இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி

இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் பயிரிடுவதில் திருவள்ளூர் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.


தற்போதைய காலகட்டத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அதிகளவில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இக் காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்துவதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகக் கூறப்படுகிறது. அதனால், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகளை விளைவிக்கின்றனர்.

 

திருவள்ளூர் பகுதியில் புதுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய், சுரைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

 • இம்முறையில் பயிரிடும் நிலத்தை நன்றாக உழவு செய்து பதப்படுத்த வேண்டும்.
 • ஒரு செடிக்கு 8 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
 • இதற்கு அரை ஏக்கரில் பயிரிட நில பராமரிப்பு, இயற்கை உரம் ஆகியவற்றுக்கு, ரூ.18 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை செலவாகும். அதைத் தொடர்ந்து 30-ஆவது நாளில் பந்தலில் ஏற்றிவிடுவதோடு, 40 நாள்களிலேயே காய்ப்புக்கு வரும். அதையடுத்து நாள்தோறும் 80 கிலோ முதல் 100 கிலோ வரையில் அறுவடை செய்யலாம்.
 • இயற்கை முறையில் பயிரிடுவதால் கொடியும் சேதமின்றி பந்தலில் பாதுகாப்பான முறையில் படரும். அத்துடன், காய்கறிகளில் சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
 • நிழல் படர்ந்த நிலையில் இருப்பதால் விளைநிலம் ஈரத்தன்மையுடன் காணப்படும். அதிக தண்ணீரும் செலவாகாது. இதேபோல் சுரைக்காயையும், பீர்க்கங்காயையும் சாகுபடி செய்யலாம்.
 • இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கிறது. இந்த முறையில் சாகுபடிக்கு பந்தல் அமைக்க தூண்களும் , கம்பி வலையும் தோட்டக்கலைத் துறை சார்பில் மானியத்தில் அளிக்கப்பட்டு வருகின்றன.
 • இதுபோன்ற காரணங்களால் பாதுகாப்பான முறையில் பந்தல் அமைத்து, மேற்குறிப்பிட்ட காய்கறிகளை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான ராமமூர்த்தி (68) கூறியதாவது:

 • எனக்கு 21 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் உள்ளன. இதில் இயற்கை உரங்களை பயன்படுத்தியே நெல் மற்றும் தானிய உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறேன். அதேபோல், காய்கறிகளையும் உற்பத்தி செய்து வருகிறேன்.
 • தற்போதைய நிலையில் பந்தல் அமைத்து பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய் ஆகிய காய்கறிகளை தலா அரை ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வருகிறேன். அத்துடன், சந்தையில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து ரூ. 20 முதல் ரூ. 25 வரையில் கொள்முதல் செய்கின்றனர்.
 • இந்த முறையில் பந்தல் அமைக்க தூண்கள் மற்றும் கம்பி வலை அமைக்க அரை ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் செலவானாலும், தொடர்ந்து 5 ஆண்டுகள் வரையில் பயன்படுத்த முடியும். இதுபோன்ற விவசாய சாகுபடியை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆண்டு வரையில் 50 சதவீதம் வரையில் பந்தல் அமைக்கும் தூண், கம்பி வலைக்கு மானியம் அளிக்கப்பட்டது.
 • அதேபோல், இந்த ஆண்டும் மானியம் வழங்குவார்கள் என்பதற்காக ஒரு ஹெக்டேர் பரப்பளவில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பந்தல் அமைத்து காற்கறி சாகுபடி மேற்கொள்வதற்கு ஒரு ஏக்கருக்கு 50 சதவீதம் மானியம் அளிக்கப்பட்டு வந்தது.

இதில் கட்டாயம் 400 தூண்கள் இடம் பெற்றிருப்பதோடு, கம்பிவலையும் அமைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு வரை மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கு மானியத்துக்கான திட்ட மதிப்பீடு அனுப்பியுள்ளோம். அரசு ஒதுக்கீடு செய்தால் தான் மானியம் எவ்வளவு என்பது தெரியும் என்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *