நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர்.
விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு கரும்பு ரகங்களை தேர்வு செய்து நடமுடியாது. ஆலை நிர்வாகம் எந்த ரகத்தை நடவு செய்யச் சொல்கிறார்களோ அந்த ரகங்களை மட்டுமே விவசாயிகள் நடவு செய்ய வேண்டும்.
கோயமுத்தூர் விவசாய பல்கலைக் கழகம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், இ.ஐ.டி., பாரி ஆலை ஆகியன கரும்பில் பல ரகங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.
நெல்லிக்குப்பம் ஆலை பகுதியில் கோக 94012 ரக கரும்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளுக்கு வழங்கினர். இந்த ரக கரும்பு அதிக பரப்பில் விவசாயிகள் நடவு செய்தனர்.
வான்பாக்கத்தில் நடவு செய்யப்பட்ட கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்கியுள்ளது. இந்நோயைக் கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இந்நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. நோய் கண்ட பயிர்களை வேரோடு பிடுங்கி தீவைத்து கொளுத்த வேண்டும்.
நோய் தாக்கிய வயலுக்கு அடிக்கடி தண்ணீர் வைக்கக் கூடாது. நோய் அதிகம் தாக்கினால் கரும்பை அறுவடை செய்து விட வேண்டும் என்பதே ஆலையின் பரிந்துரை.
ஒரு புதிய ரகத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முன் ஆலைக்குச் சொந்தமான நிலத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பயிர் செய்து நோய் தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். நோய் தாக்குதல் இல்லாவிட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
ஆலை நிர்வாகம் பரிந்துரை செய்த ரகத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டு அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே நஷ்டஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்