வறட்சி மிகுந்த அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சுப்பிரமணியன்.இவர், தனது குடும்பத்தினருடன் சுமார் 7 ஆண்டுகளாகக் காய்கறிச் சாகுபடியில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இவருக்கு உறுதுணையாக இவருடைய மனைவி மலர்க்கொடி, மகன் அழகுதுரை ஆகியோரும் விவசாயப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
தத்தனூரிலிருந்து சுத்தமல்லி செல்லும் சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் தற்போது சுரைக்காய், புடலை, வெண்டை, கடலை ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்துள்ள அவர்கள், நாள் முழுவதும் தோட்டத்திலேயே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
“ஏன் வேலை செய்யவில்லை என எங்களை கேட்க யாரும் இல்லை. எங்களது வயல், எப்போது வேண்டுமானாலும், வேலை செய்யலாம் அசதியாக இருந்தால் சற்று ஓய்வெடுக்கலாம்” என்கிறார் சுப்பிரமணியன்.
தற்போது, வெண்டை, புடலை, சுரைக்காய் ஆகியவை அறுவடை நேரமாக உள்ளது. இவற்றைப் பறிக்க ஆட்கள் வருவார்களா எனக் கேட்டால், “இல்லை அனைத்தையும் நாங்களே பறித்து விடுவோம்” எனக் கூறுகிறார் சுப்பிரமணியனின் மனைவி மலர்க்கொடி.
அதிகாலையில், காய்கறிகளைக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு 9 மணிக்கு மேல் வயலுக்கு வந்தால், மாலை வரை காய்கறிகள் அறுவடை செய்வது, மாலையில் அவற்றைக் கடைகளுக்கு அனுப்பும் வகையில் தரம் பிரித்து மூட்டைகளாகத் தயார் படுத்தி வைப்பதுதான் தற்போதைய அவர்களது வேலை. தற்போதுள்ள காய்கறிகளின் காய்ப்புத்திறன் நிறைவுக்குப் பின், அடுத்த படியாகப் பாகற்காய் சாகுபடி செய்யவுள்ளார்கள்.
ஏற்கெனவே, முருங்கையில் ஊடுபயிராகக் கடலையைப் பயிரிட்டு அறுவடை செய்து முடித்திருக்கிறார்கள். ஓரிரு மாதங்களில் முருங்கைகாய்க் காய்ப்புக்கு வந்துவிடும்.
அப்போது, முருங்கையும் பாகற்காயும் அறுவடைக்கு வந்து விடும். தற்போது, சுமார் 100 குழி நிலத்தில் (100 குழி என்பது ஒரு மா. 3.5 மா என்பது 1 ஏக்கர் ஆகும்) புடலையும் சுரைக்காயும் பயிரிட்டுள்ளோம். அதற்காகப் பந்தல் அமைத்துப் பராமரித்து வருகிறார்கள்.
குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடிய பயிர்களாகக் காய்கறிகள் உள்ளன. குறைவான தண்ணீரும் இதற்குப் போதுமானது. சுரைக்காய் ஒன்று ரூ.10 எனத் தற்போது விற்பனை ஆகிறது. அதுபோல் புடலையும் கிலோ ரூ.15, வெண்டை கிலோ ரூ.10 என வியாபாரிகள் எடுத்துச் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 50 சுரைக்காயும் 50 கிலோ புடலையும் 100 கிலோ
வெண்டையும் அறுவடை செய்து கடைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்தப் பயிர்கள் 30 நாட்களில் காய்ப்புக்கு வந்துவிடுகின்றன. தொடர்ந்து 2 மாதம் வரை காய்கறிகளை அறுவடை செய்யலாம்.
“தரமான விதைகளை வாங்கிப் பயிரிடும் பட்சத்தில் நல்ல மகசூல் கிடைக்கிறது. மாட்டு எருவைப் போதுமான அளவு தோட்டத்தில் இடுவதால், மண் தரம் உயர்கிறது. இதனால் மகசூல் கூடுகிறது” என்கிறார் சுப்பிரமணியன்.
கடந்த 7 ஆண்டுகளாக காய்கறிச் சாகுபடியில் ஈடுபட்டுவருகிறது சுப்பிரமணியனின் குடும்பம். இங்கு அறுவடையாகும் காய்கறிகளை, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
“விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்தால் தினமும் வருமானம் பெறமுடியும். மேலும், ஒரே பயிர்களைச் சாகுபடி செய்யாமல், குறைந்த அளவில் பலதரப்பட்ட பயிர்கள், குறிப்பாக மலர், காய்கறி போன்றவற்றைச் சாகுபடி செய்வது லாபமானது” என்கிறார் அழகுதுரை.
தற்போது கூலி ஆட்கள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது போல பயிர்களைச் சாகுபடி செய்யக் கூலி ஆட்கள் தேவையில்லை என்பது இதில் சிறப்புக்குரிய ஒன்று.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்