செம்மை கரும்பு சாகுபடி

கரும்பு விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் செம்மை கரும்பு சாகுபடி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 • செம்மை கரும்பு சாகுபடியானது கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும்.
 • இதில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்தியோடு தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
 • இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் இவை இருக்கும்.

இதுகுறித்து திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் மு.தேவநாதன், பேராசிரியை ம.நிர்மலாதேவி ஆகியோர் கூறியது:

 • செம்மை கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு முறையாகும்.

முக்கிய கோட்பாடுகள்:

 • ஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் அமைத்தல், இளம் (25-35 நாள்கள் வயதான) நாற்றுக்களை நடவு செய்தல், வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல், சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் உரமிடுதல், இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், ஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்.

சாகுபடியின் பயன்கள்:

 • தண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது, சரியான அளவு உரங்களை உபயோகிப்பதின் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு அமைக்கிறது, காற்று மற்றும் சூரிய ஒளி அதிகளவு பயிர்களுக்கு கிடைக்கிறது, அதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது, மொத்த சாகுபடி செலவு குறைகிறது, ஊடுபயிர் மூலம் இரட்டை வருவாயுடன் மகசூலும் அதிகரிக்கிறது

நாற்று தயார் செய்ய கடைப்பிடிக்க வேண்டியவை:

 • 6 மாத வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களில் இருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும், விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி மாலத்தியான் 100 லி. நீரில் கலக்க வேண்டும்.
 • அதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.
 • ரசாயனமுறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம், இதற்கு டிரைக்கோ டெர்மா விரிடி 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பின்விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊற வைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கலாம்.
 • விதை நேர்த்தி செய்ய விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுக கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும்.
 • இவற்றை காற்று புகா வண்ணம் நன்கு மூடி இருக்குமாறு பார்க்க வேண்டும்.
 • நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாள்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்கத் தேவையில்லை.
 • முதலில் குழி தட்டுக்களின் பாதியளவில் கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும்.
 • பின் விதை மொட்டுக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும்.
 • குழி தட்டுக்களை வரிசையாக தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும்.
 • தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம்.
 • 1 ஏக்கருக்கு 300 சதுர அடி தேவை நிழல்வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.

நடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்:

 • நாற்றுக்களை 5-2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
 • நட்ட 10, 20-வது நாள் சிறிதளவில் மேலும் இட்டு மண் அணைக்க வேண்டும். (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்) பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும்.
 • 15-க்கு மேற்பட்ட தூர்கள் 2 மாதத்துக்குள் உருவாகும்.
 • 2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஓரே சமயத்தில் கரும்பாக மாறும்.
 • செம்மை கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடு பயிராக காய்கறிகள், பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்ய முடிகிறது.மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.

மண் அணைத்தல், சோகை உரித்தல்:

 • நடவு செய்த 45- வது நாள் மற்றும் 90-வது நாள் மண் அணைப்பு செய்ய வேண்டும், ஒளிச்சேர்க்கைக்கு மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப்படுகின்றன.
 • எனவே கீழ்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.

சோகை உரிப்பு பயன்கள்:

 • சுத்தமான பயிர் பராமரிப்பு, பயிர்களுக்குகிடையே காற்றோட்டம் அதிகரிப்பு, பூச்சி தாக்குதல் குறைவு, மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.

சொட்டுநீர் உரப்பாசனம்:

 • செம்மை கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம் சாலச்சிறந்தது.
 • மண்ணின் தன்மைக்கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக 3 நாள்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்பாசனம் அளிக்கலாம்.
 • 10 நாள்களுக்கு ஒருமுறை உரப்பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை (1200 மி.மீ) சேமிக்க இயலும்.
 • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் முறையாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டில் இருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு 5000 மொட்டுக்கள் என கணக்கிடும்போது 150 டன் மகசூல் பெற முடியும்.

மேலும் விவரங்களுக்கு திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “செம்மை கரும்பு சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *