நாட்டுக் காய்கறி-வீரியரகக் காய்கறி: கண்டறிவது எப்படி?

பசுமைப்புரட்சியின் மகிமையால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்கைக் காய்கறிகள் என்றால் என்ன என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறிவருகிறது. ஆரோக்கியமாக வாழ இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பின்னணியில் நாட்டு ரகமும் வீரிய ரகமும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோற்ற மயக்கத்துடன் இருக்கின்றன. ஒரு காய்கறி எந்த ரகம் என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது. ஆடு, கோழியில் தொடங்கி, காய்கறிகள்வரை எல்லாமுமே கலந்துதான் சந்தைக்கும் வருகின்றன. இதில் நாட்டுரகக் காய்கறிகளை மட்டுமே தேடி வாங்க ஆசைப்பட்டால், அதற்கு அனுபவம் அறிவும் பிரித்தறியும் நுட்பமும் தேவைப்படுகின்றன. இது குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் இயற்கை வேளாண் வல்லுநர் குமாரசாமி:

நீர்க்காய்கள்

பல்கலைக்கழகங்கள் எல்லாக் காய்கறிகளிலும் வீரியரகத்தைக் கொண்டு வந்துவிட்டன. அதில் ஒன்று கும்பச்சுரை, நீளச்சுரை (சுரைக்காய்). நீளச்சுரைக் காயில் வீரியரகம், நாட்டுரகம் உண்டு. கும்பச்சுரைக்காயில் நாட்டு ரகம் மட்டுமே. இதன் நீளம் குறைவு. புடலையில் இரண்டு வகை உண்டு. பாம்புப் புடலை, குட்டைப் புடலை. இரண்டு புடலை வகையிலும் வீரியரகம் வந்துவிட்டது. குட்டைப் புடலையில் மரபு விதை இன்னும் சில கிராமங்களில் கிடைக்கலாம். சந்தையில் எந்த வகைப் புடலை வந்தாலும் நாட்டுரகப் புடலையைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாது. சாப்பிட்டுதான் சொல்ல முடியும்.

தற்போது சந்தைக்கு வரும் ஒரு பாகற்காய் குறைந்தது 300 கிராம் இருக்கிறது. ஆனால், கட்டைவிரல் நீளமும் ஆட்காட்டி விரல் நீளமும் கொண்ட பாகற்காய் மட்டுமே நம்மிடம் உண்டு. கட்டைவிரல் அளவு கொண்ட பாகற்காய் தரையோடு தரையாக விளையும். இதைக் கிராமத்தில் மிதிப்பாகல் என்பார்கள். பாகற்காயின் நீளத்தை வைத்தே, அவை என்ன ரகம் என்று முடிவுக்கு வந்துவிடலாம். ரொம்ப நீளமான பாகற்காய் நம் மரபில் கிடையாது.

நாட்டுக்காய்கள்

தமிழ்நாட்டில் 15 வகையான நாட்டுக் கத்தரிக்காய் வகைகள் உண்டு. மரபு வகைக் கத்தரிக்காய், நாட்டுக்கோழி முட்டை அளவுக்குத்தான் இருக்கும். அதையும் தாண்டி வீரியரகம்தான் கோலோச்சுகிறது. கத்தரிச் செடியில் எத்தனை முறை பூச்சிக்கொல்லி தெளித்தாலும் 30 சதவீதம் காய்கள் புழுத்துப் போகுது என்றே உழவர்கள் சொல்கிறார்கள்.

வெண்டையில் பால்வெண்டை, சிவப்பு வெண்டை, சாதாரண வெண்டை என்று மூன்று வகைகள் இருந்தன. இவை தவிர கன்னியாகுமரியில் பயிரிடப்படும் நீளமான வெண்டைக்கு ‘யானைக்கொம்பன்’ என்று பெயர். இன்றைக்கு இவையெல்லாம் போய் ஒரே வகையான வெண்டையைத்தான் நாம் சாப்பிடுகிறோம். நாட்டுரக வெண்டைகள் பெருவிரல் நீளத்துக்குதான் இருக்கும். ஆனால், பெருவிரலைவிட நீளமாக இருக்கும் வெண்டையைத்தான் தற்போது ஆர்வமாக வாங்குகிறோம்.

வெண்டை பச்சையாக சாப்பிடும்போது அதன் வழுவழுப்புத் தன்மையை வைத்துக் கிராமத்தினர், அதன் ரகத்தைச் சொல்லிவிடுகிறார்கள். காய்கறிகளிலே வெண்டைக்குத்தான் பூச்சி தாக்குதல் அதிகம். அதனால் 3 நாட்களுக்கு ஒருதரம் பூச்சிக்கொல்லி அடிக்கிறார்கள். வெண்டை சாப்பிட்டால் புத்திசாலிப் பிள்ளையாக வளரலாம் என்று ஊரில் சொல்வார்கள். ஆனால், பூச்சிக்கொல்லி அடிப்பதை நேரில் பார்த்தால் முட்டாள் பிள்ளையாகவே இருந்துவிடலாம் என்று சொல்லிவிடுவோம்.

நாட்டு ரகமே இல்லை

‘வற்றல் மண்டிக்கு காம்பு ஆய வேலைக்கு போய் கல்யாணம் கட்டிக்கொடுத்த காலமெல்லாம் மலையேறி போயிட்டு’. மிளகாயில் சம்பா ரகம் உண்டு. சம்பா மிளகாய் ஆள்காட்டி விரல் நீளத்துக்கு இருக்கும். உருண்டையாக இருக்கும் இன்னொரு மிளகாய், குண்டுமிளகாய். வீரியரக மிளகாய் வற்றலின் நீளம் கூடுதலாக இருக்கும். நீளத்தை வைத்துதான் இதை அடையாளம் காணலாம். குண்டு மிளகாய் கரிசல்காட்டில் மானாவாரியாகத்தான் விளைகிறது. விளைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால், வீரியரகம் வந்தபிறகு விளைச்சல் குறைந்துவிட்டது.

தக்காளியில் வீரியரகம் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டு ஆகிறது. தக்காளி விதை கம்பெனிக்காரன் கொடுத்தால் மட்டுமே இது முளைக்கும். தக்காளியில் இருந்து நாம் விதை எடுக்க முடியாது. நாட்டுரகத் தக்காளி சிறிய அளவில் உருண்டையாகதான் இருக்கும். நல்ல புளிப்பு தன்மையும் கொண்டது. தற்போது நாட்டுரகமே இல்லையென்றே துணிந்து சொல்லலாம்.

விதைகள் யார் கட்டுப்பாட்டில்?

சித்திரையில் கோயில் கோடை நடந்து முடிந்து ஐப்பசியில் மழைபெய்யும்போது கேந்திச் செடி (துலுக்க சாமந்தி) சாமி சிலை அருகே முளைத்திருக்கும். நாங்கள் அந்தச் செடியை எடுத்து எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் நட்டுவைப்போம். ஆனால், இப்போது கேந்திப்பூ மாலையிலிருந்து செடிகள் முளைப்பதில்லை. காரணம் கேந்திப்பூவில் நாட்டு ரகமே கிடையாது.

அப்படியே இருந்தாலும் அளவில் சிறியதாக இருப்பதால் சந்தையில், அந்தப் பூவை வியாபாரிகள் வாங்க மாட்டார்கள். வீரியரக கேந்திப்பூ பார்ப்பதற்குப் பெரிதாக இருக்கும். இந்தப் பூவுக்கு நிறுவனத்தில்தான் விதை வாங்க வேண்டும் அல்லது உழவர்களிடம் நாற்று வாங்கலாம். இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கேந்திப்பூ பயிர் செய்கிறவன் எந்தப் பூ வேண்டும் என்று முடிவுசெய்யும் இடத்தில் இல்லை. பூ கட்டுகிறவனும் இல்லை. யார் இருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், உருளைக்கிழங்கு நூல்கோல் போன்ற ஐரோப்பிய காய்கறிகளில் நம் உழவர்கள் விதை எடுத்தார்கள். ஆனால், அவை மாறிவிட்டன.

இன்றைக்கு நிறுவனங்களிடம் விதை வாங்கித்தான் பயிர்செய்கிறார்கள். விதைகள் எடுத்து உழவர்கள் பயிர்செய்தால் செடி முளைக்கும், விளைச்சல் இருக்காது. ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்த ஏமாற்றம் ஐரோப்பிய உழவருக்கும் பொருந்தும். ஆனால், அந்த உழவரை அங்கேயுள்ள பல்கலைக்கழங்கள் காப்பாற்றும். நம் பல்கலைக்கழங்கள் நம்மைக் கைவிட்டுவிடும். அதுதான் வித்தியாசம்.

இப்படிச் சொன்னால், இன்னும் தெளிவாகப் புரியும். ஒரு நிலையில், இந்தியாவில் மிளகாய் பயிர்செய்யக்கூடாது என்று நிறுவனங்கள் முடிவெடுத்துவிட்டால் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. இனிமேல் மிளகாய் விதை கிடைக்காது என்று சொன்னாலே போதும். நம் உழவர்கள் மிளகாய் பயிரிட முடியாது. ஏனென்றால், நம்மிடம் விதை கிடையாது. விதைகள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டன. பிறகு மிளகாய் விலையும் ஏறிவிடும். எந்த விதையை உழவர்கள் பயிரிடயை வேண்டும் என்ற கட்டுப்பாடு நம் உழவர்களின் கைகளில் இல்லை.

மரபு விதை எங்கே இருக்கும்?

 

மரபு விதைக் காய்கறிகள் எங்கே இருக்கின்றன என்றால் சரியாகப் போக்குவரத்து வசதி இல்லாத பழைய குக்கிராமங்களில் வாழும் உழவரிடம் இருக்க வாய்ப்பு உண்டு.

ஏனென்றால், அந்த உழவர் விதை வாங்க சந்தைக்குச் செல்ல மாட்டார். தன்னுடைய விதைகளை வைத்து பயிர்செய்து பிழைத்துக்கொண்டிருப்பார்.

அதேபோல் நகரத்தைவிட்டுத் தள்ளியிருக்கிற கிராமத்தினரிடமும் தங்களுடைய காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டுவராமல் உள்ளூரிலேயே விற்பவர்களிடமும் மரபு விதைகள் இருக்கும்.

அந்தக் கண்ணி இன்னும் அறுபடவில்லை. அந்தக் கண்ணி அறுபடுவதற்கு முன்பு நாம் விதைகளைச் சேகரிக்க பெரிய முயற்சி எடுக்க வேண்டும்.

இயற்கை வேளாண் வல்லுநர் குமாரசாமி தொடர்புக்கு: 9442238851

கட்டுரையாளர் தொடர்புக்கு:
kannanjournalist@gmail.com

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *