வீடுகள் தோறும் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் அசத்தி வருகின்றனர் காரைக்குடி கல்லல் ஒன்றியத்தை சேர்ந்த விசாலயன்கோட்டை கிராமத்தினர்.
காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விசாலயன்கோட்டை, சாத்தம்பத்தி, சன்னவனம். விவசாயம் செழித்த பகுதி. பல ஆண்டுகளாக கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டது. பிழைப்பு தேடி வெளியூருக்கு சென்ற நிலையில், இப்பகுதியை “ரிலையன்ஸ்’ நிறுவனம் தத்தெடுத் தது.
விவசாயிகளை ஒன்று சேர்த்து விவசாய சங்கம் உருவாக வழி வகுத்தது. ரூ.43 ஆயிரத்துக்கு மரக்கன்று நடவு செய்தல், 19.39 லட்சத்துக்கு கண்மாய்களை தூர்வாரியது, ரூ.40.67 லட்சத்துக்கு உரம், விதைகள், சீமை கருவேல மரங்களை சுத்தம் செய்தல், வரப்பு அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டது. விவசாயம் செய்யாதவர்களுக்கு ரூ.6 லட்சத்தில் ஆடு, மாடு, கோழி வழங்கப்பட்டது. வீடுதோறும் தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் தோட்டம் அமைத்து கொடுத்தது. மண்வள பாதுகாப்புக்காக ரூ.2.81 லட்சத்தில் சாண எரிவாயு, மண்புழு தொட்டி, குப்பைக்குழி மண் பரிசோதனை, ரூ.1.5 லட்சத்தில் விவசாய வளமையம் என விசாலயன்கோட்டையை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் ரூ.77 லட்சத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எம்.சேக்கி, விசாலயன்கோட்டை அவர்கள் கூறியது : வீட்டுடன் சேர்ந்த 50 சென்ட் இடம் உள்ளது.
20 ஆண்டாக சும்மா கிடந்த இடத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் காய்கறி விவசாயம் செய்து வருகிறேன். வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்க, ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தொட்டி கட்டி தந்துள்ளனர். அதில், ஆட்டு எரு, மாட்டு சாணம் ஆகியவற்றை போட்டு நிரப்பி வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள அனைவருடைய வீட்டிலும் காய்கறி தோட்டம் உள்ளது.இயற்கை உரம் மூலம் மட்டுமே காய்கறி விவசாயம் செய்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் சொந்த செலவில் போர்வெல் போட்டு வருகின்றனர்.
விசாலயன்கோட்டை விவசாயிகள் சங்க செயலாளர் கே.ஆர்.சொர்ணம் கூறும்போது:
எங்கள் சங்கத்தில் 205 பேர் உறுப்பினர். 75 சதவீதம் பெண்கள். தலைவராக லூர்து மேரி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எங்கள் கிராமத்தை தத்தெடுத்து, விவசாயத்துக்குரிய இடு பொருட்களை இலவசமாக தந்தனர். விவசாயம் செய்யாதவர்களும் அடுத்த ஆண்டு விவசாயம் செய்யும் அளவுக்கு இடங்களை சுத்தம் செய்து வருகின்றனர். நெல் விவசாயமும் இயற்கை முறையிலேயே மேற்கொண்டு வருகிறோம். தற்போது இந்த விவசாயத்தால் ஊர் மக்கள் ஒற்றுமையாகியுள்ளோம், என்றார். : தொடர்புக்கு: 09443183053.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்