தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் சதுரடியில் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, டெல்டா மாவட்ட ரோட்டரி சங்கம். கஜா புயலில் லட்சக்கணக்கான மரங்களை இழந்து, சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள டெல்டாவுக்கு இது வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
இந்தியாவில் செயல்படும் ரோட்டரி சங்கங்கள், இதுவரை கல்வி, பொது சுகாதாரம், மருத்துவம், உலக அமைதி போன்றவைகளில் கவனம் செலுத்தி அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் டெல்டா மாவட்ட ரோட்டரி, முதல்முறையாக, குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பொது இடங்களில் இவ்வளவு விரிவான குறுங்காடு வளர்ப்பு திட்டம் என்பது இந்தியாவில் வேறு எங்கும் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டெல்டா மாவட்ட ரோட்டரி ஆளுநர் பாலாஜி பாபுவிடம் பேசியபோது, “வாகன புகையினால், காற்று மிக மோசமாக மாசடைந்துள்ளது. சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த, குறுங்காடுகள் மிகவும் உறுதுணையாக இருக்கும். குறைவான பரப்பில் மிக நெருக்கமாக, அதிக எண்ணிக்கை மரங்களை வளர்ப்பதைதான் குறுங்காடு என்கிறோம்.
இது ஜப்பானில் மியாவாக்கி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுங்காடுகள் உருவாக்கப்பட்டால், ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கும். பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கும். மைனா, சிட்டுக்குருவி, கிளி உள்ளிட்ட பறவைகளின் வருகையால் இனிமையான சூழல் உருவாகும்.

அதிக எண்ணிக்கையிலான மரங்களால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகும். இந்தியாவில் உள்ள ரோட்டரி சங்கங்கள் ஏற்கனவே மரம் வளர்ப்பில் நிறைய சேவையாற்றியுள்ளன. ஆனால், குறுங்காடு வளர்ப்பில் இப்போதுதான் முதல்முறையாக இறங்கியுள்ளோம். டெல்டா ரோட்டரி மாவட்ட எல்லைக்கு உட்பட்டு 118 சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சங்கமும் 10,000 சதுர அடி வீதம், மொத்தம் 10 லட்சம் சதுரடியில் குறுங்காடு உருவாக்க இலக்கு நிர்ணயம் நிர்ணயம் செய்துள்ளோம்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சரபோஜி கல்லூரி வளாகங்கள்ல 30,000 சதுர அடி உட்பட இன்னும் பல இடங்கள்ல, கன்றுகள் நட்டு இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளோம். நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு சுடுகாட்டில் 50,000 சதுர அடி, கும்பகோணத்தில் புறவழிச்சாலையில் கோயிலுக்கு சொந்தமான இடம், சீர்காழி, கடலூர் உட்பட்ட இன்னும் பல பகுதிகள்ல இதுக்கான பொது இடங்களைத் தேர்வு செய்துவிட்டோம். வாய்ப்புள்ள இடங்களில் சொட்டுநீர் பாசனம் அமைக்கிறோம். மற்ற இடங்கள் ஆள்கள் மூலமும் தண்ணீர் ஊற்றுகிறோம். கன்று நட்டவுடன், ஆறு மாதங்களுக்குத் தினமும் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். அதன்பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும், தானாக வளரத் தொடங்கிவிடும்” என்றார்.
‘’புங்கன், மகிழம், நீர்மருது, அத்தி, சாக்கொன்றை, கருமருது, ஆச்சா, விலா, வில்வம், கொடுக்காப்புளி, நாவல் உள்ளிட்ட இன்னும் ஏராளமான நாட்டு மரங்களை நட்டு வருகிறோம். 3 அடி ஆழத்துக்கு குழி எடுத்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, கன்றுகளை நடவு செய்வதாலும், தண்ணீருக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதாலும் எங்களுடைய இந்த முயற்சிக்கு, முழுமையான பலன் கிடைக்கும். அடுத்த சில ஆண்டுகளில் டெல்டாவில் நிறைய குறுங்காடுகளைக் கண்குளிர பார்ப்பீர்கள். பெரும்பாலும் சுற்றுச்சூழல் அமைப்புகள்தான் குறுங்காடு வளர்ப்பில் ஆர்வம் செலுத்துகின்றன. பொதுவான சேவை அமைப்புகளும் இதில் தீவிரமாக களமிறங்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்