அதலைக்காய்… கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம்!

திருநெல்வேலி,  தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பிரபலமான காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’.

பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்த இக்காய், பேச்சுவழக்கில் ‘அதலக்காய்’ என்று அழைக்கப்படுகிறது. கோவைக்காய்போலக் கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகை இது.

ஆரம்பத்தில் களைச் செடியாய்ப் பார்க்கப்பட்டது. இப்போது அதலைக்காயின் மருத்துவக் குணங்கள் தெரிய வர… பலரும் இதை விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டனர். இதில் கசப்புத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். குடற்புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.

இது பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள் மக்கள். வேலியோரப்பயிரான இதற்குச் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதால், இதை மானாவாரி நிலத்தில் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சாத்தாவு.

விருதுநகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்குன்றாபுரம் கிராமத்தில் தான் சாத்தாவுவின் நிலம் இருக்கிறது. படர்ந்து கிடந்த அதலைக்காய் கொடிகளில் காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சாத்தாவுவைச் சந்தித்தோம்.

“எட்டாம் வகுப்பு வரை படிச்சுட்டு விவசாயம் பார்க்க வந்துட்டேன். மொத்தம் நாலு ஏக்கர் நிலம் இருக்கு. முழுக்கக் கரிசல் மண். மக்காச்சோளம், சோளம், கம்பு, குதிரைவாலினு மானாவாரி விவசாயம்தான். கிராமங்கள்ல வேலியில, கம்மாய்க்கரைகள்ல தானா விளையுற அதலக்காயைப் பறிச்சு விற்பனை செய்வாங்க. சீசன் சமயங்கள்ல மட்டும் கிடைக்கிற இதை வெச்சு கிராமங்கள்ல ஒரு வருமானம் பார்ப்பாங்க. சந்தையில இதுக்கு நல்ல விலை கிடைக்குது.

மானாவாரியா விளையுற காய்ங்கிறதால கூடுதல் மகசூல் எடுக்கலாமேனு இதை அரை ஏக்கர் நிலத்துல சாகுபடி செஞ்சுருக்கேன். குறிப்பா இந்தக்காய் கரிசல் மண் பகுதியிலதான் விளையும். அதனாலதான் நான் தனிப்பயிரா சாகுபடி செஞ்சேன். நல்லா விளைஞ்சு வந்துருக்கு. இப்போ அதலக்காய் பறிப்பில் இருக்கு” என்று முன்னுரை கொடுத்த சாத்தாவு தொடர்ந்தார்… “ஆடி மாசம் மழை பெய்ய ஆரம்பிச்சதும், மண்ணுக்குள்ள இருக்குற கிழங்குகள்ல இருந்து அதலக்கக்காய் கொடிகள் முளைச்சுப் படர ஆரம்பிக்கும். மார்கழி மாசம் காய்ப்பு முடிஞ்சுடும். காய்ப்பு முடிஞ்சதும் செடிகள் அப்படியே சுருங்கிடும். ஆனா, மண்ணுக்குள்ள இருக்குற கிழங்கு அப்படியே இருக்கும். ஆடியில திரும்பவும் ஒரு மழை கிடைச்சதும் முளைப்பு எடுக்க ஆரம்பிச்சுடும். இதுதான் அதலக்காயோட அற்புதம்.

மார்கழி மாசம் கண்மாய்க்கரைகள்ல இந்தக்கிழங்கைச் சேகரிச்சுட்டு வந்து நிலத்துல குழி எடுத்து விதைச்சு வெச்சுடணும். அப்படியே விட்டுட்டாப் போதும், கிழங்கு பத்திரமா இருக்கும்.

பிறகு ஆடி மாசம் முளைக்க ஆரம்பிச்சுடும். முழுக்கிழங்கா கிடைக்காம துண்டு துண்டா இருந்தாலும் அது முளைச்சு வந்துடும். இதுக்குனு தனியா கொஞ்சம் நிலத்தை ஒதுக்கி ஒருமுறை விதைச்சு விட்டுட்டாப் போதும். வருஷா வருஷம் மகசூல் கிடைச்சுட்டே இருக்கும். காய்ப்பு முடிஞ்சதும், மண்ணுக்குள்ளேயே இதோட கிழங்கு உறக்க நிலையில இருந்து வருஷக்கணக்காப் பலன் கொடுக்கும்” என்ற சாத்தாவு, மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். “ஐப்பசி மாதத்துல இருந்து மார்கழி மாசம் வரை மூணு மாசத்துக்குக் காய்கள் கிடைக்கும். அதுக்கப்புறம், காய்ப்பு குறைஞ்சுச் செடி சுருங்கிடும். காலையில 7 மணியில இருந்து 9 மணிக்குள்ள பறிச்சு உடனே சந்தைக்கு அனுப்பிடுவோம். மூணு நாளுக்கு ஒருமுறை பறிச்சுட்டுருக்கேன். இதுவரை 21 பறிப்பு முடிஞ்சுருக்கு. ஒரு பறிப்புக்கு குறைஞ்சபட்சமா 13 கிலோவும், அதிகபட்சமா 22 கிலோவும் கிடைச்சுருக்கு. ஒரு கிலோ காய் 45 ரூபாய்ல இருந்து 65 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியிருக்கு.

இதுவரை 423 கிலோ காய் பறிச்சு விற்பனை செஞ்சது மூலமா 24,445 ரூபாய் வருமானமாக் கிடைச்சுருக்கு. இன்னும் 10 பறிப்பு வரை காய்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு. அது மூலமா 200 கிலோ காய் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அதுக்குச் சராசரியா கிலோவுக்கு 60 ரூபாய் விலை கிடைச்சா அதுமூலமா 12,000 ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். எப்படிப்பார்த்தாலும் அரை ஏக்கர் நிலத்துல 35,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைச்சுடும். இதுக்குச் செலவே கிடையாது. ஒருமுறை உழுது நடவு செஞ்சு விட்டுட்டாப் போதும். அதுபாட்டுக்கு வருமானம் கொடுக்கும். நானும் வீட்டுக்காரம்மாவுமே பறிக்கிறதால பறிப்புக் கூலிகூட எங்களுக்கு இல்லை” என்றார். நிறைவாகப் பேசிய சாத்தாவு,

“அறுவடை முடிஞ்சு அப்படியே விட்டுட்டா பங்குனி, சித்திரை மாசங்கள்ல கோடைமழை கிடைக்கிறப்போ கொடி முளைச்சு ஒரு மகசூல் பார்த்துடலாம். ஆனா, அந்தச் சீசன் இதுக்கேத்த சீசன் இல்லைங்கிறதால மகசூல் குறைவாத்தான் இருக்கும்.

ஆனா, விலை ரெண்டு மடங்கு கிடைக்கும். பொதுவா, மானாவாரி விவசாய நிலங்கள்ல வீட்டுல இருக்குற ஆள்களே வேலை செஞ்சா லாபம் கூடுதலா இருக்கும். அந்த மாதிரி சாகுபடிக்கு ஏத்த பயிர் இது. அரை ஏக்கருக்கு ரெண்டே ரெண்டு ஆள் போதும். எந்தப் பராமரிப்பும் இல்லாம கை நிறைய வருமானம் கொடுக்குற அதலக்காய், கண்டிப்பா கரிசல் மக்களுக்குக் கிடைச்ச சீதனம்தான்” என்று கைநிறைய அதலைக்காய்களை அள்ளிக் காட்டியவர், சந்தைக்குக் கிளம்ப ஆயத்தமானார்.

ஐந்து அடி இடைவெளி!

தலைக்காய்ச் சாகுபடி செய்யும் முறை குறித்துச் சாத்தாவு கூறிய தகவல்கள் பாடமாக இங்கே…

அதலைக்காய்க்குக் கரிசல் மண் ஏற்றது. மானாவாரிப்பயிர் என்பதால் ஆடிப்பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தில் ஆனி மாதம் சட்டிக்கலைப்பை கொண்டு உழுது, 20 நாள்கள் காயவிட்டு மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, ஓர் உழவு செய்ய வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன் 5 அடி இடைவெளியில் அதலைக்காய்க் கிழங்குகளை விதைத்து ‘மோல்டு’ கலப்பைக் கொண்டு உழுது மண் மூடும்படி செய்ய வேண்டும். கிழங்குகளை முழுதாக அப்படியே விதைக்காமல், துண்டுகளாக வெட்டி விதைத்தால் காய்ப்பு அதிகமாக இருக்கும். வெட்டிய கிழங்குகளை அரை மணிநேரம் நிழலில் உலரவைத்து விதைக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் பரப்பில் விதைக்க 25 கிலோ வரை கிழங்குகள் தேவைப்படும். விதைத்து அடுத்த மழை பெய்தவுடன், முளைப்பு எடுத்துக் கொடிகள் வீசிப்படரத் தொடங்கும். கொடி வீசியதில் இருந்து 25 நாள்களில் வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். அடுத்த பத்து நாள்களில் காய்கள் கிடைக்கும். கொடியைத் தூக்கிப்பிடித்துக் காய்களைப் பறிக்க வேண்டும். கொடிகள் அறுந்துவிடாமல் கவனமாகப் பறிக்க வேண்டும். பறித்த ஐந்து மணி நேரத்துக்குள் சந்தைக்கு அனுப்பிவிட வேண்டும். இதை இருப்பு வைக்க முடியாது. பறித்த ஒரே நாளுக்குள் இதைச் சமைத்துவிட வேண்டும். தாமதித்தால் காய்கள் வெடித்துவிடும். வெடித்தபிறகு சமைத்தால் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. அதேபோல வெடித்த காய்களுக்குச் சந்தையில் விலையும் கிடைக்காது.

வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும் அதலைக்காய்!

தலைக்காயின் மருத்துவக்குணங்கள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம்.

“அதலைக்காயின் இருபுறமும் காம்புகளை நீக்கிவிட்டு துண்டு துண்டாக வெட்டி, உப்பு சேர்த்த மோரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்தநாள் வெயிலில் காயவைத்து வத்தலாகச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயில் வத்தலைப் பொரித்து  உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

பச்சையாகச் சாப்பிட்டால் வாய்ப்புண், நாக்குப்புண் குணமாகும். பொரியலாக செய்து சாப்பிட்டால் உணவுக்குச் சுவை கூட்டும். அதலைக்காய் நீரிழிவு, மஞ்சள்காமாலை நோய்க்குச் சிறந்தது என மக்களிடையே பரவலாகச் சொல்லப்படுகிறது. இது நம்பத் தகுந்த தகவல் அல்ல என்றாலும் மக்கள்  இதை நம்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்துகூட  தென்மாவட்டங்களுக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

தொடர்புக்கு சாத்தாவு,  செல்போன்: 9965220876

நன்றி:விகடன்

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *