கொரோனா ஊரடங்கில் பொழுதை வீணாக்காமல் ஜீரோ பட்ஜெட்டில் ஐந்து அடுக்குமுறை உணவுக் காட்டை உருவாக்கி உற்பத்தியை துவக்கி உள்ளார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்.
பன்னாட்டு கம்பெனி மேலாளராக இருந்த இவரை, தந்தையின் இறப்புக்குப் பின் வந்த கொரோனா ஊரடங்கு கிராமத்திற்கு இழுத்து வந்தது. இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உலகிற்கு அறிமுகம் செய்த சுபாஷ் பாலேக்கர், இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் ஐந்து அடுக்கு முறை விவசாயத்தை கடந்த நவம்பரில் துவக்கினார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் 36 க்கு 36 அடியில் மாங்கன்றுகளை நடவு செய்து, அவற்றுக்கிடையே 9 அடி இடைவெளியில் வாழை, பப்பாளி, முருங்கை, அதற்கடுத்து இடைவெளியில் கப்ப கிழங்கு, மிளகாய், கத்தரி, தக்காளி, முள்ளங்கி என காய்கறி வகைகளையும் பயிரிட்டார். அடுத்த அடுக்காக பூசணி, சுரைக்காய், பாகற்காய் போன்ற கொடி வகைகளை படர விட்டுள்ளார்.
வேலி ஓரத்தில் ஆமணக்கு, துவரையை பயிர் செய்தார். இவற்றில் ஊடுபயிராக உள்ளவை அனைத்தும் குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யக் கூடியவை. தற்போது முள்ளங்கி, கத்தரி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகிறார்.
இவரது 10 ஏக்கர் நிலத்தில் ‘உணவுக் காடு’க்காக மட்டும் ஒரு ஏக்கரில் பயிர் செய்கிறார். மேலும் 3 ஏக்கரில் வாழை, 4 ஏக்கரில் தென்னை, அவற்றிலும் ஊடு பயிர்களாக மகோகனி, எலுமிச்சை போன்றவற்றையும் பயிரிட்டுள்ளார். மீதமுள்ள நிலத்தில் இயற்கை முறையில் சொட்டுநீர் பாசன வசதியுடன் காலிபிளவர், கத்தரி, புதினா, கொத்துமல்லி, கீரை வகைகளைப் பயிர்செய்து வருகிறார்.
இவரது நிலத்தை பார்வையிட்ட கிராமத்தினர் ரசாயன உரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினர். அதனை மறுத்த செல்வராஜ், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் பூச்சிவிரட்டி போன்றவற்றை பயன்படுத்தி சாகுபடி செய்கிறார்.
விற்பனைக்கு சென்றால் உரிய விலை கிடைக்காததால் நண்பர்கள் மூலம் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறார். அதுவும் கட்டுப்படியாகாததால் அவரே வியாபாரியானார். வத்தலக்குண்டு பகுதியில் தனது காரிலேயே எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்.
செல்வராஜ் கூறியதாவது: நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கரின் சாகுபடி முறையை யுடியூப் மூலம் அறிந்து ஐந்தடுக்கு விவசாயத்தை துவக்கினேன். அதில் உணவுக் காடு தயாரானது. ஓராண்டுக்குப் பின்னர் உணவு காட்டில் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலையை உருவாக்கி மலைப்பயிர்களான மிளகு, காபியை சாகுபடி செய்ய எண்ணியுள்ளேன்.
முதல் முயற்சியாக சில காபி, மிளகு பயிர்களையும் பயிரிட்டு வளர்த்து வருகிறேன். அதன் முடிவைப் பொறுத்து உணவுக் காட்டில் அதனை பயிரிடுவேன். மக்களுக்கு நல்ல, விஷமில்லா உணவை வழங்க விவசாயிகள் இயற்கை முறைக்கு மாற வேண்டும். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்கு மக்களிடம் குறைந்த அளவே வரவேற்பு இருக்கிறது. எனது தோட்டத்தை பார்த்தவர்கள் திருப்தியுடன் வாங்கிச் செல்கின்றனர். தொடர்ந்து இயற்கை முறையில் பயிரிட, விற்பனை என்பதுதான் தடையாக உள்ளது. விவசாயிகள் அனைவரும் இணைந்து இயற்கைக்கு மாறினால் அதுவும் சாத்தியமாகும் என்றார்.
இவரை தொடர்பு கொள்ள 7904112550 பேசலாம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்