கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த வழிகள்

விவசாயிகள் கரும்பை பயிரிடும்போது அதை பல்வேறு விதமான பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் கரும்பு பயிரில் அதிக லாபம் ஈட்ட முடியும். இந்த கரும்பை சில வகையான பூச்சிகள் தாக்குவதால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த கரும்பை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் புதுச்சேரி பூச்சியல் துறை வல்லுநர் நி. விஜயகுமார் கூறியதாவது:

பல்வேறு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை, பயிருக்கு நன்மை பயக்கும் உயிரிகளை பயன்படுத்தி அழிக்கும் முறை  தற்போது பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு உயிரிகளை பயன்படுத்தி பூச்சிகளை அழிப்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்.  விவசாயிகளுக்கு செலவும் குறையும்.

கரும்பு பயிரை தற்போது இரு தண்டு துளைப்பான்கள் தாக்குகின்றன. விவசாயிகள் முறையான வழிகளை பயன்படுத்தி இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

இளம் குருத்துப் புழு:

 • இந்த பூச்சிகள் கரும்பு பயிர் செய்த 30 நாட்களுக்கு மேல் 90 நாட்களுக்குள் தாக்கும்.
 • இப் பூச்சிகள் தாக்கினால் 26 65 சதம் தலைக் குருத்துக்களும், 06 27 சதம் இரண்டாம் நிலை குருத்துக்களும், 75 சதம் மூன்றாம் நிலை குருத்துக்களும் காய்ந்துவிடும்.
 • தாக்கும் விதம்: இளம் குருத்துப் புழு பூச்சியானது இளம் மஞ்சள் கலந்த பழுப்பு வண்ணத்தில் புழு போல் காணப்படும். இலையின் அடியில் இடப்படும் முட்டைகள் பொரித்த பின்னர் இளங்குஞ்சுகள் செடியின் அடிப்பாகத்தை துளைத்து செடியில் ஒரு செ.மீ. மேற்பகுதிக்குச் சென்று தண்டை துளைக்கும்.
 •  தாக்குதலின் அறிகுறிகள்:இந்த வகை பூச்சித் தாக்குதலை சில அறிகுறிகளால் அறிந்துக் கொள்ளலாம். தாக்கப்பட்ட கரும்பின் நடுக்குருத்து வாடி, காய்ந்து அழுகிவிடும். அழுகிய குருத்தினுள், சிறு ஈ வகைப் பூச்சிகளின் புழுக்களைக் காணலாம். மண் மட்டத்தின் ஒரு செ.மீ. உயரத்தில், புழுக்கள் உள்ளே சென்ற துவாரத்தை தண்டினில் காணலாம். தரையிலிருந்து 410 செ.மீ. உயரத்தில் அந்தப் பூச்சி வெளிவரும்

 தடுக்கும் முறைகள்:

 • கரும்புடன் ஊடு பயிராக பாசிப்பயறு, உளுந்து, சோயா, மொச்சை போன்றவற்றை பயிரிடலாம்.
 • காய்ந்த நடுக் குருத்துக்களையோ அல்லது முழுவதும் தாக்கப்பட்ட பயிரினையோ நீக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி அமைத்தல், ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தல் ஆகியவற்றின் மூலம் இவ்வகையான பூச்சிகளை அழிக்கலாம்.
 • இலைகளில் உள்ள முட்டைகளை நீக்கி அழித்தல், “டிரைக்கோகிராமா கைலோனிஸ்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி விடுதல், வரப்பு ஒரங்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயிறு செடிகளை பயிரிடுதல், பயிர் நட்ட 45-ம் நாள் மண் அணைத்தல், வேப்பம் குருணை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ இடுதல், வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 100 கிலோ இடுதல், வேப்ப எண்ணெய் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பூச்சித் தாக்குதலை தடுக்க முடியும்.

 இடைக்கணுப் புழு:

 • இந்த வகையான புழுக்கள் (பூச்சிகள்), கரும்பு பயிர் நட்ட 90 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை தாக்கும்.
 • இந்த பூச்சி கரும்பின் 75 சதம் கணுப் பருவம், 60 சதம் அறுவடைப் பருவம், மேல்மட்ட இளம் இடைக்கணுக்கள், மடிந்த கரும்பின் கணுக்கள் ஆகியவற்றை தாக்கும்.
 • இதனால், 56 சத மகசூல் இழப்பு, மற்றும் 40 சத சர்க்கரை இழப்பு ஏற்படும்.  இடைக்கணுப் பகுதியில் இப்புழுவினால் ஏற்பட்ட துவாரங்கள் தென்படும். துவாரங்கள் வழியாக வெளியே கழிவு தள்ளப்பட்டிருக்கும்.
 •  பூச்சி தாக்குதலுக்குள்ளான கரும்பைப் பிளந்து பார்த்தால் உள்ளே வெண் பழுப்பு மற்றும் முதுகில் கருநீல வரிசையான புள்ளிகள் கொண்ட நான்கு கோடுகளையுடைய புழுக்களை காணலாம்.
 •  தாக்குதலின் அறிகுறிகள்: சேதமுற்ற பகுதி செந்நிறமாக காணப்படும்.
 • சேதமுற்ற இடைக்கணுக்கள் மற்ற கணுக்களை விட சிறியதாகவும் மெலிந்தும் காணப்படும்.
 • கரும்பு காய்ந்துவிடவும் வாய்ப்பு உண்டு. மேலும் பக்கக் குருத்துகள் அதிகமாக வரும்.

தடுக்கும் முறைகள்:

 • வடிகால் வசதிகளை நன்றாக ஏற்படுத்த வேண்டும்.
 • கரும்பின் காய்ந்த சோலைகளை 5 அல்லது 7- வது மாதத்தில் நீக்க வேண்டும்.
 • தேவைக்கு அதிகமான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.

 கட்டுப்படுத்தும் வழிகள்:

ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி அமைத்தல், ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தல், “டெலினோமஸ் பெனிபிசியன்ஸ்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை வயலில் இடுதல், “டிரைக்கோகிராமா கைலோனிஸ்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி விடுதல், வரப்பு ஒரங்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயறுச் செடிகளைப் பயிரிடுதல், வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ போடுதல் ஆகியவற்றின் மூலம் இதனைத் தடுக்கலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *