காய்கறி சாகுபடியில் குழித்தட்டு நாற்றங்கால்

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், காய்கறி பயிர்களில் அதிக மகசூல் பெற, குழித்தட்டு நாற்றங்கால் முறையில் நாற்றுவிட்டு நடவு செய்ய வேண்டும், தோகைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன், தெரிவித்தார்.

அவர் தெரிவித்தாவது:

 • கரூர் மாவட்டம், தோகைமலை பகுதி விவசாயிகள் காய்கறி பயிர்களில், அதிக மகசூல் பெறுவதற்கு, வீரிய ஒட்டு ரக விதைகளை பயன்படுத்த வேண்டும்.
 • சாதாரண நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் போது, பயிர் செய்யும் செலவு மிக அதிகமாகிறது.
 • விதை அளவை குறைத்து, தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வதன் மூலம், விதை செலவு குறைவதுடன், அதிக மகசூலும் பெற முடியும்.
 • காய்கறி பயிர்களுக்கு, 0.8 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட, 98 குழிகள் உள்ள குழித்தட்டுகள் ஏற்றது.
 • குழித்தட்டுக்களில், அதிகப்படியான நீர்வழிந்து செல்ல ஏதுவாக அடியில் இரண்டு துளைகள் இருக்கும்.
 • தட்டுக்களை எளிதாக மடக்கி எடுத்துச் செல்லமுடியும்.
 • குழித்தட்டு நாற்றங்கால் மூலம், காய்கறி பயிர்கள் மற்றும் அனைத்து நாற்று விட்டு நடவு செய்யும் பயிர்களையும் உற்பத்தி செய்யலாம்.
 • குழித்தட்டுகளில், நன்கு பதப்படுத்தப்பட்ட போதுமான தென்னை நார்க்கழிவினை நிரப்பி, 2 செ.மீ., ஆழத்தில் குழி உருவாக்கி, குழிக்கு, ஒரு விதை என்ற அளவில் இட வேண்டும்.
 • மீண்டும் நார்கழிவு மூலம் விதைகளை மூடி பின், குழித்தட்டுகளை, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வெளிச்சம் உட்புகாதவாறு பாலித்தீன் தாள் கொண்டு, ஐந்து நாட்களுக்கு மூடிவைக்க வேண்டும்.
 • இரண்டு நேரம், தண்ணீர் தெளிக்க வேண்டும்.
 • குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்த தக்காளியை, 25 முதல் 30 நாட்களிலும், மிளகாய், கத்திரி நாற்றுக்களை, 35 முதல், 40 நாட்களிலும், வெங்காய நாற்றுக்களை, 20 முதல், 25 நாட்களிலும் எடுத்து நடவு செய்யலாம்.
 • பயன்கள்: குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதால் விதை அளவு குறைகிறது.
 • பூச்சி நோய் தாக்குதல் குறைகிறது.
 • நடவு நிலத்தில் செடிகள் மடிவது குறைகிறது. விரைந்து மகசூல் கொடுக்கிறது. அதிக வருமானம் பெறலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *