செம்மைக் கரும்பு சாகுபடி!

காவிரி டெல்டாவில் நெல்லுக்கு மாற்றாக 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறை, குறைந்த செலவில் கூடுதல் மகசூல் போன்ற காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறினர்.

ஆனால், கரும்பு சாகுபடியிலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை, பல ஆண்டுகளாக ஒரே பயிர் பயிரிடப்பட்டதால் நிலத்தின் வளமும் குறைந்துவருகிறது. இதனால் கரும்பு சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தைத் தேடியபோது, ‘செம்மைக் கரும்பு சாகுபடி’ கைகொடுத்தது. திருந்திய நெல் சாகுபடி முறையில் எப்படிக் குறைந்த செலவு, அதிக மகசூல் என்பதுதான் இலக்கோ, அதேபோலத்தான் செம்மைக் கரும்பு சாகுபடியிலும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தச் சாகுபடி முறை கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போது இந்தச் சாகுபடி மீது விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

பராமரிப்பு எளிது

செம்மைக் கரும்பு சாகுபடிக்குத் தண்ணீர் குறைவாக இருந்தால் போதும்; அதிகக் கரும்புக் கரணை தேவையில்லை; பராமரிப்புச் செலவு குறைவு; கரும்பை ஒவ்வொரு விவசாயியும் பதியம் போட வேண்டியதில்லை. ஏற்கெனவே கரும்பைப் பிரத்யேகமாக நர்சரியில் பதியம் போட்டுப் பயிருக்குத் தேவையான சத்துகளை எல்லாம் கொடுத்து வைத்திருப்பார்கள், அந்தக் கரும்புப் பயிரை நம் நிலத்தில் பயிரிட்டால் போதும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே பேட்டை கிராமத்தில் முன்னோடி விவசாயி வி.ராமச்சந்திரனின் வயலில் செம்மைக் கரும்பு நாற்றுப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் காவிரிப் பாசன மாவட்டம் முழுவதும் கரும்பு நாற்றுப் பயிர் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதே இடத்தில் விவசாயி ராமச்சந்திரனும் இந்த முறையில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கரும்பு பயிரிட்டுக் கூடுதல் மகசூலை எடுத்துவருகிறார்.

Courtesy: Hindu

விதைக் கரும்பு

இது குறித்து விவசாயி ராமச்சந்திரன் பகிர்ந்துகொண்டது: தனியார் சர்க்கரை ஆலை மூலம் செம்மைக் கரும்பு நாற்றுப்பண்ணையை 1,000 சதுர அடி பரப்பில் உருவாக்கியுள்ளேன். அதிக வெயில் படாத வகையில் பச்சை நிற வலையால் கூடாரம் போட்டுள்ளேன்.

விதைக் கரும்புகளை மூன்று சென்டி மீட்டர் அளவுக்குப் பிரத்யேக இயந்திரம் மூலம் வெட்டி, நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்தக் கரணைகளை ரப்பர் ரேக்குகளில் உள்ள குழிகளில் இட்டு, இயற்கை தொழு உரத்தைப் பரப்பி லேசாகத் தண்ணீர் தெளித்து விடுவோம். இதை 25 நாட்கள் வைத்தால் கரும்புப் பயிர் செழிப்பாக உருவாகிவிடும். ரேக்குகளில் உள்ள இந்தக் கரும்புப் பயிரை வயலில் நடவு செய்து 11 மாதங்கள் பராமரித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

எல்லாமே முளைக்கும்

என்னுடைய நர்சரியில் கரும்புப் பயிரை வளர்த்து, நானே பயிரிட்டும் வருகிறேன். சர்க்கரை ஆலை பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கும் தற்போது கரும்புப் பயிரை வழங்கிவருகிறேன். இந்தப் பயிர்களை விவசாயிகள் எளிதாக எடுத்துச் சென்று எளிய முறையில் நடவு செய்யலாம்.

வயலில் சாதாரண முறையில் நடும்போது சில கரணைகள் முளைக்காமல் போகும். செம்மை சாகுபடி முறையில் செழிப்பான கரணைகளை மட்டுமே நடுவதால் பழுது இல்லாமல் அனைத்தும் முளைக்கும் . அதிகத் தூரும் கிளை வெடித்து வளரும் என்கிறார்.

கூடுதல் மகசூல்

“சாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய நான்கு டன் விதைக் கரும்புக் கரணை தேவை. ஆனால், செம்மைக் கரும்பு சாகுபடி முறைக்கு ஒரு டன் விதைக் கரும்பு இருந்தால் போதும். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, பராமரிப்புச் செலவு குறைவு. கரும்பு அதிகக் கிளை வெடித்து அதிகத் தூர்கட்டும். இதனால் ஏக்கருக்கு ஆறு முதல் 10 டன் கரும்பு கூடுதல் மகசூல் கிடைக்கும். விதை நேர்த்தி செய்யும்போது அனைத்து நோய்களையும் தாங்கி வளரக்கூடிய வகையில் நுண்ணுயிர் கரைசல் வழங்கப்படுவதால், பயிர் செழிப்பாக வளரும், தோகை பருமனாகவும், கூடுதல் அடர்த்தியோடும் காணப் படும்,” என்கிறார் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் சுவாமிமலை இளங்கோவன்.

விவசாயி ராமச்சந்திரனைத் தொடர்பு கொள்ள: 09344552333

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *