சூழல் மாசை கட்டுபடுத்தும் பவழமல்லி

பவளமல்லியின் தாவரப் பெயர் நிக்டாந்தஸ்ஆர்போரடிரிஸ்டிஸ் (Nyctanthes arbortristis). இது ஒரு சிறிய மரமாக 10 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. தாவரப் பெயரில் உள்ள ஆர்போர் என்ற சொல் இதையே சுட்டுகிறது. இதன் இலைகள் கோடைக்காலத்தில் உதிர்ந்துவிடும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம்வரை பொதுவாகப் பூக்கள் உண்டாக்கப்படும்.

பூக்கள் சிறியவை, மயக்கும் மணம் கொண்டவை. மணம் ஏறத்தாழ 100 அடி சுற்றளவுக்கு வீசும். தாவரப் பெயரில் உள்ள நிக்டாந்தஸ் என்ற சொல் சுட்டுவதைப்போன்று, முன்னிரவில் மலரக் கூடியவை. இப்படிப் பிரம்ம முகூர்த்தத்தில் மலர்வதால், இது வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் எனப்படுகிறது.

அல்லி வெண்மை நிறத்தைக் கொண்டிருந்தாலும், அல்லிவட்டக் குழாய் இளம் ஆரஞ்சு நிறம் கொண்டது. சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரத்தில் பூவின் பவள நிறத்தைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

விடிவதற்குள் மரத்திலிருந்து மலர்கள் உதிர்ந்து விடுவதால் பகலில் மரம் அழகற்று, சோகமாகத் திகழும். இதையே தாவரப் பெயரில் உள்ள டிரிஸ்டிஸ் என்ற சொல் சுட்டுகிறது. வாயு புராணம் என்ற நூலில் இதைப் பற்றி ஒரு கதை காணப்படுகிறது. பாரிஜாதகா என்ற ராஜகுமாரி சூரியனின் மேல் காதல் கொண்டாள். சூரியன் அவளை ஏற்காமல் மறுத்து ஒதுக்கியதால், விரக்தியடைந்த அவள் தன்னையே எரித்துக்கொண்டாள். அவளுடைய சாம்பலிலிருந்து பாரிஜாதத் தாவரம் தோன்றியது. அது இரவில் மட்டும் மலர்ந்தது. மலர்கள் சூரியனைப் பார்க்க விரும்பாமல் விடியற்காலையிலேயே உதிர்ந்து, பகலில் சோகமான, களையிழந்த தோற்றத்தை இந்தத் தாவரத்துக்குக் கொடுக்கின்றன.

பவளமல்லி தமிழகத்தில் இயல் நிலையில் காணப்படாவிட்டாலும், கிழக்கு மலைத்தொடரின் ஒடிஸா, தெற்கு சேஷாசலம் மலைவரை ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் இயல்பாக நன்கு வளர்கிறது. மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தின் கிழக்குப் பகுதி போன்ற இடங்களிலும் இது இயல்பாகக் காணப்படுகிறது. இந்தியாவின் இதர பல பகுதிகளில் இது வளர்ப்புத் தாவரமாக உள்ளது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பலப்பல பயன்கள்

ஆன்மிக முக்கியத்துவம் பெற்றது மட்டுமின்றி, பவளமல்லி பல்வேறு பயன்களைத் தருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே அனைத்துச் செல்வங்களும் பெருகும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதன் மணம் மிக்க பூக்களிலிருந்து மல்லிகை எண்ணெய் போன்ற ஒரு நறுமண எண்ணெய் எடுக்கப்பட்டுச் சென்ட், முகப் பவுடர் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. பூவின் ஆரஞ்சு நிற அல்லிக் குழாயிலிருந்து நிக்டாந்தின் என்ற காய்ப்பொருள் எடுக்கப்படுகிறது. இது தனியாகவோ, மஞ்சள் இண்டிகோ அல்லது கேசரிப்பூ சாயங்களோடு ஒன்று சேர்க்கப்பட்டோ சாயமாகப் பயன்படுத்தப்பட்டது.

பருத்தி, டஸ்ஸார் பட்டு ஆடைகள் மட்டுமின்றி, மிதிலா நகர ஓவியங்களில் சாயமேற்றவும் பயன்படுத்தப்பட்டது. ஒடிசாவிலிருந்த புத்தமதத் துறவிகள் தம்முடைய ஆடைகளுக்குச் சாயமேற்ற இதைப் பயன்படுத்தினர். இதன் பூக்கள் எலுமிச்சைப் பழச்சாறு கலக்கப்பட்ட குளிர் அல்லது சூடான நீரில் மூழ்கடிக்கப்பட்டுச் சாயம் பிரிக்கப்பட்டது.

மாசு அகற்றும் தாவரம்

இதன் விதைகளிலிருந்து ஒரு வெளிர் மஞ்சள், பழுப்பு நிற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது ஒடிஸா பழங்குடிகள் விளக்கு எரிக்கவும், சிறுசிறு எந்திரங்கள் உராய்வின்றிச் செயல்படவும் பயன்படுத்தினர். மேலும் இதன் இளம் குச்சிகளைப் பயன்படுத்தி ஒடிஸா பழங்குடி மக்கள் கூடைகள் தயாரித்தனர். பட்டையிலிருந்து டேனின் சாயம் எடுக்கப்பட்டது. மிகவும் சொரசொரப்பான இதன் இலைகள் மரக்கட்டை, தந்தம் போன்றவற்றுக்குப் பாலிஷ் ஏற்ற பயன்படுத்தப்பட்டன.

இதன் விதைகளிலிருந்து ஒரு வெளிர் மஞ்சள், பழுப்பு நிற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது ஒடிஸா பழங்குடிகள் விளக்கு எரிக்கவும், சிறுசிறு எந்திரங்கள் உராய்வின்றிச் செயல்படவும் பயன்படுத்தினர். மேலும் இதன் இளம் குச்சிகளைப் பயன்படுத்தி ஒடிஸா பழங்குடி மக்கள் கூடைகள் தயாரித்தனர். பட்டையிலிருந்து டேனின் சாயம் எடுக்கப்பட்டது. மிகவும் சொரசொரப்பான இதன் இலைகள் மரக்கட்டை, தந்தம் போன்றவற்றுக்குப் பாலிஷ் ஏற்ற பயன்படுத்தப்பட்டன.

காற்று மாசடைதலை, குறிப்பாகத் துகள் மாசு மண்ணில் படியாமல் வடிகட்டுவதற்கு இந்தத் தாவரத் தோட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. இதன் சொரசொரப்பான இலைகள் இந்தத் துகள்களைத் தம்முடைய பரப்பில் பிடித்து வைத்துக்கொள்கின்றன.

நாங்கள் மேற்கொண்ட ஒரு கள ஆய்வின்படி தமிழகத்தில் இரண்டு சிமென்ட் தொழிற்சாலைப் பகுதிகளைச் சுற்றியமைந்த கிராமங்களில் ஆலையின் புகைக் குழாயிலிருந்து வெளியேறும் மாசுத்துகளை மண்ணில் படியாமல் தடுத்து வடிகட்டும் தாவரங்களில் பவளமல்லி மிகச் சிறந்த தாவரமாகத் திகழ்ந்தது.

மருத்துவத் தாவரம்

பவளமல்லி பல மருத்துவப் பண்புகளைக் கொண்ட தாவரமும்கூட. பழங்குடி, ஆயுர்வேத மருத்துவ முறைகள் மட்டுமன்றி அண்மைக்கால ஆய்வுகள் மூலமும் இதன் மருத்துவப் பயன்கள் தெரியவந்துள்ளன.

இலை, தண்டு, பூ, பட்டை, விதை , வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவத் தன்மை கொண்டவை. பித்தம், வாதம், கபம் நீக்கவும், காய்ச்சலைப் போக்கவும், மலமிளக்கியாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், நோய் தடுப்பாற்றல் ஊக்கியாகவும், வலி நிவாரணியாகவும் (குறிப்பாக இடுப்பு மற்றும் முதுகுவலி), தோல் வியாதிகள் நீக்கியாகவும், பூச்சி – பாம்புக்கடி மருந்தாகவும், குடல் புழு கொல்லியாகவும், ஈரல் பாதுகாப்பிலும், சிறுநீரகக் கோளாறு நீக்கியாகவும், வீக்கத் தடையாகவும் இதன் பல்வேறு உறுப்புகளும் அவற்றிலிருந்து பெறப்படும் வேதிப் பொருட்களும் செயல்படுகின்றன.

பழங்குடி மக்கள் இந்த மரத்தின் பட்டையைப் பொடி செய்து வெற்றிலைப் பாக்குடன் சேர்த்துத் தொண்டைக் கபத்தையும் சளியையும் நீக்கப் பயன்படுத்துகிறார்கள். மேலும், இஞ்சியோடு சேர்த்து அரைக்கப்பட்ட கொழுந்து இலைகளை உண்டு, காய்ச்சலைப் போக்கிக்கொள்கிறார்கள். ஆயுர்வேத அறிஞர் சக்கர தத்தாவின் படைப்புகளில் இதன் வலி போக்கும் மருத்துவத் தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் உள்ளன. Arthiritis போன்ற நோய்களுக்கு இந்த தாவரத்தின் 4-5 இலைகளை நீரில் கொதிக்க வைத்து நீரை குடித்தால் நிச்சியம் பலன் இருக்கும்.

இப்படியாக மருத்துவ, சூழலியல், ஆன்மிகப் பண்புகள் நிறைந்த இந்தத் தாவரத்தை மக்கள் அதிக அளவில் தம்முடைய வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்துப் பயனடைய வேண்டும்.

– கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்,
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *