செம்மை கரும்பு சாகுபடி கரூரில் சாதனை

செம்மை சாகுபடியில் நவீன தொழில்நுட்பத்தின்படி, கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்து, கரூர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் விற்பனை செய்து வருகிறார்.

தமிழகத்தில், 2.84 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, மூன்று கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பணப்பயிரான கரும்பிலிருந்து சர்க்கரை, வெல்லம், கந்தசாரி போன்ற இனிப்பு பொருட்கள் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.

தற்போது பாரம்பரிய முறைபடி கரும்புகளை துண்டு, துண்டாக வெட்டி நடவு செய்வது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு ஏக்கருக்கு, நான்கு டன் கரும்பு தேவைப்படுகிறது. இதுமட்டுமல்லாது ஏக்கருக்கு, 40 மெட்ரிக் டன்னுக்கும் குறைவாக மகசூல் பெறுகின்றனர்.

நமது உற்பத்தியில், 10 சதவீத ம் கரும்பு விதைக்காக ஒது க்கி வைக்கப்படுகிறது.

இதை தடுக்க மாற்றுவழியாக, கரும்பு கணுக்கள் மூலம் நாற்று உற்பத்தி செய்து, நடவு செய்யும் புதிய முறை செம்மை கரும்பு சாகுபடி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்பம் மூலம், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கீழப்பட்டிச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கரிகாலன் கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

 • புதிய முறையில் நாற்று உற்பத்தி செய்ய “ஷேர்நெட்’ அமைக்க வேண்டும்.
 • பின்னர் ஒரு விதைப்பருவை கரும்பில் இருந்து, அரைவட்ட வடிவில் வெட்டி எடுத்து, தரமான அச்சீவல்களை கொண்டு “பரோடிரே’ எனப்படும் குழித்தட்டுகளில் மக்கிய தென்னை நார்கழிவை பயன்படுத்தி நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.
 • இதன் மூலம் அதிகளவு முளைப்புத்திறனை, குறைந்த நாட்களில் அடைய முடிகிறது.
 • நாற்றங்காலில் நாற்றுகள், 25 முதல், 30 நாட்கள், வயது அடைந்தவுடன், வேர்ப்பகுதியில் உள்ள தென்னை நார்கழிவுடன் சேர்த்து நடவு செய்ய வேண்டும்.
 • அச்சமயம், 4 முதல், 6 இலைகள் கொண்டவையாக இருக்கும்.
 • செம்மை கரும்பு சாகுபடி முறையில் இளம் நாற்றுகளை எடுத்து நடவு செய்தல், அதிக இடைவெளியில் நடவு செய்தல், குறைந்த அளவு மட்டும் நீர்பாய்ச்சினால் போதுமானது.
 • தேவையான உரங்கள் பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, ஊடுபயிர் சாகுபடி மூலம் மண்வளம் அதிகரிக்கிறது.
 • மேலும் இந்த பயிரிகளில் கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், பூச்சிநோய் தாக்குதலுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கிறது.
 • இதன்படி ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்ய, 50 கிலோ கரும்புகளில் உள்ள கணுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களே போதுமானது.
 • ஒரு நாற்றாங்கால், 1.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வழக்கமான முறையில் சராசரியாக ஏக்கருக்கு, 40 முதல், 60 டன் கரும்பு மகசூல் கிடைக்கிறது என்றால், செம்மை கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு, 60 முதல், 80 டன் வரை உற்பத்தி செய்யமுடிகிறது.
 • மேலும் ஊடுபயிர்கள் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமான வழி உண்டு.
 • இதைபோல முட்டைகோஸ், கீரை போன்ற பயிர்களுக்கு நாற்றங்கால் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *