சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி

சில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், கனி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. மாவு பூச்சிக்கு பயந்து தற்போது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மா, வாழை, பருத்தி, கொய்யா, பப்பாளி, மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். சமீப காலமாக குறிப்பாக மழையளவு குறைந்த வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பயிர்களையே மாவு பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.

சூரிய உதயத்திற்கு முன்பாக செடிகளில் இருந்து வெளியேறும் மாவு பூச்சிகள் பொதுமக்களின் உடல் மற்றும் கண்களில் பட்டு எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. மாவு பூச்சிகள் பயிர்களை மட்டுமின்றி, மக்களையும் பாதிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மாவு பூச்சி தாக்குதல் பரவலாக இருப்பதால்,  பருத்தி சாகுபடி செய்யும் பட்சத்தில், தளிர்களை மாவு பூச்சி தாக்கினால், செடிகள் வளர்ச்சி குறைந்து கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால், விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடிக்கு பதிலாக லாபம் தராவிடிலும் நஷ்டம் ஏற்படுத்தாத  சோளம், அவரை, தட்டபயிர் போன்றவற்றை சாகுபடி செய்கின்றனர்.

சேலம் மாவட்டத்தின் வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:

  • மாவு பூச்சிகள் முதல்கட்டமாக மரத்தில் உள்ள காய்களில் அமர்ந்து பச்சையத்தை சாப்பிட்டு, படிப்படியாக மரத்தின் இலைகளில் உள்ள பச்சையத்தையும் உறிஞ்சி விடும்.
  • மாவு பூச்சி தாக்கிய மரங்கள் சில வாரங்களில் கருக துவங்குவதே விவசாயிகளின் கலக்கத்திற்கு காரணம்.
  • வெள்ளை நிறத்தில் மாவு மற்றும் மெழுகு பூச்சுடன் கூடிய மாவு பூச்சி  முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை வாய்ந்தது.
  • பெண் பூச்சி வாழ்நாளில் 400 முதல் 500 முட்டையிடும்.
  • ஒரே ஆண்டில் 10 முதல் 15 தலைமுறை வரை இனவிருத்தி செய்யக் கூடியவை.
  • பூச்சிகள் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கும், எறும்பு, மனித நடமாட்டம், காற்றின் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதில் பரவும்.
  • வேம்பு எண்ணெய், மீன் எண்ணெய், அசாடிராக்டின், புரோபனோபாஸ், குளோர்பைரிபாஸ், டைமிதோயேட் போன்ற மருந்துகள் மூலம் மாவு பூச்சிகளை அழிக்க முடியும்.
  • பெரிய அளவில் மழை பெய்தால் மாவு பூச்சிகள் முற்றிலும் அழிந்து விடும்.
  • ஆண்டுதோறும் அந்த சீசனில் மழை பெய்தால் மாவு பூச்சிகள் ஒழிந்து விடும். சமீப காலமாக குறித்த நேரத்தில் பருவமழை பெய்யாமல் இருப்பதும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாவு பூச்சி தீவிரமாக பரவுவதற்கு காரணமாகும்

கடந்த சில நாட்களாக சேலம், ஈரோட போன்ற இடங்களில் நல்ல மழை பெய்து உள்ளது. இதனால், மாவு பூச்சியின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என்றுநம்புவோம்.

மாவு பூச்சி பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *