புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கிறது தக்கிரிப்பட்டி கிராமம். கிராமத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் வறண்டு போய் தரிசாகக் கிடக்கிறது. இவற்றிற்கு மத்தியில்தான் எங்கும் பசுமை போர்த்தியபடி, பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது கருப்பையாவின் வேப்பந்தோப்பு.
தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்திலும் வேப்பமரங்களை நட்டு வளர்த்து வருகிறார். புவி வெப்பமயமாதலைத் தடுத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்துக்காகவும், பசுமை போர்த்திய இந்த வேப்பமர குறுங்காட்டை உருவாக்கி இருப்பதாகக் கூறும் கருப்பையா, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இந்த வேப்பமர குறுங்காட்டை வளர்த்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். கருப்பையாவின் வேப்பந்தோப்புக்குள் நாம் ஒருமுறை சென்றுவந்தாலே போதும், நமக்குப் புத்துணர்ச்சி பிறந்துவிடுகிறது. காலை வேளையில், கல்லூரிச் செல்வதற்கு முன்பு வேப்பமரக் காட்டில் வேப்பமரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கருப்பையாவிடம் பேசினோம்.
“எங்களுக்குப் பூர்வீக நிலம்னு ரெண்டு ஏக்கர் இருக்குது. அப்பா காலத்துல எல்லாம் இதுல முப்போகம் விளைச்சல் செஞ்சிருக்காங்க. அப்ப எல்லாம், வயலுக்கு பக்கத்துல இருக்க ஏரி, குளத்துல இருந்து பாசனத்துக்குத் தண்ணி கிடைக்கும். கிணத்துப் பாசனம் மூலமும் பயிர் செஞ்சோம். இப்போ, ஏரி, குளங்கள எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுத் தூர்ந்துபோயிருச்சு. பத்து, பதினெஞ்சு வருஷத்துக்கும் மேல இங்க இருக்கிற விவசாய நிலங்கள பயிர் செய்யாம சும்மாதான் போட்டுவச்சிருக்காங்க. இததவிர, கருவேல மரங்கள் எல்லா நீரையும் உறுஞ்சிடுச்சு.
கருவேல மர விதை, நாட்டு மாடுகள் எல்லாத்தையும் மலடாக்கி, நாட்டு மாடு இனத்தையே அழிச்சிடுச்சு. மறுபுறம், விவசாயிகளே யூக்கலிப்டஸ் மரங்களைப் பயிரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். அது தன் பங்குக்கு, காற்றின் ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சிடுச்சு. மேலும், பெய்யும் கொஞ்ச மழை நீரையும் நாம சேமிக்கத் தவறியதால, இப்போ நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போயிருச்சு.
ஆழ்துளைக் கிணத்துல தண்ணீர் இல்லைங்கிறதால, நானும் கொஞ்ச வருஷம் சும்மாதான் நிலத்தைப் போட்டு வச்சிருந்தேன். சும்மா கிடக்கிற நிலத்தைப் பார்க்கிறதுக்கே கஷ்டமா இருக்கும். அதனால, அந்தப் பக்கம் போகாம இருந்தேன். இப்போ, வேப்பமரம் நட்டதில் இருந்து தினமும் ரெண்டு முறை வேப்பந்தோப்புக்கு போயிருவேன்.
வேப்பந்தோப்புக்குப் போகாம, பசுமையைப் பார்க்காமல் ஒரு நாள்கூட என்னால இருக்க முடியாது. அந்தளவுக்கு மரங்களோடு நெருக்கமாகிட்டேன். தினமும் வேப்பமரக் காற்றை நாம சுவாசித்தாலே போதும். எந்த நோயும் நம்மை அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு அதிகரிக்கும். சர்க்கரை அளவு எல்லாம் குறையும்னு சொல்வாங்க.
வேப்ப மரத்தோட இலையில இருந்து, விதை, பட்டை என எல்லாத்துலேயும் மருத்துவக் குணம் இருக்கு. சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருக்கணும், பறவைகள் எல்லாம் கூடுகட்டி வாழணும். எங்கும் பசுமையாக இருக்கும் தோட்டத்தைப் பார்த்து நாம சந்தோஷப்படணும். இதையெல்லாம் மனசுல வெச்சுத்தான் இருந்த 2 ஏக்கர்லேயும் வேப்பமரங்களை நடவு செஞ்சேன். இன்று வேப்பமரங்கள் நெறஞ்ச குறுங்காடாக மாறிடுச்சு.
ஆரம்பத்துல, ‘வேப்பமரத்தைப் போய் தோட்டத்தில் நடப்போறானாம்’ என்று பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் கேலி கிண்டல் செய்தாங்க. சிலர், வேப்பமரத்தை நான் நட்டுறக்கூடாதுனு, பெரிய பிரச்னை எல்லாம் கிளப்பினாங்க. ஆனாலும், அதையெல்லாம் நான் பெரிசாவே எடுத்துக்கலை. என்னோட முடிவுல தீர்க்கமாக இருந்தேன். ஆனாலும், இதுல இருந்து நல்ல வருமானம் எடுக்கணும் என்ற எண்ணத்தோடு மட்டும் நான் நடவு செய்யலை.
ஆனா, நடவுசெஞ்ச 3 வருஷத்துக்கு அப்புறம் வேப்பமரத்துல இருந்து நல்ல வருமானம் கிடைக்குது. வர்ற வருமானத்தை வேண்டாம்னா சொல்ல முடியும். போன வருஷம் ஒரு டன் வேப்பங்கொட்டையை 45,000-த்துக்கு விற்றேன். இலை, பட்டை, கோந்து என எல்லாத்துலயும் இருந்து நல்ல வருமானம் கிடைக்குது. 10 வருஷம் கழிச்சு மரத்தை வெட்டி விற்கலாம். இப்போதைக்கு மரத்தை வெட்டி விற்கும் எண்ணமெல்லாம் எனக்கில்லை. வேப்பமரங்களில் இருந்து இப்போ நல்ல வருமானமும் கிடைக்குது.
கஜா புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஆலமரம், அரசமரம் என எந்த மரங்களும் இதிலிருந்து தப்பிக்கவில்லை. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்த நிலையில், ஆயிரக்கணக்கான மரங்கள்கூட நடப்படவில்லை. எங்க ஊருல பறவைகளுக்கான வாழ்விடங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டது. பறவைகள் வாழ்வதற்கான சூழலே தற்போது இங்கில்லை.
பழையபடி, பறவைகள் எல்லாம் இங்கு வந்து கூடுகட்டி வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. வருமானத்துக்கு வருமானமும் கிடைக்குது. பறவைகளுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நாம நல்லது செஞ்சிட்டோம்ங்கிற திருப்தியும் கிடைக்குது” என்றார், மனநிறைவுடன்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
அருமையான தகவல்கள்,, இந்த செயல்காள் நாளை நமதே
Super, am also having same idea sir. Thanks