பசுமைக்குடில் அமைத்து காய்கறி, பூக்கள் சாகுபடி

திருவள்ளூர் மாவட்டம், மோகூர் கிராமத்தில் பசுமைக்குடில் அமைத்து, தென்னை நார் பரப்பி அதில் காய்கறி, பழச் செடிகளை சாகுபடி செய்து நாள்தோறும் நல்ல முறையில் வருவாய் ஈட்டி வருவதாக தெரிவிக்கின்றனர் விவசாயத் தம்பதியர்.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது தோட்டக்கலைத் துறை, விவசாயிகள் நாள்தோறும் வருவாய் ஈட்டும் வகையில் பசுமைக் குடில் மற்றும் வலைக்கூண்டு பந்தல் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறிகள், பழ வகைகள், வாசனை- மூலிகைப் பயிர்கள், பூக்கள் சாகுபடி என 21 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.இதில் திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுமல்லிகை, சம்பங்கி, பிச்சிப்பூ, துளசி, மரிக்கொழுந்து, சாமந்திப்பூ, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் 2,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை சாமந்திப் பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.

தற்போது, மாறிவரும் சந்தைப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் விவசாயிகள் பசுமைக் குடில்கள் அமைத்து காய்கறிகள், பழங்கள், பூக்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் தோட்டக்கலை பயிர் உற்பத்தியை அதிகரித்து, லாபம் ஈட்ட வேண்டும் என்பதே அத்துறையின் நோக்கமாகும். இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் வலைக்குடில் மற்றும் பசுமைக் குடில் அமைத்து காய்கறி, பூக்கள் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியத்தை அரசு வழங்குகிறது. அதனால், இத்திட்டத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு முறை முதலீடு…: பூண்டி, மோகூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வலைக்கூண்டு அமைத்து காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து குறைந்த தண்ணீர் வசதியுள்ள இடங்களிலும் பயன்பெறலாம். இந்த முறையில் பசுமைக் குடில் அமைத்து பூ சாகுபடி செய்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இத்திட்டம் மூலம் சாகுபடி செய்வதற்கு பசுமைக்குடில் மற்றும் வலைக்குடில் அமைக்க ஒரு முறை முதலீடு செய்தால் போதுமானது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்யலாம்.

இதனால் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பூக்களை சாகுபடி செய்ய முடியும். இதுபோன்ற காரணங்களால் விளை நிலங்களில் பசுமைக்குடில் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வலைக்கூண்டு முறையில் சாகுபடி: இதேபோன்று வலைக்கூண்டு அமைத்து நாற்றுகள் வளர்க்கவும், பசுமைக்குடில் அமைத்து பூ மற்றும் காய்கறி சாகுபடி செய்வதால் பயிர் பாதுகாப்பாக இருக்கும். மேலும் கடும் வெப்பம், மழை மற்றும் காற்றடித்தால் பயிர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் பயிரும் சேதம் அடையாது, சாகுபடியும் பாதிக்காது. நீர் மேலாண்மை பராமரிப்பு என்பது சொட்டு நீர்ப்பாசனம் மூலமே அளிக்க முடியும். இதனால் சாகுபடியும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். இதேபோல் தேங்காய் நாரை டிரேயில் அடைத்து காய்கறி நாற்றுகளை வளர்க்க முடியும். இதன் மூலம் 25 நாள்களில் விற்பனை செய்து போதுமான வருவாய் ஈட்ட முடியும்.

நாள்தோறும் வருவாய்: இதுகுறித்து மோகூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதியான உமாபதி – விஜி கூறியது: திறந்த வெளியில் வாழை, காய்கறிகள் சாகுபடி செய்தபோது குறைந்த அளவே மகசூல் கிடைத்தது. தற்போது, 40 சென்ட் நிலப் பரப்பில் பசுமைக் குடில்களுடன், சொட்டு நீர்ப் பாசனக் கருவியும் அமைத்துள்ளோம். இதற்காக ரூ.17 லட்சம் கடனுதவி பெற்றுள்ளோம். இதில் ரூ.7 லட்சம் மானியமாக அளிக்கப்பட்டுள்ளது.

பசுமைக்குடில் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மகசூல் பெறலாம். மல்லி, சாமந்தி விதைகளை பெங்களூரு பகுதியில் வாங்கி வந்து பயிரிட்டுள்ளோம். இது வளர்ந்து 70 நாள்கள் முதல் பலன் அளிக்கத் தொடங்கும். இவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.90 வரையிலும், குறைந்த பட்சமாக ரூ.40 வரையிலும் விற்பனையாகும். அதேபோல், ரூ.5 லட்சத்தில் வலைக்கூண்டு அமைத்து காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறோம்.

தேங்காய் நார் கழிவுகளைப் பரப்பி காய்கறி விதைகளைப் போட்டு 28 நாள்கள் பராமரித்தால் நாற்றுகள் உற்பத்தியாகும். இதன்மூலம் நாள்தோறும் ரூ.1000 வரை வருவாய் கிடைக்கிறது.

இதற்கான விதைகளையும் பெங்களூருவில் இருந்தே வாங்கி வருகிறோம் என்றனர்.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் கருத்து :

பசுமை குடில் தொழிற்நுட்பம் முதலீடு அதிகம். ஆனால் அதில் வரும் லாபமும் அதிகம். இதில் விளையும் விளைபொருட்கள் பார்க்கவும் உண்ணவும் நல்லதாக இருப்பதால் அதிகம் விலை போகிறது..

ஆனால் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லும் வழிகள் அனைத்தையும் முடிவு செய்த பின் இந்த முறை பின்பற்றுவது நல்லது. ஏனென்றால், பசுமை குடில் முதலீட்டுக்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். விளைபொருட்கள் வாங்குவோர் linkages சரியாக இல்லாமல் கால் விடுவது ரிஸ்க் ஆகும்!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *