இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படும் நெதர்லாந்து மிளகாய்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.

நோய் தாக்குதல், உரங்களின் விலையேற்றம், இடைத்தரகர்களின் தலையீட்டால் விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காமை போன்றவற்றால் விவசாயிகள் கடுமையான பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்பொழுது தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, இயற்கைச் சீற்றம் போன்றவற்றாலும் பயிர் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீர் மூலம், பசுமை குடில் அமைத்து பல வகையான காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு நவீன முறையில் பசுமைக்குடில் அமைத்து, முதன்முறையாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாட் பெப்பர் எனப்படும் ஒருவகை பச்சை மிளகாயை வளர்க்கின்றனர். மேலும் கப்பிப், தண்டர், ரும்ப்லீ, குர்ட்லஸ் உள்ளிட்ட ஐந்து மிளகாய் வகைகளை இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

நிழல்வலை குடில், நிலப்போர்வை அமைத்து விவசாயம் செய்தால், விவசாயிகளுக்கு பெருமளவு செலவு குறையும். இதுபோன்று சாகுபடி செய்யும் போது மழை காலத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதுபோன்ற பசுமை குடில் அமைத்து, நாத்து நடவு செய்து மூன்று மாதங்களில் மகசூல் எடுக்கலாம் என்கின்றனர் காய்கறி மகத்துவ மைய விஞ்ஞானிகள்.

ஒரு மிளகாய் சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்ட நிலையில், இதில் காரத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். பாஸ்ட் புட் மற்றும் வீட்டுச் சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் இந்த வகை மிளகாய்க்கு வெளிநாடுகளில் அதிக அளவு வரவேற்பு உள்ளது. சாதாரண மிளகாயை விட இரண்டு மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கும் இவ்வகை மிளகாய்களில் பூச்சித் தாக்குதலும் குறைவு. முதற்கட்டமாக ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் 500 சதுர அடியில் ஆயிரம் செடிகள் சோதனை முறையில் நட்டு வளர்த்து வருவதாகவும், விரைவில் விவசாயிகளும் வழங்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாளுக்கு நாள் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனை சமன்படுத்த இதுபோன்ற மாற்றுமுறை விவசாய முறைகளை கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..

நன்றி: பாலிமர் நியூஸ் .


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *