கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு புதிய முறையான, செம்மைக் கரும்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது.
குறைந்த விதை, குறைந்த நீர், தேவைக்கு ஏற்ப உரம், ஊடுபயிர் ஆகியவற்றால் அதிக மகசூல் பெறுவதற்கு, செம்மைக் கரும்பு சாகுடி என்ற புதிய தொழில்நுட்பம் உதவுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் அளிக்கும் பரிந்துரைகள்:
- 2 முதல் 3 பருவுள்ள விதைக் கரணைகளை, நேரடியாக நிலத்தில் நடுவதற்குப் பதில், செம்மைக் கரும்பு சாகுபடி முறையில் விதைக் கரணையில் ஒரு பருவை மட்டும் வெட்டி எடுத்து, குழித்தட்டு மூலம் கரும்பு நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
- விதைக் கரணையில் இருந்து பருக்களை வெட்டுக் கருவி மூலம் வெட்டி எடுத்து, மக்கிய தென்னை நார் கழிவு நிரப்பிய பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் நீர் ஊற்றி, முளைக்க வைக்க வேண்டும்.
- 25 முதல் 35 நாள் வயதுள்ள நாற்றுக்களை நடவேண்டும். இதனால் பழைய முறையில் 2 மாதத்தில் ஏற்படும் வளர்ச்சியை, ஒரே மாதத்தில் பெறமுடியும்.
- வயலில் வரிசைக்கு 5 அடி அகலம் விட்டு, நாற்றுக்களுக்கு இடையே 2 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.
- பழைய முறையில் ஏக்கருக்கு 48 ஆயிரம் விதைக் கரணைகளை நட்டு, இறுதியில் 25 ஆயிரம் எண்ணிக்கை கரும்புகளைப் பெறுவதற்குப் பதில், ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுக்கள் மட்டும் நட்டு, 45 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை கரும்பு எண்ணிக்கை பெறமுடியும் என்று விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவிக்கிறது.
- இளம் நாற்றுகளில் அதிக கிளைகள் விட்டு சீரான வளர்ச்சி காணப்படுகிறது.
- காற்றோட்டம் சூரிய, ஒளி உள்புகுதல் அதிகரிக்கிறது.
- தேவையான அளவு ஈரப்பதம் அளிக்க சீரான நீர் நிர்வாகம் தேவை. வயலில் அதிக நீர் தேக்கம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
- புதிய நாற்று நடவு முறையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நீர் தேவையை குறைக்க முடியும்.
- சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 80 சதவீதம் வரை நீரை சிக்கனப்படுத்தலாம்.
- அதிக அளவில் ரசாயன, பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல், உயிரி முறையில் பூச்சி நிர்வாகம் சிபாரிசு செய்யப்படுகிறது.
- இதனால் நிலத்தில் நீண்டகால பயனைப் பெறமுடியும்.
- கரும்பில் காராமணி, உளுந்து, பயறு, கத்தரி, கொண்டைக் கடலை போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டு அதிக லாபம் பெறமுடியும்.இதனால் களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும்.நிலத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த முடிகிறது.
- செம்மைக் கரும்பு சாகுபடி மூலம் நீர் தேவை 30 சதவீதம் வரை குறைகிறது
- மகசூல் ஏக்கருக்கு 50 முதல் 70 டன் வரை கிடைக்கும்.
- ஊடுபயிர் மூலம் கூடுதல் வருவாய் அதிகரிக்கிறது.
- கரும்பு எண்ணிக்கை உயர்வதுடன் எடையும், நீளமும் அதிகரிக்கிறது.
- கரணையில் இருந்து நாற்றுக்காக பருக்களை வெட்டி எடுத்தபின், கரும்பை ஆலை அரவைக்கு அளித்து விடலாம்.
- விதைக் கரணைச் செலவில் 75 சதவீதம் குறைகிறது என்றும் பரிந்துரைகள் தெரிவிக்கின்றன.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்