சிம்ரன் கத்தரி, புல்லட் ரங்கா மிளகாய், சிவம் தக்காளி!

மற்ற தொழில்களைப் போல தான் விவசாயமும். விதைகள் மற்றும் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம், விளைந்தபின் அறுவடை செய்யலாம், விளைபொருளை மதிப்பு கூட்டி சந்தையில் விற்கலாம். அவரவர் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்து கவனிப்பாக செய்தால் வெற்றியும் லாபமும் நிச்சயம் தான்.

சொந்த தோட்டத்தில் கத்தரி, தக்காளி விளைந்தாலும் மற்ற விவசாயிகளுக்கு குழித்தட்டு நாற்றாங்கால் முறையில் சிம்ரன் கத்தரி, புல்லட் ரங்கா மிளகாய், சிவம், லட்சுமி ரக தக்காளி நாற்றுகளை விற்று லாபம் பார்க்கிறார் மதுரை திருமங்கலம் தங்கலாச்சேரியைச் சேர்ந்த விவசாயி பால்பாண்டி.

அவர் கூறியதாவது:

5 ஏக்க ரில் மக்காச்சோளம், கத்தரி, வெண்டை, வாழை நட்டுள்ளேன். மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் இருந்தால் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் உஷாராணி ஆலோசனை வழங்குகிறார். தோட்டக்கலைத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் 1000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைத்து தந்தனர். இதில் குழித்தட்டு முறையில் கத்தரி, வெண்டை, தக்காளி நாற்றுகளை உற்பத்தி செய்து அரசுக்கே விற்பனை செய்ய வேண்டும். விதையிலிருந்து 30 – 40 நாட்கள் வரை வளர்த்து நாற்றாக்குகிறோம். ஒரு நாற்று 25 காசுக்கு அரசுக்கு தருகிறோம். விவசாயிகளுக்கு இதை தோட்டக்கலை துறையினர் இலவசமாக தருவர். டெண்டர் முறையில் விற்பனை செய்து வருகிறேன். அரசுக்கு போக மீதியுள்ள நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்கிறேன்.

சிம்ரன் கத்திரி, சிவம், லட்சுமி ரக தக்காளி நாற்று 60 காசு, புல்லட்ரங்கா பச்சை மிளகாய் 80 காசுக்கு விற்கிறோம். இதன் மூலம் ரூ.30ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. ஆகஸ்ட் வந்தால் ஆடிப்பட்டம் துவங்கி விடும். கூடுதல் நாற்றுகளை உற்பத்தி செய்வோம். அரசுக்கு நாற்றுகள் விற்பனை செய்வதன் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும்.

மேரிகோல்டு பூச்செடி நாற்று ரூ.2 வரை விற்கிறோம். தரமான பப்பாளி மரக்கன்று, வெங்காயம், காலிபிளவர் நாற்றுகளை ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்கிறோம். நாற்று உற்பத்தியில் தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். 10 பேருக்கு வேலை கொடுப்பது பெருமையாக உள்ளது. விவசாயமும் லாபமான தொழில் தான். அதை முறையாக கையாளத் தெரிய வேண்டும் என்றார்.

இவரிடம் பேச: 9787245581
.

எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *