“கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையை, கரும்பு தோகை மூலம் குறைக்க முடியும்’ என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையினை, பசும் கரும்பு தோகையின் மூலம் குறைக்க முடியும். வேளாண் கழிவுகளாக உள்ள கரும்புதோகையை, உபயோகமுள்ளதாக மாற்றலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி விரிவாக்கக் கல்வி இயக்குநர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
- தமிழகத்தில் 17வது கால்நடை கணக்கெடுப்பின் படி, சுமார் 91.41 லட்சம் மாடு, 16 லட்சம் எருமை, 81.77 லட்சம் வெள்ளாடு மற்றும் 55.93 லட்சம் செம்மறியாடுகள் உள்ளன. இதற்கு தேவைப்படும் பசுந்தீவனத்தில் சுமார் 100.64 லட்சம் டன் பற்றாக்குறையாக உள்ளன.
- அரசின் விலையில்லா ஆடு மற்றும் மாடுகள் வழங்கும் திட்டத்தினால், இப்பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். இந்த பற்றாக்குறையை, பசும்கரும்புத் சோகை மூலம் குறைக்கலாம்.
- தமிழகத்தில் சுமார் 29.33 லட்சம் எக்டரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 4.46 மில்லியன் டன் பசும் கரும்புதோகை வேளாண் கழிவாகக் கிடைக்கிறது.
- இவை, வீடுகளுக்குக் கூரைவேயவும், கரும்பு வயல்களில் எரிக்கப்பட்டும் வீணாகிறது.
- தமிழகத்தில் கரும்பு சாகுபடி நடக்கும் (டிச., முதல் பிப்.,) போது கிடைக்கும் மற்ற வேளாண்கழிவுகளுடன், பசும் கரும்புதோகை சேர்த்து தீவனமிட்டால், கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவைக் குறைத்து லாபம் ஈட்ட முடியும்.
- பசும்புல்லை விட கரும்புதோகையில் புரதச்சத்து(36%) குறைவாக இருந்தாலும், நார், கொழுப்பு, கரையும் மாவு உள்ளிட்ட ஊட்டச் சத்துக்கள், வைக்கோலுக்கு இணையாக உள்ளன. மேலும், நார்சத்தின் செரிமானத்தை குறைக்கும் “லிக்னின்’ எனும் ரசாயனம் 8-9 சதவீதம் உள்ளதால், இது செரிமானத்தன்மை மிகுந்த வேளாண்கழிவாக உள்ளது.
- கரும்பு அறுவடை காலங்களில் கிடைக்கும் பசும் கரும்புதோகையை மட்டுமே தீவனமாக அளித்தால், சாணம் மற்றும் சிறுநீர் வழியாக சுண்ணாம்பு, மணிச்சத்து(பாஸ்பரஸ்) உடலிலிருந்து வெளியேறும். தீவனத்துடன் சுண்ணாம்புத் தூள் இரண்டு சதவீதம், குடிநீர் தொட்டி உட்புறம் நீர்த்த சுண்ணாம்பை தடவுதல், உலர வைத்து பின்பு தண்ணீர் வைத்தல் போன்ற முறைகளால் இதனை கட்டுப்படுத்தலாம்.
- சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள மர இலைகளை, தினமும் கரும்புதோகையுடன், தீவனத்தில் 10 முதல் 12 கிலோ சேர்த்து அளிக்கலாம்.
- மணிச்சத்தின் இழப்பினை தடுக்க கோதுமை தவிடை தீவனத்துடன் சேர்க்கலாம். சுவைகுறைவாக இருக்கும் உலர்ந்த கரும்புதோகையை சிறிது,சிறிதாக வெட்டி, சமையல் உப்பை தெளித்தால், கால்நடைகள் வீண் செய்யாது. வைகோலிற்கு மாற்றாக இதைத்தீவனமாக பயன்படுத்தலாம்.
- பசும் கரும்புதோகையைப் பதப்படுத்த முடியாத விவசாயிகள் உலரவைத்து, பிற வேளாண்கழிவுகள், கலப்புத் தீவன வகைகளுடன் சேர்த்து முழுத்தீவனமாக கொடுக்கலாம். வேளாண் கழிவுகளில் உலர்ந்த நிலக்கடலைக் கொடி மற்றும் ÷õளத்தட்டை குறிப்பிட்ட அளவில் கரும்புதோகைகையுடன் சேர்ப்பதால், நல்ல செரிமானத்தன்மையுள்ள தீவனமாக இருக்கும்.
- மேலும், வளரும் கிடாரிகன்றுகளுக்கு கரும்புதோகை 30 சதவீதம், கடலைக்கொடி 50 சதவீதம், மக்காச்÷õளம் 6 சதவீதம், கடலைபிண்ணாக்கு 14 சதவீதம், சூரியகாந்தி பிண்ணாக்கு 5 சதவீதம், பருத்திக்கொட்டை பிண்ணாக்கு 5 சதவீதம், மரவள்ளிக்கிழங்கு திப்பி 7 சதவீதம், சமையல் உப்பு 1 சதவீதம் மற்றும் தாது உப்பு இரண்டு சதவீதம் என்ற அளவில் அளிப்பதால், நாளொன்றுக்கு சுமார் 325-330 கிராம் வரை எடை கூடும். ஒரு கிலோ எடைக்கூட, 7.50 முதல் 8.0 வரை முழுத்தீவனம் தேவைப்படும்.
- குறைந்த அளவு பால் கொடுக்கும் கறவை மாட்டிற்கு கரும்புதோகை 30 சதவீதம், கடலைக்கொடி 30 சதவீதம், 40 சதவீத கலப்புத் தீவனத்துடன் கலந்து கொடுப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
- செம்மறியாடுகளுக்கு கரும்புதோகை 30 சதவீதம், கடலைக்கொடி 30 சதவீதம், மக்காச்÷õளம் 6 சதவீதம், கடலைபிண்ணாக்கு ஐந்து சதவீதம், சூரியகாந்தி பிண்ணாக்கு ஐந்து சதவீதம், பருத்திக்கொட்டை பிண்ணாக்கு 5.5 சதவீதம், மரவள்ளிக்கிழங்கு திப்பி 16 சதவீதம், சமையல் உப்பு ஒரு சதவீதம் மற்றம் தாது உப்பு இரண்டு சதவீதம் என்ற அளவில் தீவனம் அளிக்கலாம்.
- ஒரு எக்டரில் விளைந்த கரும்புதோகையை,
மேற்கூறிய தீவனமுறையில் மூன்று மாதம் வயதுடைய 60-70 செம்மறியாட்டுக் குட்டிகளை, ஒரு வயது வரை வளர்க்கலாம். - வேளாண் கழிவான கரும்புதோகையை, இந்த முறையில் பயன்படுத்தினால், தமிழகத்தில் பசும்தீவனப் பற்றாக்குறையைப் பெருமளவு குறைக்க முடியும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்