அமைத்தல்
- சாகுபடி செய்யும் ரகம், நீர் பாய்ச்சுவதற்கு வசதி மற்றும் நிலத்தின் வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் நன்கு தூர்விட்டு வளரும் ரகம் பயிரிடுவதாக இருந்தால் 90 செ.மீ. பாருக்கு பார் இடைவெளி இருக்க வேண்டும்.
- நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ. இடைவெளிவிடுதல் வேண்டும். இயந்திரங்கள் மூலம் நடவு, அறுவடை செய்ய 150 செ.மீ. அகலப் பார்கள் அமைக்க வேண்டும்.
- கரும்புப் பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்தப் பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.
- ஆழமான சாலில் கரும்பு நடவு செய்தால் நன்கு மண் அணைக்க ஏதுவாக இருப்பதுடன், அறுவடை செய்யும் வரை கரும்பு சாயாமல் நல்ல மகசூல் கொடுக்கும்.
- கரும்பு பயிரிடப்படும் பட்டங்கள் தமிழகத்தில் பொதுவாக டிசம்பர் முதல் மே மாதம் வரை 3 பட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. டிசம்பர், ஜனவரியில் முதல் பட்டமாகவும், பிப்ரவரி, மார்ச்சில் நடுப்பட்டமாகவும், ஏப்ரல், மே மாதத்தில் பின்பட்டமாகவும் பயிரிடப்படுகிறது.
- சிறப்புப் பட்டமாக ஜூன், ஜூலையில் கோவை, திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கரும்பு நடவு செய்யப்படுகிறது.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோவை-641007. தொலைபேசி எண்:04222472621
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்