சுனாமிக்கு பின், சென்னையை பாதுகாக்கும் வகையில், ‘மாங்குரோவ்’ என்ற, அலையாத்திக் காடுகள் வளர்ப்பில், இரண்டு திட்டங்களை செயல்படுத்தி, தமிழக அரசு வெற்றி கண்டு உள்ளது. மூன்றாவது திட்டத்தை விரைவில், துவக்க முடிவு செய்துள்ளது.
கடலில் ஏற்படும் பேரலைகளால் குடியிருப்பு பகுதிகளின் பாதிப்பை தடுப்பதோடு, நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்கும் வகையில், இயற்கையின் வரப்பிரசாதமாக, ‘மாங்குரோவ்’ எனப்படும், அலையாத்தி காடுகள் விளங்குகின்றன.அதிக உயிர் இழப்புகள்தமிழக கடற்கரையோரம் இருந்த காடுகள், பல இடங்களில் ஆக்கிரமிப்பால் அழிந்து போனது. இதனால், 2004ல் ஏற்பட்ட சுனாமியால், உலகில், பல ஆயிரம் பேர் பலியாயினர். சென்னையிலும், அதிக உயிர் இழப்புக்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, சென்னை நகரில், மாங்குரோவ் காடுகள் வளர்க்கும் திட்டம், 2008ல் துவங்கியது. இதுவரை, இரண்டு திட்டங்களை செயல்படுத்தி, தமிழக அரசு, வெற்றி கண்டுள்ளது.இது குறித்து திட்ட அதிகாரி கூறியதாவது:
மாங்குரோவ் காடுகளில், 60 மரங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்தியாவில், 32 வகையான மரங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள, சுந்தரவனக் காடுகள் மிக பிரபலம். சென்னை நகரில், மாங்குரோவ் காடுகள், 1975ல், ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தன; நாளடைவில் அழிந்து போயின.
பின், 2008ல், முதன் முறையாக, மாங்குரோவ் காடுகள் வளர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக, அடையாறு தொல்காப்பியபூங்காவின் பின்புறம், 58 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. வெண்கண்டல், சென்கண்டல், கள்ளிமுள்ளி, திள்ளை உள்ளிட்ட, ஏழு வகை மரங்கள் வளர்க்கப் பட்டன.உலகிலேயே, முதன் முறையாக, மாங்குரோவ் காடுகள் இல்லாத இடத்தில், காடுகளை வளர்த்து உள்ளோம். ஒன்பது ஆண்டுகளில் நல்ல பலன் தந்துள்ளது. 12 மீட்டர் உயரத்திற்கு, மாங்குரோவ் காடுகள் வளர்ந்துள்ளன.
இரண்டாவது திட்டம், 2014ல், சாந்தோம் கடற்கரையில் இருந்து, ‘தியாசாபிகல் சொசைட்டி’ வரை,300 ஏக்கரில், 3,500 மீட்டர் துாரத்திற்கு வளர்த்து வருகிறோம்.மூன்றாவது திட்டம் தற்போது, குறைந்து வரும் கடல் வளத்தை காப்பாற்ற, ஒரே தீர்வாக மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன.
எனவே, தமிழக கடற்கரை முழுவதும், மாங்குரோவ் காடுகள் மிக அவசியம். எங்களின்3வது திட்டம், ஒக்கியம்மடு அல்லது முட்டுக்காடு பகுதிகளில் துவக்க முடிவு செய்துள்ளோம். சென்னையில் பேரலைகள் தாக்கும் பகுதிகள், இனம் காணப்பட்டு உள்ளன. அதை, குறி வைத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
150 கி.மீ., வேகத்தை தாங்கும்
மாங்குரோவ் காடுகளில், சில உயிரினங்கள் வாழும். சென்னையில், மாங்குரோவ் காடுகள் வளர்ந்த பின், 15 வகையான நண்டுகள், இறால் வகைகள், மீன்கள் வளர்ந்துள்ளன. அவற்றை ஆதாரமாக கொண்டு, பல பறவைகளும் வரு கின்றன. நண்டை சாப்பிட, நரிகள் வருகின்றன; குடும்பத்தை பெருக்கி கொள்கின்றன. தற்போது, வளர்ந்துள்ள மாங்குரோம் காடுகள், 150 கி.மீ., வேகத்தில் தாக்கும் கடல் அலைகளை தாங்கும் சக்தி உண்டு.
நன்னீரில் வளரும் மரங்கள்
மாங்குரோவ் காடுகள் கடல் நீரில் வளர்வது இல்லை. கடல் நீரை உறிஞ்சி, அதில் உள்ள உப்பை பிரித்து, நல்ல நீரில் தான் வளர்கின்றன. மரங்களின் விழுதுகள், ஆலம் விழுதுபோல படர்ந்துவிடும். மாங்குரோவ் காடுகளை பொறுத்தவரை, சில காலம் பராமரிப்பு மிக முக்கியம். சரியாக பராமரிக்காவிட்டால், அத்திட்டம் தோல்வி அடைந்து விடும். ஒரு கால கட்டத்திற்கு பின், மரங்களில் இருந்து விழும் விதைகளில் இருந்து, மரங்கள் தானாக வளரத் துவங்கும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்