கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் ஒரு மலைப்பிரதேசம். சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற வயநாட்டில் விவசாயம்தான் பிரதானம். அங்கு புல்பள்ளி என்ற பகுதியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் வர்க்கீஸ் என்ற விவசாயி, வித்தியாசமான முறையில் கேரட் சாகுபடி செய்து வருகிறார். நேரடியாக நிலத்தில் வளர்க்காமல், கம்பி வலையில் மண் நிரப்பி, அதில் கேரட் வளர்த்து வருகிறார்.
அவரது தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்வதற்காக வர்க்கீஸிடம் பேசினோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றரை ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். குறுமிளகு, ஏலக்காய், கிராம்பு, பழவகைகளைச் சாகுபடி செய்து வருகிறேன். முதலில், மண்ணில் நேரடியாகத்தான் கேரட்டை விதைத்தேன். அது மழை பெய்து அது சேதமடைந்துவிட்டது. மேலும், வெப்பம் அதிகரிக்கும்போது மண் இறுக்கமாவதும் ஒரு பிரச்னையாக இருந்தது. அதனால்தான், இந்த யோசனையைச் செயல்படுத்தினேன். இதற்கு அதிக இடமும் தேவையில்லை’’ என்றவர் அவர் செயல்படுத்தும் முறையைச் சொல்லத் தொடங்கினார்.
‘‘வெல்டு மெஷ் நெட் (Welded Mesh Net) கம்பி வலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை 60 செ.மீ-க்கு வெட்டிக்கொள்ள வேண்டும். அந்த நெட்டில் பெயின்ட் அடித்துக்கொண்டால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு உழைக்கும். பெயின்ட் அடிக்காவிட்டால் நெட் துருப் பிடித்துப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். பிறகு அந்த மெஷ் நெட்டுக்குள், ஒரு க்ரீன் நெட்டை (பசுமை வலை) வைத்து வட்டமாக்கிக் கொள்ள வேண்டும். நெட்டை ஒரு கயிற்றால் கட்டினால் போதும். பிறகு, அந்த நெட்டின் உயரத்துக்குத் தகுந்தாற்போல வட்டத்தின் நடுவில் ஒரு ட்ரிப் பைப்பை (சொட்டு நீர்க் குழாய்) உள்ளே விட வேண்டும். பிறகு, மண்ணைப் போட்டு நெட்டை நிரப்ப வேண்டும். பிறகு, நெட்டின் வெளிப்பகுதியில் 7 அடி இடைவெளிவிட்டு, பிளேடால் வெட்டி, குச்சியின் உதவியுடன் விதைகளை உள்ளே நடவு செய்ய வேண்டும். நெட்டின் நீளத்துக்கு மூன்று பகுதிகளில் தலா 7 இடங்கள் வீதம் 21 விதைகள் நடலாம். மேலும், நெட்டின் மேல் பகுதியில் 4 விதைகள் என மொத்தம் 25 விதை களை நடவு செய்யலாம்.
முடிந்தவரை மண்ணை இறுக்கமாகப் போடாமல், சற்று பொலபொலப்பாகப் போட வேண்டும். பக்கெட்டில் தண்ணீர் ஊற்றினால் அதன் வேகத்தால் விதைகளுக்குப் பிரச்னை ஏற்படும். அதனால், நாம் ஏற்கெனவே உள்ளே வைத்துள்ள சொட்டுநீர்க் குழாய் மூலமாகத் தண்ணீர் கொடுக்கலாம் அல்லது ஸ்பிரேயர் கொண்டும் தெளிக்கலாம். ஆனால், சொட்டுநீர் பைப் இருந்தால் வேலை எளிது. மழை வரும்போது, ஏதாவது ஷீட் போன்ற மூடிகளை வைத்து நீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, இலைப் பொடிகளை உரமாகப் பயன்படுத்தலாம். ஆட்டுப் புழுக்கை நல்ல பயனைத் தரும். 90 நாள்களில் கேரட்டை அறுவடை செய்துவிடலாம். சராசரியாக ஒரு நெட்டில் 4 முதல் 5 கிலோ கேரட் கிடைக்கிறது. நான் மொத்தம் 45 நெட்களில் கேரட் சாகுபடி செய்து வருகிறேன். இந்த அமைப்புக்குச் சுமார் ரூ.20,000 செலவானது. இந்த முறையில் இரண்டாண்டுகளாகக் கேரட் சாகுபடி செய்து வருகிறேன்’’ என்றவர் நிறைவாக,
‘‘ஆண்டுக்கு 4 முறை வீதம் இரண்டாண்டுகளில் 8 முறை கேரட் சாகுபடி செய்துள்ளேன். இரண்டு முறையிலும் சாகுபடிக்கு 90 நாள் களாகும். மண்ணில் 1 கேரட் விளைந்த இடத்தில், இங்கு 50 கேரட்டுகள் கிடைக்கின்றன. ஒரு கிலோ கேரட் ரூ.40-லிருந்து 50-க்கு விற்கிறேன். இது எல்லா இடங்களிலும் விளையும். மண்ணில் சாகுபடி செய்யும் அளவுக்கு இதில் மெனக்கெடத் தேவையில்லை. குறைந்த அளவு தண்ணீர் போதும். விதை பை முறைபோலத்தான் இந்த நெட்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அமைத்தேனோ? இப்போதும் அப்படிதான் இருக்கிறது. நம் வீடுகளில் ரோஜா செடி வளர்ப்பது போலத்தான், இதைப் பராமரிப்பதும். மொட்டை மாடி, வீட்டின் இரண்டு புறங்களில் கூட இதை வைக்கலாம். விவசாயிகளுக்கும் இது நல்ல லாபத்தைக் கொடுக்கும்” என்றார்.
தொடர்புக்கு, வர்க்கீஸ், செல்போன்: 9744367439
(குறிப்பு: தமிழில் பேசினால் புரிந்துகொள்வார். ஆனால், பதில் சொல்லத் தமிழ் தெரியாது. அவருக்கு மலையாளம் மட்டும்தான் தெரியும்)
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்