செம்மை கரும்பு சாகுபடி

கள்ளக்குறிச்சி பகுதியில் “செம்மை கரும்பு சாகுபடி’ என்ற நவீன முறையில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு ஊட்டமாக வளர்ந்துள்ளதால் இம்முறையை பின்பற்றி கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் கரும்பு பயிரை காட்டிலும் கூடுதல் மகசூல் பெற, வேளாண் ஆராச்சி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் “செம்மை கரும்பு சாகுபடி’ விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  • கரும்புகளை துண்டு, துண்டாக வெட்டி நடவு செய்யும் வழக்கமான முறையில் கூடுதல் கரும்பு தேவைப்படுவதுடன், நடவு செலவும் அதிகமாகி வந்தது.
  • இதை தடுக்க கரும்பு கணுக்கள் மூலம் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய முறை (செம்மை கரும்பு சாகுபடி) கண்டறியப்பட்டுள்ளது.
  • இதன்படி ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்ய 50 கிலோ கரும்புகளில் உள்ள கணுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களே போதுமானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • இம்முறைப்படி நாற்று உற்பத்தி செய்வதற்கு “ஷேர்நெட்’ அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியம் 50,000 ரூபாய் வரை வழங்குகிறது.
  • நாற்றுக்களை கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ள தோட்டக்கலைத் துறை மூலம் 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
  • செம்மை நெல் கரும்பு சாகுபடி முறையில், கரும்பு நடவு செய்யப்படும் நிலத்தை உழுதபிறகு 5 அடி அகலம் இடைவெளியில் “பார்’ அமைக்கப்பட்டு அதில் 2 அடி இடைவெளியில் கரும்பு நாற்று நடவு செய்யப்படுகிறது.
  • இடைவெளிவிட்டு நாற்று நடுவதால் போதிய காற்றோட்டம் கிடைத்து கரும்பு பயிர் செழித்து வளர்கிறது.
  • அதேபோல் பயிர் வளர்ந்து குறிப்பிட்ட பருவத்தில் கரும்பில் இருந்து காய்ந்த சோலைகளை அவ்வப்போது அகற்றப்படுகிறது.
  • அப்படி அகற்றுவதால் காய்ந்த சோலைகளால் கரும்பு தண்டில் பூச்சுகள் தாக்குவதும், கரும்பு சொத்தை விழுந்து அதன் கட்டுமானம் குறைந்து நஷ்டம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.
  • சோலைகள் அகற்றப்படுவதால் பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் கரும்பு நல்ல வளர்ச்சியடைகிறது.
  • அதேபோல் கரும்பு பயிர்களுக்குள் சென்று பூச்சு தாக்குதலை கண்டறிந்து தகுந்த மருந்து தெளித்து பாதுகாப்பு நடவடிக்கையை உடனே மேற்கொள்ள முடிகிறது.
  • அதேபோல் நவீன இயந்திரங்களை கொண்டு களை எடுப்பது முதல் அறுவடை வரை செய்ய முடியும்.இதனால் கரும்பு அறுவடையில் மிகுந்த சிக்கலாக உள்ள கூலியாட்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.
  • வழக்கமான முறையில் சராசரியாக ஏக்கருக்கு 40 முதல் 60 டன் கரும்பு மகசூல் கிடைக்கிறது என்றால், செம்மை கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு 60 முதல் 80 டன் வரை கிடைக்கும் என்று வேளாண்துறை பரிந்துரைக்கிறது.

கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் “செம்மை கரும்பு சாகுபடி’ முறை விவசாயிகளிடம் தற்போது தீவிரமாக புகுத்தப்பட்டு வருகிறது. வேளாண் துறையும் மான்யம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருவதால் கரும்பு விவசாயிகள் செம்மை கரும்பு சாகுபடி முறையில் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *