நாமக்கல்: கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்

கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் ஆகியவை ஓசூர், பெங்களூரு போன்ற குளிர் அதிகமுள்ள பகுதிகளில் விளையும் பயிர்கள்.

மற்ற பகுதிகளில் கத்திரி, வெண்டை காய்கறிகள் மட்டுமே விளையும். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள பச்சுடையாம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து சாதனை படைத்துள்ளார். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி, இவற்றை சாகுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இதுகுறித்து விவசாயி சிவக்குமார் கூறியது:

இரு தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். காலச் சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்வதில் எனது தந்தை ராமசாமி ஆர்வம்காட்டி வந்தார். அதன்படி, எங்களுக்கு சொந்தமான நிலத்தில் கேரட் உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கினோம். ஊட்டி, கொடைக்கானல், ஓசூர், பெங்களூர் பகுதிகளில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் ஆகியவற்றைப் பயிரிட்டோம்.

20 ஆண்டாக சாகுபடி

இந்தப் பயிர்கள் ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் விளையும். அதற்கேற்ற குளிர் சீசன் அங்கு நிலவும். நாங்கள் குளிர் காலத்தில் இந்தப் பயிர்களை விளைவித்தோம். நல்ல விளைச்சல் கிடைத்தது. கடந்த 20 ஆண்டுகளாக குளிர் சீசன் சமயத்தில் இவற்றைப் பயிரிட்டு வருகிறோம். மற்ற மாதங்களில் கீரை உள்ளிட்ட வேறு பயிர்களை சாகுபடி செய்வோம்.

நாங்கள் விவசாயம் தொடர்பாக கல்வி பயிலவில்லை.தந்தையிடம் கற்ற அனுபவப் பாடம் மூலமே பயிர் சாகுபடி செய்து வருகிறோம்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது வந்து, கேரட், பீட்ரூட் விளைச்சலைப் பார்வையிடுவர்.

பயிர் விளைச்சலுக்கு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில்லை.

மாட்டுச் சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

இங்கு விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட் ஆகியவை உள்ளூர் சந்தைகளி்ல் விற்பனை செய்யப்படும். இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால், மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.

பொதுவாக கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற பயிர்கள் வளர மிகவும் குளிர்ந்த சூழலும், அதிக வெப்பமில்லாத நிலப்பகுதியும் அவசியம். சமவெளியில் இதற்கு சாத்தியமில்லை. ஆனால், சமவெளியில் இவற்றை சாகுபடி செய்தது வியப்புக்குரியது.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நாமக்கல்: கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *