தில்லியில் காற்று நிலைமை படு மோசம்

இந்தியத் தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக இந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சக நோய்கள் வரக்கூடும் என்று தேரி எனப்படும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்ட்டிடியூட் (TERI) தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள மந்திர் மார்க், ஆர்.கே. புரம், பஞ்சாபி பாக், ஆனந்த் விஹார் ஆகிய நான்கு இடங்களில் 24 மணி நேரம் அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

delhipollution

இது தொடர்பாக தேரி வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31ஆம் தேதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் காற்றை மாசுபடுத்தும் முக்கியக் காரணிகளான பிஎம் டென் (PM10), பிஎம் 2.5 (PM2.5), நைட்ரஜன் ஆக்ஸைட் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் மாசுபாட்டைக் குறைப்பதற்காக, நேற்று (ஜனவரி 1) முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நாளில் ஒற்றை இலக்கக் கார்களும் மற்றொரு நாளில் இரட்டை இலக்கக் கார்களும் ஓடும் திட்டத்தின் பயன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அறியும் நோக்கத்திலேயே இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஜனவரி 20ஆம் தேதிவரை இந்த ஆய்வு செய்யப்படும் என்றும் இதன்மூலம் இந்தத் திட்டத்திற்கு பலன் இருக்கிறதா என்பது ஆராயப்படும் என்றும் தேரி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

delhipollution1

ஆனால், தில்லியில் மாசுபாட்டைக் குறைக்க வேண்டுமானால் வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், பஞ்சாபில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தில்லியில் எஞ்சியிருக்கும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இந்த மாசுபாடு பிரச்சனைக்குக் காரணம் என்கிறார்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, விவசாயக் கழிவுகளை உரமாக்கவது ஆகிவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சுந்தர்ராஜன்.

விரைவிலேயே இந்தியாவின் பிற பெருநகரங்களும் வாழ்வதற்குத் தகுதியற்ற நகரங்களாகக்கூடும் என்கிறார் அவர்.

delhipollution2

சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள் கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் அவை ஒரளவு கார்பன் மாசை உள்ளிழுத்துக்கொள்வதாகவும் விரைவிலேயே அந்த நிலை மாறலாம் என்கிறார் சுந்தர்ராஜன்.

தில்லியைப் பொறுத்தவரை, ஆனந்த் விஹார் பகுதியில் மற்ற இடங்களைவிட மாசுபாடு அதிகம் இருப்பது அறியப்பட்டிருக்கிறது.

இதற்கு வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை தவிர பிற காரணிகளும் இருக்கின்றன என தேரி கூறியுள்ளது. சாலையிலிருந்து எழும் தூசி, கட்டட இடிபாடுகளிலிருந்து கிளம்பும் துகள்கள் ஆகியவை இதற்குக் காரணம் என தேரி அமைப்பு கூறுகிறது.

நன்றி: ஹிந்து/பீபீசீ


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *