ரசாயன உரம் கலக்காத, பூச்சிமருந்து தெளிக்காத இயற்கை சாகுபடி காய்கறிகளுக்கு மக்களிடத்தில் எப்போதுமே மவுசு உள்ளது என்கிறார் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அழகனேரியைச் சேர்ந்த விவசாயி மாடசாமி.
மக்களின் வரவேற்பு குறித்து அவர் கூறியதாவது:மொத்தம் 3 ஏக்கர் உள்ளது. 60 சென்டில் பிச்சிப்பூ, 8 சென்டில் கனகாம்பரம், 15 சென்டில் ரோஜாப்பூ பயிரிட்டுள்ளேன். பூக்களை சக விவசாயிகளுடன் சேர்ந்து துாத்துக்குடி, கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு அனுப்புகிறேன். அதிலும் உரம், பூச்சிமருந்து பயன்படுத்துவதில்லை. 30 சென்டில் கத்தரிக்காய், 30 சென்டில் வெண்டைக்காய், மீதி நிலத்தில் தக்காளி, பாகற்காய் சாகுபடி செய்துள்ளேன். ரசாயன கலப்பில்லாமல் விளைந்த காய்கறிகளை வியாபாரிகளிடம் கொடுத்த போது எனது முயற்சிக்கு பெரிதாக வரவேற்பில்லை. மற்ற காய்கறிகளுடன் சேர்த்தே விற்றனர். விலையும் ஒரே விலையாக தான் கொடுத்தனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
இதனால் பொதுமக்களிடம் நேரடியாக இயற்கை காய்கறிகளை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.
தள்ளுவண்டியில் காய்கறிகளை கொண்டு சென்று குருவிக்குளம் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். முதல் முறை வாங்கியவர்கள் காய்கறிகளின் ருசி நன்றாக இருந்ததாக வாடிக்கையாளர்களாக மாறினர். அழகனேரி, மீனாட்சிபுரத்தில் ஆறு விவசாயிகள் இயற்கை முறையில் காய்கறி, கொய்யா சாகுபடி செய்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்தேன். வாரத்திற்கு அரை டன் காய்கறி, பழங்களை விற்பனை செய்கிறேன். வியாபாரிகள் ரசாயன காய்கறிகளை கிலோ ரூ.40க்கு வாங்கி ரூ.70க்கு விற்கின்றனர். தள்ளுவண்டியில் சென்று கிலோ ரூ.60க்கு விற்கிறேன். இதனால் நான் உட்பட ஆறு விவசாயிகளுக்குமே லாபம் கிடைக்கிறது.
எனது சொந்த நிலம் தான். சாகுபடி, அறுவடை நேரம் போக மீதி நேரத்தில் விற்பனை என திட்டமிட்டு செய்வதால் நிம்மதியாக நிரந்தர வருமானம் பார்க்கிறேன் என்றார்.
தொடர்புக்கு: 9159370754
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்