புயல் பாதித்த இடங்களில் கரும்பு பயிர் பராமரிப்பு முறைகள்

கடலூர் தானே புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால்  கரும்புப் பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்து விட்டன.  எனவே பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னை மரங்களைப் பராமரிக்கும் முறைகளை, வேளாண் பல்கலைக்கழகத்தின் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் நசீர் அகமது தெரிவித்தது:

  • புயலில் பாதிக்கப்பட்டவை இளம் கரும்பாயின், இலைகள் கிழிந்த மற்றும் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி, மண் அணைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் பசஅம கரும்பு பூஸ்டர் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவையை, ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ என்ற அளவில், கரும்பு நட்ட 40, 60, மற்றும் 75-ம் நாள்களில் 15 நாள்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க  வேண்டும்.
  •  இதனால் சேதம் அடைந்த கரும்பு தெளிவடையும்.
  • நீர் மேலாண்மையைக் கண்காணிக்க வேண்டும்.
  • 4 முதல் 6 மாதக் கரும்பாயின், அவற்றை நிமிர்த்தி, சோலைகளை உரித்து விட்டம் கட்டிப் பராமரிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட 6 முதல் 7 மாதக் கரும்பில் வேர்கள் இறங்காது இருந்தால், அவைகளை விதைக் கரும்பாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
  • அக்கரும்புகளை பரு கரணைகளாக பாலித்தீன் பைகளில் முளைக்க வைத்து 30, 35 நாள்கள் வயது நாற்றுகளாக நடவு செய்யப் பயன்படுத்தலாம்.
  • 7 மாதங்களுக்கு மேற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு, ஒடிந்து, பருக்கள் முளைத்து மோசமாக இருந்தால், அறுவடை செய்து ஆலைகளுக்கு அனுப்பிவிட  வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *