கரும்பு விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் பெற வேண்டுமெனில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.
தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட கோடுஹள்ளி ஊராட்சியில் அண்மையில் நடைபெற்ற உழவர் பெரு விழாவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து அவர் பேசியது:
வழக்கமான முறையில் கரும்பு சாகுபடி செய்வதைத் தவிர்த்து, இன்றைய சூழலில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளைப் பின்பற்றுவதே சிறந்தது.
- முன்பு ஓர் ஏக்கருக்கு 30 ஆயிரம் விதைப்பருக்கள் கொண்ட கரணைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- ஆனால், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் 5 ஆயிரம் நாற்றுகளே போதுமானது.
- 25 முதல் 35ஆவது நாள் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
- வரிசைக்கு வரிசை 5 அடியும், பயிருக்குப் பயிர் 2 அடியும் இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுகள் தேவை. சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நாற்று நடவு செய்ய வேண்டும்.
- கரும்புப் பயிருடன் ஊடுபயிரும் சாகுபடி செய்வதால் இரட்டை வருமானம் கிடைக்கும்.
- பார் மற்றும் சால் முறை அமைப்பில் உரமிடுவதால் உரங்கள் சரியான முறையில் பயிர்களுக்கு கிடைக்கும். வீண் செலவுகள் குறையும்.
- தண்ணீரும் சரியாகப் பயன்படுத்தப்படும்.
ரகங்கள்:
- முன்பட்டமான டிசம்பர்-ஜனவரி மாதத்துக்கு கோ 86032, கோ 94008, கோ 90063, கோ.உ. 92102, கோ. 99004 ஆகிய ஆலைக்கேற்ற ரகங்களைப் பயிரிடலாம்.
- வெல்லத்துக்கு உகந்தபடி கோ. 86032, கோ 99004, கோ.க.90063, கோ.கு. 94047 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
- பின்பட்டமான சித்திரை-வைகாசி மாதத்துக்கு ஆலைகளுக்கு ஏற்ற ரகங்களாக கோ 86032, கோ. 99004, கோ. 93076 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
- வெல்லத்துக்கு உகந்தபடி கோ. 86032, கோ 99004 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
ஊடு பயிர்
- ஊடுபயிராக சோயா பீன்ஸ், உளுந்து, பச்சைப்பயறு, சணப்பை ஆகியவற்றைப் பயிரிடலாம்.
நேரடி உரங்கள்:
- தழைச்சத்து 275 கிலோ அல்லது யூரியா 600 கிலோ, மணிச்சத்து 62.5 கிலோ அல்லது சூப்பர்பாஸ்பேட் 400 கிலோ இட வேண்டும்.
- சாம்பல் சத்து 112.5 கிலோ அல்லது மூரியேட் ஆப் பொட்டாஷ் 188 கிலோ அல்லது கலப்பு உரங்கள் இடலாம். மணிச்சத்து முழுவதும் அடியுரமாக தழை மற்றும் சாம்பல் சத்தை 5 சரிசமமாகப் பிரித்து இட வேண்டும்.
இரும்புச் சத்து குறைபாடு:
- பொதுவாக, இலைகள் மூலம் இரும்புச் சத்து குறைபாடுகளைக் கண்டுணரலாம். பழுப்புநிறக் கோடுகள், இரண்டு சரிசமமான கோடுகளுக்கு இடையில் காணப்படும். முற்றிய நிலையில் இலைகள் முழுவதும் வெள்ளை நிறமாக மாறிவிடும்.
- இதைக் கட்டுப்படுத்த பெர்ரஸ் சல்பேட் 0.5 சதவீதம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.
நீடித்த நவீன கரும்பு சாகுபடியாக இருந்தாலும், வழக்கமான விதைக்கரணை மூலம் நடைபெறும் சாகுபடியாக இருந்தாலும் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்