“அதிக மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளையும் தாண்டி வனங்களைப் பாதுகாத்ததோடு, இந்தியாவில் வனப்பரப்பு 1% அதிகரித்தும் இருக்கிறது” என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியக் கானக அளவை நிறுவனம் வனப்பரப்பு தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிடும். அதன் 2017-வது அறிக்கையின் படி இந்தியாவில் 1% அளவிற்கு வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதை வைத்துக்கொண்டுதான் அவர் மேற்கூறிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கானக அளவை நிறுவனம் நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் வனப்பரப்பினை அளப்பதற்கு அவர்கள் வைத்துள்ள அளவுகோல் என்னவென்றால், 1 ஹெக்டேர் அதாவது 2.45 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 10% மரங்கள் இருந்தாலே போதும், அது காடு என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு 7,64,566 சதுர கிலோ மீட்டரிலிருந்து 2017-ஆம் ஆண்டில் 7,67,419 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்று கூறும் நாம், 2013-ஆம் ஆண்டில் இருந்த 4,402 ச.கி.மீ காடுகளை இழந்துவிட்டோம் என்பதை மறக்கக்கூடாது. காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களின் அளவு முன்பை விட 1,243 ச.கி.மீ அதிகரித்தது ஆரோக்கியமானதே. மக்களுக்கு இயற்கை மீதான அக்கறை வளர்ந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறது. ஆனால் அரசாங்கம் அதே உத்வேகத்துடன் செயல்படுகிறதா?
2015-ஆம் ஆண்டினை விட 2017-இல் முன்னேற்றம் இருந்தாலும், 2013-ஆம் ஆண்டின் இழப்பை நாம் இன்னும் ஈடுசெய்யவில்லை.
மத்திய அமைச்சர் நாட்டின் பசுமைப் போர்வை பற்றி மகிழ்ச்சியோடு எடுத்துரைத்து இருந்தாலும், அதன் முன்னேற்றம் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. வன அளவைக் கூறும் அதிகரித்த வனப்பகுதிகளை கவனித்தால், அழிக்கப்படும் காடுகளைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது புரியும். 2017-ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் காட்டப்பட்டுள்ள பசுமைப்போர்வை முற்றிலுமாக இயற்கைக் காடுகளால் உருவானது அல்ல. முதலில் இவர்கள் இயற்கைக் காடுகள் மற்றும் செயற்கைக் காடுகள் என்று தனித்தனியாகப் பதிவு செய்யவே இல்லை. பொருளாதார லாபத்திற்காக யூகலிப்டஸ், தேக்கு, சந்தன மரம், கால்நடைகளுக்கான தீவனம் என்று பயிரிடப்பட்ட பகுதிகள் கூட காடு என்ற வரையறைக்குள் தான் இங்கே திணிக்கப்பட்டுள்ளது.
காப்புக் காடுகள் (Reserved forests), உள்ளூர்க் காடுகளோடு சேர்த்து 31,840 ச.கி.மீ அளவிலான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது காப்புக் காடுகளில் 10,657 ச.கி.மீ மற்றும் வெளிப்புறக் காடுகளில் 21,183 ச.கி.மீ என்று இழந்துள்ளோம். அதே சமயம் வேறு சில வெற்றிடங்களில் சுமார் 24,000 ச.கி.மீ அளவிற்குப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையாக ஒரு வனப்பகுதி தோன்றுவதற்கு முழுமையாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ளும். ஆனால், இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு வனப்பரப்பு எப்படித் தோன்றியது? விரைவான வளர்ச்சிக்கு இயற்கையோடு மனிதர்களும் இணைந்து பணிபுரிந்து இருந்தால்கூட இத்தனை விரைவாக வளர்வது அசாத்தியமானது. அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருக்கக்கூடிய பரப்பு, அரசாங்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரப்பளவு 21.55% இல் 12.37% தான். மீதி 10.58%, வனங்களுக்கு வெளியே ஆங்காங்கே இருக்கக்கூடிய தொடர்பற்று இருக்கும் துண்டாக்கப்பட்ட காட்டுப் பகுதிகள்.
அந்த பாதுகாக்கப்பட்ட காடுகளில் கூட வெறும் 2.99% மட்டுமே அதிகமான அடர்த்தியுள்ள காட்டுப்பகுதி. இங்குதான் அரிய வன விலங்குகள் வாழ்கின்றன; அதிகமான அரிய வகை பூர்விகத் தாவரங்கள் இருக்கின்றன. எங்கே இயற்கையின் செயல்பாடு அதிகம் இருக்குமோ அங்கே வனப்பரப்பு மிகவும் குறைவு. பாதிக்கும் மேல் வெட்டவெளிக் காடுகள் என்பது அடர்த்தியான காடுகளில் வாழக்கூடிய யானை, புலி போன்ற பேருயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின்றன. அதிலும் பெரும்பாலானவை இயற்கையாக உருவானது இல்லை. அதிவேகமாக வளரக்கூடிய மரங்களை நட்டு மனிதர்களால் பராமரிக்கப்பட்டவை. இத்தகைய செயற்கைக் காடுகளால் கிடைக்கும் பயன்களைவிட பாதிப்புகளே அதிகம். பல்லுயிர்ச்சூழல் இயற்கைக் காடுகளில் இருப்பதைவிட இங்கே மிகவும் குறைவாகவே இருக்கும். நீர்வழிகள் இயற்கையாகப் பராமரிக்கப்படுவது தடைப்படும். கரிமத் தன்மயமாக்கல் எனப்படும் கார்பன் சுத்திகரிப்பு முறை நடைபெறாது. இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் இதில் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு நியாயமான கணக்கெடுப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லது செய்துவிட்டோம் என்று சமாளிக்காமல் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதைச் செய்ய வேண்டும்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்